செவ்வாய், 23 அக்டோபர், 2012

மத்திய கால இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள்


இக்கட்டுரை ஹி.4ம், 5ம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்ற இரண்டு முக்கியமான ஆளுமைகள் பற்றியும் சமூக சிந்தனை மாற்றத்தில் அவர்களது வகிபாகம் பற்றியும் சுருக்கமாக ஆய்வு செய்கிறது.
கால மாற்றத்துக்கேற்ப எழுகின்ற சவால்களுக்கு அமையவே அக்காலத்தில் தோற்றம் பெறும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனைப் போக்கும் அமைவதுண்டு. அந்த வகையில் ஹி.4ம், 5ம், 6ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் உலகுக்கெதிராக தோன்றிய சவால்களாக கீழ்வருவனவற்றை வரையறுக்க முடியும்.


           மத்ஹப் முரண்பாடுகள்
           சூபித்துவ வழிபிறழ்வுகள்
           பாதினீக்களின் தோற்றமும் விளைவும்
           தத்துவக்கலை ஏற்படுத்திய சவால்கள்
           சிந்தனைக் குழப்பமும் அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும்  மன்னர்களின் கெடுபிடிகளால் சமூக வாழ்வு சீர்குலைதல்

           மேற்சொன்ன சவால்களை சந்தர்ப்பமாகக் கொண்டு சிலுவை வீரர்கள் இஸ்லாமிய உலகை நோக்கிப் படையெடுத்திருந்தமை.
இத்தகைய சவால்கள் நிறைந்த காலப் பகுதியில்தான் இருபெரும் ஆளுமைகள் இஸ்லாமிய உலகில் தோன்றினார்கள்.

1.         இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (ஹி. 450-505)
2.         அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) (ஹி.470-563)

1. இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களும் சீர்திருத்தப் பணியும்

இவரின் சமகாலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இமாம் ஜுவைனி, அபூ இஸ்ஹாக் அஷ்- ஷிராஸி, அபுல் காலிம் அல்-குஷைரி, அபூ அலி அல்-பர்னதி ஆகியோர் கலீபா நிளாம் அல்முல்க் ஸ்தாபித்த நிளாமிய்யா பல்ககைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
இக்காலப் பகுதியில் இமாம் கஸ்ஸாலி பற்றி அறிந்து கொண்ட கலீபா நிளாம், நிளாமிய்யாவில் இணைந்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார். அன்றிலிருந்து அவரின் பணி துரிதமடைந்தது. ஆனாலும் சில வருடங்கள் பணியாற்றிய அவர் அன்று செல்வச் செழிப்பில் மூழ்கி அநியாயத்தில் மூழ்கியிருந்த சமூகத்தைக் கண்டு மனம் வருந்தி கற்பித்தல் பணியிலிருந்து விலகி 10 வருடங்கள் சூபித்துவ வாழ்வு வாழ்ந்தார்.
இதன் பின்னரான அவரின் வாழ்வே ஒரு புதிய பாதையை அவருக்குக் காண்பித்தது. விளைவாக அவர் பெரும் சீர்திருத்தவாதியாக மாறினார். இப்பீடிகையுடன் அவரின் சீர்திருத்தப் பணி குறித்து சுருக்கமாக நோக்குவோம்.
இமாமவர்கள் தமது பணியை ஆரம்பிக்க முன்னரே சில சமூக சிந்தனையாளர்கள் அகீதாவில் தெளிவை ஏற்படுத்துதல், அரசியல் மாற்றங்களை உண்டுபண்ணுதல் போன்ற அம்சங்களை இலக்காகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தனர். காலத்தின் தேவை கருதி இமாமவர்களது இலக்காகவும் இவ்வம்சங்களே மாறின.
உலகை நோக்காகக் கொண்டு வாழ்ந்த உலமாக்களின் சிந்தனைப் போக்கை மாற்றுவதை இமாமவர்கள் தனது முதற் பணியாகக் கொண்டார்கள். உலமாக்களை நோக்கி இமாம் பேசிய ஒரு கருத்தை மாத்திரம் இங்கே குறிப்பிடுகிறோம். அழிவு தரும் நோய் எனும்போது அது உலக ஆசைதான். இந்நோய் வைத்தியர்களுக்குத்தான் அதிகம் ஏற்பட்டுள்ளது. உங்களை மறந்துவிட்டு சிகிச்சைக்கான வழிமுறையை எங்களுக்குச் சொல்ல வருகிறீர்களே! என்று மக்கள் தம்மிடம் கேட்டு விடுவார்கள் என்ற வெட்கத்தினால் இந்நோயிலிருந்து அவர்களை எச்சரிக்கவும் சக்தியிழந்திருந்தார்கள். இதன் காரணமாக நோய் பரவி வைத்தியர்களை இழந்ததனால் மக்களும் அழிந்து போயினர். மக்களை ஏமாற்றும் ககைளில்தான் வைத்தியர்கள் ஈடுபாடு காட்டினர். உபதேசம் செய்யாவிட்டாலும் குழப்பமாவது ஏற்படுத்தாமல் இருக்கக் கூடாதா! பேசாமல் மௌனமாகவே அவர்கள் இருந்திருக்க வேண்டுமே. இது போன்ற பல கருத்துக்கள் இஹ்யாஉ உலூமித் தீனில் இடம்பெற்றிருக்கின்றன. அத்தோடு,
           கற்பித்தல், பயிற்றுவித்தலுக்கான புதிய பாட விதானங்களை அமைத்தல்
           நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதற்கான முயற்சியைத் துரிதப்படுத்தல்
           அநியாயக்கார அரசர்களுக்கெதிராக போராட்டம் நிகழ்த்துதல்
           சமூக நீதிக்காக அழைப்பு விடுத்தல்
           வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளை எதிர்த்தல் போன்ற முக்கியமாக பல பணிகளையும் மேற்கொண்டார்கள்.



2. இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் சமூக மாற்றப் பணி

அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலி அந்நத்வி (ரஹ்) அவர்கள், இமாம் கஸ்ஸாலியின் சிந்தனையின் விளைவாக முஸ்லிம் சமூகத்தில் பாரிய விழிப்புணர்வு ஏற்பட்டது என்றாலும் நிரப்பப்பட வேண்டிய பாரிய இடைவெளிகள் தொடர்ந்தும் இருந்தன. இவ்வேளை இன்னுமொரு ஆளுமையின் தேவையை சமூகம் உணர்ந்தது. அப்போதுதான் இப்பாரிய ஆளுமை தோன்றியது என இமாம் அப்துல் காதிர் ஜீலானி குறித்து குறிப்பிடுகிறார்கள்.
இமாம் கஸ்ஸாலியின் சிந்தனைகள் இயல்பிலேயே மார்க்க உணர்வும் பற்றும் கொண்டிருந்த இமாம் அப்துல் காதிரிலும் பாரிய தாக்கங்களை உண்டுபண்ணின. இரு இமாம்களதும் இலக்குகளும் ஒன்றாகவே அமைந்திருந்தமையால் இருவரது சிந்தனைகளும் கருத்துக்களும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருப்பதனை அவதானிக்க முடியும். இஹ்யாஉ உலூமுத்தீன் போலவே அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் எழுதிய அல்-குன்யது லிதாலிபீ தரீகில் ஹக் என்ற நூலும் அமைந்திருக்கின்றமை இதற்கு ஆதாரமாக அமைகிறது.
ஹி. 521ல் தனது பணியை ஆரம்பித்த இமாமவர்கள் முதலில் சிறிய கல்விக் கூடம் ஒன்றை அமைத்தார்கள். பின்னர் தேவை கருதி பாரிய தியாகங்களுக்கு மத்தியில் ஹி.528ல் இக்கல்விக்கூடத்தை விசாலிக்கும் பணியை நிறைவு செய்தார்கள். பின்னர் முழு உலகையும் இஸ்லாத்திற்காக பணி புரிய அழைப்பு விடுத்தார்கள்.
உலகத்தாரே! முஹம்மத் (ஸல்) அவர்களது மார்க்கத்தின் சுவர்கள் படிப்படியாக வீழ்கின்றன. அதனது அத்திபாரமும் சிதறிப் போகிறது. தகர்ந்து போனதைக் கட்டியெழுப்புவோம், வீழ்ந்து போனதை மீண்டும் நிறுவுவோம். வாருங்கள். இது பூரணப்பட வேண்டிய பணி. சூரியனே! சந்திரனே! பகலே வாருங்கள்.
இவ்வாறு விடுக்கப்பட்ட அழைப்பை நோக்கி 70,000க்கும் அதிகமானோர் இமாமவர்களது பாசறையில் ஒன்று கூடினார்கள்.
இமாமவர்கள், உலமாக்கள் மறுமையை மறந்திருந்ததைப் பார்த்து, மறுமைக்கான பாதையில் வீற்றிருக்கும் உலகத்துக் கொள்ளையர்களே! சத்தியத்தை அறியாதவர்களே! பொதுமக்களுக்கு நீங்கள் செய்த அநியாயத்துக்கு அவசியம் தௌபா செய்ய வேண்டும். அவர்களுக்கு இழைத்த குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களிடம் எந்த நன்மையும் கிடையாது என்று கூறி எச்சரித்தார்கள்.
இன்னுமொரு கருத்தில் உலகம் கரங்களில் இருக்க முடியும். சட்டைப் பையினுள் இருக்க முடியும். நல்லெண்ணத்துடன் அதனை சேமிக்கவும் முடியும். ஆனால், உள்ளத்தில் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்கள். அத்துடன் அரசியல் தளத்திலும் அநியாயக்கார அரகளுக்கெதிராக சுவரொட்டிகளையும் பதாதைகளையும் ஏந்தினார்கள். வறுமை ஒழிப்புக்காக பாரியதொரு பணியை நிகழ்த்தினார்கள். அயராத முயற்சியில் இறுதி மூச்சுவரை ஈடுபட்டிருந்தார்கள்.

மாற்றத்தை நோக்கி முஸ்லிம் உம்மா
இக்கட்டுரையின் இறுதிப் பகுதி இரு இமாம்களது இணையற்ற பணியின் விளைவாக முஸ்லிம் உம்மாவில் ஏற்பட்ட எழுச்சி குறித்து சுருக்கமாக ஆராய்கிறது.
அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் கல்வி, அரசியல், சமூகவியல், இராணுவம் போன்ற பல துறைகளிலும் ஆன்மீக ரீதியில் பயிற்றப்பட்ட தவைர்கள் உருவாகியமையை முதலாவது பெரும் விளைவாகக் கொள்ள முடியும்.
இப்னு நஜா அல் வாஇழ், அல்-ஹாபிழ் அர்-ரஹாவி, அப்துல் காதிர் ஜீலானியின் மகன் மூஸா மற்றும் இமாம் இப்னு குதாமா போன்ற பெரும் அறிஞர்கள் தோற்றம் பெற்றமை கல்வித் துறை கண்ட முன்னேற்றமாகும். அதுபோலவே நன்கு பயிற்றப்பட்ட ஆன்மீகத் தவைர்கள் தத்தமது பிரதேசங்களில் கல்விப் பாசறைகளை உருவாக்கி பணிபுரிந்தார்கள். கல்வி மற்றும் பயிற்றுவித்தல் துறை கண்ட மிகப் பெரிய அடைவாக இது அமைகிறது.
இந்த வகையில்,
1.         அதவிய்யா - அஷ்ஷெய்க் அதீ பின் முஸாபிர் (சிரியா-திமிஷ்க்)
2.         அஸ்ஸஹ்ரவர்தியா - அஷ்ஷெய்க் அபுந் நஜீப் அப்துல் காஹிர் அஸ்ஸஹ்ரவர்தீ (ஈராக்)
3.         பயானிய்யா - அஷ்ஷெய்க் அபுல் பயான் (திமிஷ்க்)
4.         மத்ரஸதுஷ் ஷெய்க் ரஸ்லான் அல்-ஜஃபரி (திமிஷ்க்)
5.         மத்ரஸது ஹயாது பின் கைஸ் அல்-ஹரானி (சிரியா)
போன்ற 20க்கும் மேற்பட்ட பாசறைகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.
அரசியல் தளத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்த இமாம்களிருவரும் மன்னர்களை அணுகி அவர்களுக்குப் போதனைகள் வழங்குவதிலும் ஆலோசனை வழங்குவதிலும் முனைப்புடன் ஈடுபட்டார்கள்.
இமாம் கஸ்ஸாலி அவர்கள், அவரது காலத்தில் பலம் பெற்றிருந்த மன்னர்களான யூசுப் பின் தாஷ்பீன், முஹம்மத் பின் தோமூர்த் ஆகியோரை அணுகி இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்குமாறு தூண்டுதல் அளித்தார்கள். மன்னர்களின் நியமனம் குறித்துக் கூட இமாம் கஸ்ஸாலியிடம் ஆலோசனை பெறப்பட்டது. அதேபோல் இமாம் அப்துல் காதர் அவர்கள் தமது பாசறைக்கு பொதுமக்களும் கல்விமான்களும் அரசர்களும் பல்வேறு தேசங்களில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். 400 பெரும் அறிஞர்களும் இமாமவர்களது பாசறையில் இருந்தமை குறிப்பிட்டுக் கூற வேண்டிய அம்சமாகும். இனி முக்கியமானதோர் விளைவு குறித்து நோக்குவோம்.
கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லிம் உலகுக்கெதிராக தோன்றிய முக்கிய சவால்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவற்றுள் சிலுவை வீரர்களின் படையெடுப்பே மிகப் பெரிய சவாலாக இருந்தது. சிலுவை வீரர்களின் இஸ்லாமிய உலகை நோக்கிய நகர்வை ஜிஹாத் புரிந்து பின்வாங்கச் செய்யும் அளவுக்கு முஸ்லிம் உலகு அகீதா ரீதியாக அன்று பலம் பெற்றிருக்கவில்லை. இப் பின்னணியே இரு இமாம்களும் அகீதாவை சீர்திருத்தும் பணியை இலக்காகக் கொண்டமைக்கான காரணமாகும்.
இமாம்களின் இம்முயற்சியே ஆக் ஸன்கர் (ஹி.477), இமாதுத்தீன் ஸன்கீ, நூருத்தீன் ஸன்கீ, பிக்ஹ் மற்றும் ஹதீஸ் கலை அறிஞர் அல்- ஹாபிழ் ஸலாஹுத்தீன் அய்யூபி போன்ற தளபதிகளின் வெற்றிக்குப் பின்னால் மறைந்திருந்தது. ஏனெனில், குறிப்பாக நூருத்தீன் மற்றும் ஸலாஹுத்தீன் படைகளில் ஆலோசகர்களாக, படை வீரர்களாக பணியாற்றியோர் இவ்விரு இமாம்களின் பாசறையில் பயிற்றப்பட்டவர்களே.
கி.பி. 1098 (ஹி.492)ல் ஆக்கிரமிக்கப்பட்ட குத்ஸை ஹி.570 காலப்பகுதியில் ஒரு நூற்றாண்டுக்குள்ளாலேயே சிலுவை வீரர்களிடம் இருந்து மீட்டெடுத்த ஸலாஹுத்தீன் தனது ஆலோசகராக இருந்த அல்-காழி அப்துர் ரஹீம் பின் அலி குறித்து நான் இத்தேசத்தை எனது வாளினால் வெற்றி பெறவில்லை. நிச்சயமாக அல்காழி அவர்களது ஆலோசனையினாலேயே வெற்றி பெற்றேன். அவர் தனது அரசியல் சாணக்கியத்துடன் மிகுந்த பேணுதல் உள்ளவராக இருந்தார். அதிகமாக நோன்பு நோற்பவராகவும் தொழுபவராகவும் குர்ஆன் ஓதுபவராகவும் இருந்தார். பணிவுள்ளவராகவும் நோயாளிகளைத் தரிசிப்பவராகவும் ஏழைகளுக்கு உதவி புரிபவராகவும் இருந்தார் என்று குறிப்பிடுவதன் மூலம் எத்தகைய ஆளுமைகள் அப்பாசறையில் உருப்பெற்றிருக்கின்றன என்பதை ஊகிக்க முடிகிறது.
எனவேதான் நேற்றைய கனவுகள் இன்றைய யதார்த்தங்கள் என்று இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) குறிப்பிடுவது போல இரு இமாம்களின் பணி, முஸ்லிம் சமூகத்தை ஈற்றில் வெற்றிப் பாதைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. மட்டுமன்றி, புதிய பரம்பரையொன்றையும் உருவாக்கியது.
உண்மையில் இன்றைய 21ம் நூற்றாண்டின் பேசுபொருளாக மாறியிருக்கும் இஸ்லாம் கிட்டிய எதிர்காலத்துக்குள் சர்வதேச தலைமை பீடத்தை ஏற்க வேண்டுமெனின் இமாம் கஸ்ஸாலி, இமாம் அப்துல் காதிர் ஜீலானி போன்ற இமாம்களின் பணியையும் தியாகத்தையும் செய்பவர்களாக எமது அறிஞர்களும் தவைர்களும் மாற வேண்டும். பிற்கால சமூகத்தை வழி நடத்தும் தவைர்களையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கும் பணியில் முழு முஸ்லிம் உம்மாவும் மிக வினயமாக ஈடுபட வேண்டும்.
அல்-குர்ஆனினதும் நபி (ஸல்) அவர்களது போதனைகளையும் கடைப்பிடித்து வாழும் மனிதர்கள் நிறைந்த தூய தேசமொன்றை உருவாக்க வேண்டும். அப்போதுதான் எமது இன்றைய கனவுகள் நாளை யதார்த்தங்களாய் மாறும் எனும் யதார்த்தத்தை இதனூடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக