ஞாயிறு, 11 டிசம்பர், 2011

இப்படியும் மனிதர்கள்!

எனது வீட்டுக்கு அருகில் பராமரிக்கப்படாத ஒரு காணி உண்டு. இதன் வேலிக்கு நடப்பட்டிருந்த இரண்டு பஞ்சு மரங்கள் வானளாவ வளர்ந்திருந்தன. அத்துடன் இவற்றின் கிளைகள், எனது வீட்டுக் கூரைக்கு மேலாக படர்ந்து, எந்த நேரம் வீட்டைப் பதம் பார்த்து விடுமோ என அஞ்சுமளவுக்கு கிளைகளைப் பரப்பியிருந்தன. போதாக் குறைக்கு, ஒரு மரத்தின் தண்டின் அடிப்பாகம் உக்கியும் போயிருந்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தென் மாகாணப் பகுதிகளில் வீசிய கடுங்காற்றின் தாக்கத்தினால் பலர் இறந்தும், பல வீடுகள் சேதமடைந்தும் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது. இந்தக் காற்று நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என அஞ்சப்பட்டதால், இந்த இரண்டு பஞ்சு மரங்களும் எங்களுக்கு பெரும் திகிலை ஏற்படுத்தியிருந்தன.

வேலியில் இருந்த மரமாயினும், பக்கத்து காணிக்காரரின் முயற்சியால் நடப்பட்டவை என்பதால், 'அவர்களிடம் சொல்லியே வெட்ட வைப்போம்' என்று நல்லெண்ணம் கொண்டு, விடயத்தை முன்வைத்தோம். அவர்களோ, நீங்களே 'வெட்டிக் கொள்ளுங்கள்' என்று இலகுவாகச் சொல்லி விட்டார்கள். 

அவர்களது நன்மைக்காக நட்டினார்கள். எங்கள் வீட்டுக்கு ஆபத்தாக அது மாறுகிறது. இப்போது, இலகுவாக பொறுப்பிலிருந்து கழன்று கொள்கிறார்கள்.

எப்படியோ, 'எங்கள் வீட்டை நாங்களல்லவா பாதுகாக்க வேண்டும்' என்று நினைத்து, மரம் வெட்டும் ஒருவருக்கு 'கன்ட்ரக்ட்' கொடுத்தோம். அவரோ 2000 ரூபாவுக்கு வேலையை முடித்துத் தருவதாகக் கூறினார்.

இதனைக் கேட்டவுடன் எனக்கு எரிச்சல்! யார், யாரோ ஆபத்தை விதைப்பார்கள்; அதற்கு நாம் நஷ்ட ஈடு கொடுப்பதா? கடவுளே, என்ன கொடுமையடா  இது?! 

எப்படியோ, பலவிதமான உணர்வலைகளுக்கு மத்தியில், 2000 ரூபா கொடுத்து வேலையை முடித்தோம்.

அன்று மாலை, குறித்த காணி உரிமையாளரை பள்ளியில் சந்திக்க நேர்ந்த போது விபரத்தைக் கூறினேன். " ஐயோ, கூலி கொடுத்து செய்யும் வேலை என்று தெரிந்திருந்தால், நானே அதனை 'கன்ட்ராக்ட்' எடுத்திருப்பேனே"  என்று கூறினாரே பாருங்கள்! 

என்னே உழைப்பு! என்னே மனித நேயம்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக