வியாழன், 7 ஜூன், 2012

‘மகாவம்சம்’ உருவான வரலாறு !

எமது பாடசாலை வரலாற்றுப் புத்தகங்களில் இலங்கை வரலாற்றுக்கு மூல நூலாக இருப்பது தீபவம்சம் , மகாவம்சம் மற்றும் சூழவம்சம் போன்ற பாலி பௌத்த வரலாற்று நூல்களாகும்.
எமது உண்மை வரலாறுகளை மறந்து, வேத நூற்கள் போன்று இந்த நூற்களிலுள்ள வராலாற்றுக் கருத்துக்களை மக்களுக்குப் போதிக்கிறோம்.
 அவைகளிலுள்ள வரலாற்றுத் திரிபுகள் என்ன என்பதை நாம் ஆராய்ந்து மாணவர்களுக்கு தெளிவுடன் கற்பிப்போமென்றால், ஒரு அறிவுத் தெளிவுள்ள ஒரு சமூகத்தையே நாம் உருவாக்கலாம்.
 ஆனாலும் அதற்கு மகாவம்ச நூல் பற்றிய ஒரு வரலாற்று அறிவு மிக முக்கியம். 
ஆய்வாளர் குணராசாவின் மகாவம்சம் பற்றிய ஆய்வை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரை ஒரு தெளிவைத்தரும் என்பது எமது எதிர்பார்ப்பு.

“முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது, அது எப்போது எவரால் எழுதப்பட்டது, அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளவை எவை? ”- என்பவை குறித்து நாம் அறிந்து கொள்வது சற்று தெளிவைத் தரக்கூடும்.

இலங்கைத் தீவின் வரலாற்றை விபரிக்கின்ற வரலாற்று நூல் ஆவணங்களில், முதன்மையாகத் திகழ்வது மகாவம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், மகாவம்சம் இலங்கை வரலாற்றினைச் சிலவிடத்து நம்பகத்தன்மையோடும், பலவிடத்து நம்பகமற்றதாகவும் விபரிக்கின்றது – என்று கலாநிதி க.குணராசா குறிப்பிடுகின்றார். 
மகாவம்சம் குறித்துக் கலாநிதி க.குணராசா எழுதிய ஆய்வு நூலையும், அதற்கு உதவிய சில உசாத்துணை நூல்களையும் நாம் நன்றியுடன் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றோம். பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன.

மகாவம்சம் பாளி மொழியில், செய்யுள் வடிவில் பாடப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தீவிற்குப் பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும், இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது.

மகாவம்சம் விபரிக்கின்ற மூலக்கதைகளைக் கூறாமலேயே, மகாவம்சம் கூறுகின்ற இலங்கை வரலாற்றை அறிய முடியும். 
சிங்கள இனத்திற்கு அவமானம் தருகிற சம்பவங்கள் என்று கருதி, பலர் சில மூலக் கதைகளைத் தவிர்த்தும், பதுக்கியும், ஏன் திரித்தும் கூட எழுத ஆரம்பித்திருக்கின்றார்கள். 
 மகாவம்சம் சொல்வதை ஏற்பதும், ஏற்காமல் போவதும் வேறு விடயமாகும். ஆனால், மகாவம்சத்தின் புனிதத்தன்மையைக் கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பலர் ஏற்கனவே உள்ள மகாவம்சத்தை, புதுப்பிக்க முற்படும் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கையின் வரலாறு குறித்துப் பேசுகின்ற மகாவம்சத்தின் வரலாறு என்ன என்பது குறித்து முதலில் கவனிப்போம்.

இலங்கையில் பௌத்த மதம் பரவி, நிலை பெற்ற காலத்தில் பௌத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த பௌத்த பிக்குகள் சமய மரபுகள் குறித்தும், மன்னர்களின் வரலாற்றுக் கதைகள், அவர்களது பணிகள் குறித்தும் ஏடுகளில் எழுதியதோடு மட்டுமல்லாது, வாய்மொழி மூலமாகவும் பேணி வந்தார்கள். இவை காலம் காலமாகப் பேணப்பட்டு வந்ததோடு, “அட்டகதா” என்று அழைக்கப்பட்டும் வந்தன. இவ்வாறு பல்வேறு பௌத்த விகாரைகளில் பேணப்பட்டு வந்த ‘அட்டகதாக்கள்’, ஒரு கட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு ‘அட்டகதா-மகாவம்சம்’ என்று அழைக்கப்படலானது.

‘அட்டகதா-மகாவம்சத்தின்’ ஏட்டுப்பிரதிகளைத் தழுவிப் பின்னாளில் தீபவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது. கிறிஸ்துவுக்குப் பின் நான்காம் நூற்றாண்டளவில்தான் தீபவம்சம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். தீபவம்சத்தின் ஆசிரியர் யார் என்று அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. காலத்திற்குக் காலம் பல பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட செய்யுள்களை ஒருங்கிணைத்துத்தான் ‘தீபவம்சம்’ முழுமை பெற்றிருக்கக் கூடும்.

இந்தத் தீபவம்சம் என்கின்ற நூலில் இருந்துதான், தற்போதைய மகாவம்சம் என்கின்ற நூல் உருவாகியுள்ளது. தீபவம்சத்தை மீள் ஒழுங்கு செய்ததுதான் மகாவம்சம் என்று பிளீற் (குடுநுநுவு) கூறுவார்.

இன்னொரு வகையில் சொல்லப் போனால் ‘தீபவம்சம் என்கின்ற நூலின் மிகத்திருத்தமான வடிவமே மகாவம்சம்’ என்றும் கூறலாம்.

இவ்வாறு பல பௌத்த பிக்குகள் காலம் காலமாக, ஏடுகள் ஊடாகவும், வாய்மொழி ஊடாகவும் பேணி வந்த செய்யுள்கள் ‘அட்டகதா’ என்றும், பின்னர் ‘அட்டகதா-மகாவம்சம்’ என்றும் அதன் பின்னர் ‘தீபவம்சம்’ என்றும், ஈற்றில் ‘மகாவம்சம்’ என்றும் ஒருங்கிணைக்கப்பட்டு மீள் ஒழுங்கு செய்யப்பட்டன. 
மீள் ஒழுங்கைச் செய்து மகாவம்சத்தை உருவாக்கியவர் மகாநாம தேரர் என்று சில ஆய்வாளர்கள் கருதுவார்கள். மகாநாம தேரர்தான் மகாவம்சத்தின் மூல ஆசிரியர் எனக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கருதுகின்ற ஆய்வாளர்களும் உண்டு. இது ‘மகாவம்சம்’ என்கின்ற வரலாற்று நூல் உருவான வரலாறு ஆகும்.! 
நன்றி WWW.TANTURE.TK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக