திங்கள், 18 ஜூன், 2012

உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளைக் கொடுத்த இறைவனுக்கு, இயற்கைக்கு நன்றி! ஏனென்றால், அவர்கள் நம் வாழ்வினைச் சந்தோசமாக்க குதூகலமாக்க வந்தவர்கள்! நம் சந்ததியை விருத்தி செய்ய வந்தவர்கள்! அவர்கள் தான் குடும்பத்தில் இணைப்புப் பாலங் கள். நம்மின் மறுபதிப்பு! நம் வாழ்வுத் தோட்டத்தில் பூத்த இனிய புது மலர்கள்!


இந்த உலகத்துக்கு அவர்கள் வந்தபோது ஓர் இனந் தெரியாக பூரிப்பை நமக்குக் கொடுத்தவர்கள்!

இதனால்தான் அல்குர்ஆன் குழந்தைகளைத் தனது பாஷையில் "உலகில் மகிழ்ச்சியைத் தரக்கூடிய அலங்காரங்கள்" என வர்ணித்துப் பேசுகின்றது.

அவர்கள் வாழ்க!

அவர்கள் இந்த வாழ்க்கை யில் ஜெயிப்பதற்கும், பண்பில் உயர்ந்து விளங்குவதற்கும், கல்வியில் உயர்வதற்கும் பெற்றோர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். அதில் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கே உண்டு.

"ஒரு பிள்ளைக்கு நல்லொழுக்கங்களையும் நல்லறங்களையும் விடச் சிறந்ததொன்றை ஒரு தந்தை கொடுப்பதற்கில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே”

என்று புறநானூறும்,

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்”

என்று வள்ளுவரும் கூறியுள்ளனர்.


(பொருள் : கற்றவர் கூடிய அவையில் எல்லோருக்கும் முன்னவனாக இருக்கத் தக்க வகையில் தம் மகனைக் கல்வியில் மேம்பட்டவனாக்குவதே தந்தை தன் மகனுக்குச் செய்யும்  பேருதவியாகும்)

இக்காலகட்டம் ஒரு சிக்கலுக்குரியதாக உள்ளது. பழமையும், புதுமையும் சங்கமமாகிறது. கீழை நாட்டுப் பாரம்பரியமும், மேலை நாட்டுப் பாரம்பரியமும் நம் வாழ்வில் ஊடுருவி உள்ளன. தகவல் தொடர்பின் வளர்ச்சியால் உலகம் சுருங்கி ஒரு கிராமம் என்பதையும் தாண்டி பூகோலக் குடும்பம் என்ற நிலைக்கு ஆகிவிட்டது. எல்லாக் கலாசாரங்களும் எல்லா இடங்களிலும் விரவி நிற்கின்றன. இது ஒருபுறம்,

போட்டிகள் எல்லாத் துறைகளிலும் பெருகி வரு கின்றன (Struggle for existence - The fittest will survive)

“வாழ்வினுக்காகப் போராட்டம்

வலிவுள்ளது வாழும்”

-என்ற காலகட்டம் ஒருபுறம்

கல்வியிலும், தொழிலிலும் மாபெரும் வளர்ச்சி - விரைந்து வந்து கொண்டுள்ளது. இதற்கு ஈடு கொடுக்க இன்றைய இளந் தலைமுறையினர் தயாராக வேண்டும். ஆகவே இந்தச் சூழ்நிலையில்

1.    குழந்தைகளை, பண்பில் - குணங்களில் - சிறந்தவர்களாக ஆக்குவது எப்படி?

2.    கல்வியில் சிறந்து, நல்ல தொழிலுக்கும் சென்று வெற்றி அடையச் செய்வது எப்படி?
 
   அன்பும், பண்பும், அறிவும், திறமையும் உள்ள முழுமனிதனாக உருவாக்கு வது எப்படி?

என்பது பெற்றோர்கள் முன்னுள்ள சவால்கள் ஆகும்.

பெற்றோரின் கடமைகள்

1.    “குழந்தைகளை முழுமையாக வளர்த்து உருவாக்குதல்” (உடல், மூளை & மனம்) என்ற பொறுப்பினை, பங்கினைப் புரிந்து ஏற்றுக் கொள்ளல்.

2. குழந்தைகளுடன் மாறாத அன்புப் பிணைப்பினை, உறவினை, உருவாக்குதல்

(Creating unconditioned love)

3.   குழந்தைகளிடம் மறைந்துள்ள மாபெரும் ஆற்றலை - திறமையை வளர்த்து - ஊக்குவித்து வெளிப்படுத்த வைத்தல்.

4. அவர்களின் வாழ்வில் சந்தோசம் பெறவைத்தல் - நல்வழியில் வாழவைத்தல் -

வாழ்வில் முழு வெற்றியடையத் துணைபுரிதல்.
குழந்தைகளை, அடிப்படையாக
இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1.    Forced discipline - Disciplined out of fear by punishment. திணிக்கப்பட்ட - பயத்தால் - தண்டனைக்குப் பயந்து - ஒழுங்குத் தன்மை உருவாக்கப் பட்ட குழந்தைகள்.

2.    Co-operative children ஏற்க வைக்கப்பட்டு - உணர வைக்கப்பட்டு - ஒத்துழைப் புடன் ஒழுங்குத் தன்மை உருவாக்கப்பட்ட குழந்தைகள்.

இந்த இரண்டாம் வகை தன்மையான குழந்தைகளை உருவாக்குவது நம்முடைய கடமை.

பெற்றோர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1.    Hard Love- தீவிர - முரட்டுத் தனமான அன்பு செலுத்தும் பெற்றோர்.

2.    Soft Love- மென்மையான அன்பு - அடிபணியும் அன்பு செலுத்தும் பெற்றோர்.

3.    Assertive - Guiding - Leading - பக்குவமான உணரவைக்கும் - ஏற்க வைக்கும் - வழி நடத்தும் அன்பு செலுத்தும் பெற்றோர்.

இதில், பெற்றோர் மூன்றாம் வகையினராக இருத்தல் வேண்டும். அவர்கள் மலராகவும் இருக்க வேண்டும், முள்ளாகவும் இருக்க வேண்டும். முழுமையான அன்பு செலுத்தி ஆதரவளித்து மலராக இருக்க வேண்டும். எல்லைகளை மீறும் பொழுது சொல்லி, விளக்கி உணர வைத்ததற்குப் பின்னரும் மீண்டும் கட்டுப்பாடற்று செல்லும் பொழுது முள் போல் கண்டிப்பாய் இருந்து சரிசெய்ய வேண்டும். வழிநடத்துதல் வேண்டும். இக்காலக் குழந்தைகளிடம் உரையாற்றக்கூடாது உரையாடுதல் செய்தல் வேண்டும்.

மற்றவர்களோடு ஒப்பிட்டுத் திட்டாமல், உன்னிடம் நிறையத் திறமை இருக்கிறது. நீ தொடர்ந்து முயற்சி செய்து செயல்பட்டால், நிச்சய மாக உன்னால் ஜெயிக்க முடியும் என திரும்பத்திரும்ப ஊக்கப் படுத்திக்கொண்டே நம்பிக்கையான எதிர்பார்ப்புடன் நடத்தினால், அவர்கள் நிச்சயம் வெற்றியடைவார்கள்.

குழந்தை வளர்ப்பு முறைகள் என்ற நூலில் குழந்தைகளை கருவில் உருவாக்குவது முதல் 20 வயது வரை எப்படி நடத்துவது என்பது பற்றி விரிவாகக் கூறி இருக்கிறேன்.

உங்கள் குழந்தைகள் வாழ்வில் முழுவெற்றியடைய  நல்வாழ்த்துக்கள்!
 
இத்தலைப்போடு தொடர்பான மேலும் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள விருப்பமானவர்கள், டாக்டர் ரயீஸின் "குழந்தை - வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?" என்ற தலைப்பில் வெளி வந்துள்ள இறுவட்டைப் பார்த்துக்கொள்ளுங்கள்!

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக