ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஆரம்ப கால முஸ்லிம்களின் எழுச்சியும் எமது சமகால நிலையும். அலி இஸ்ஸத் பிகோபிச் (ரஹ்)

அப்போது ஏனைய நாகரீகங்கள் அனைத்தையும் விட வித்தியாசமான சம்பூரணமானதொரு நாகரீகம் தோன்றியது.  ஒரு நூற்றாண்டு கால தொடர்ந்த இயக்கத்தினூடே ஆக்கத்திற்கும் அழிவுக்கும் மத்தியில் அந்நாகரீகத்திற்கு அடித்தளமிடப்பட்டது. அப்பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்த நாகரீக சமூகங்கள் மார்க்கத்தின் பலத்தாலும், அறிவுப் பலத்தாலும் ஆட்கொள்ளப்பட்டன! 
  சிரியா கி.பி. 634 லிலும, டமஸ்கஸ் 635 இலும் கைப்பற்றப்பட்டன. இந்தியாவும் எகிப்தும் 641 இல் கைப்பற்றப்பட்டன. சமர்கந் 676 இலும் ஸ்பெயின் 710 இலும் கைப்பற்றப்பட்டன. கி.பி720இல் இஸ்லாமியப் படைகள் பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்டன. 729ல் இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் சீனாவை அடைந்து அதன் மன்னன் தாய்ஸுங்கிடம் கலீபாவின் கடிதத்தை சமர்ப்பிக்கின்றனர். மன்னனிடம் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கான அனுமதியையும் பெறுகின்றனர். பின்னர் அவர் கள் 'கான்டன்' என்ற மாகாணத்தில் பள்ளியொன்றையும் நிர்மாணிக்கின்றனர். இன்று வரையில் அப்பள்ளி நின்று நிலைக்கிறது. உலகின் அப் பகுதியின் மிகப் பழைய பள்ளி அதுவேயாகும். 
                இந்த எழுச்சி அல்லது 'மனித சக்திகளை விடுவித்து அவற்றை வீரியம் கொண்டெழச் செய்த இந்த நிகழ்வுக்கு எங்கும் நிகர் காண முடியாது.' (தத்துவ ஞானி o.spengler) மனித வரலாற்றில் தனித்துவமானதொரு நிகழ்வாகவே இது பதிவு பெற்றுள்ளது. இவ்வாறு அரபு தீபகற்பம் மார்க்கமொன்றின் ஊற்றாக வும்; மனித நாட்டத்தின் மூலமாகவும் அக்காலப்பிரிவில் அமைந்தது என  U.G.Wels 'உலக வரலாறு' என்ற தனது நூலில் வர்ணிக்கிறார். கி.பி. 655 இல் முஸ்லிம் கடற்படை ரோமகடற்படையை லாத்திகியாவின் அருகில் நடந்ததொரு யுத்தத்தில் முறியடிக்கிறது. ஆனால் இன்று வரையில் அரபிகள் அத்தகையதொரு கடற்படையை எங்கிருந்து பெற்றார்கள் என்பது தெளிவாக விளக்கப்பட முடியாமலேயே உள்ளது. 
  கலீபா முஆவியா இப்னு அபீ ஸுப்யான் கி.பி.662-667இல் கொண்ஸ்தான்து நோபிளை முற்றுகையிடுகிறார். கலீபா அப்துல் மலிக், வலீதின் (கி.பி. 625 - 715) காலப்பிரிவில் கிலாபத் மேற்கே பெரீனி மலைத் தொடர்கள் துவக்கம் கிழக்கே சீனாவின் எல்லை வரை பரந்துபட்டு நிற்கிறது. ஸ்பெயினிலும், மத்திய கிழக்கி லும், இந்தியாவிலும், குர்துபா, பக்தாத், டில்லி என்ற அவற்றின் மத்திய நிலையங்களோடு 1000 வருடங்கள் அது நிலைத்து நிற்கின்றது. 700 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்பெயினில் அதன் வரலாறு காணா மிக உயர்ந்த, உன்னத நாகரீகத்தைத் தோற்றுவித்த இஸ்லாம் அங்கிருந்து ஐரோப்பிய கொடூர நீதிமன்றத்தின் தொடர் தாக்குதலால் பின்வாங்கி வந்த போது மத்தியாசியாவில் அதன் அருளூற்றுகள் பரவி விரிந்தன. பிறகு அது கொன்ஸ்தாந்து நோபிளையும் ஆட்கொண்டது. பால்கன் ஊடாக ஐரோப்பாவிலும் பரவலாயிற்று. 
  இந்தியாவின் வரலாற்றிலேயே மிகச் சிறப்பு மிக்க வளங்கொழிக்கும் காலப்பிரிவு என வர்ணிக்கப்பட்ட (U.G. WELS) இஸ்லாமிய ஆட்சி அதாவது மொகலாயர் ஆட்சி (1526-1707) அந் நாட்டிலிருந்து 300 ஆண்டுகளுக்கு முன்னால் பின்வாங்கியது. சற்றேறத்தாழ இதே காலப்பிரிவில் அதாவது கி.பி. 1682 இல் உஸ்மானியப் படைகள் இறுதி முறையாக  வியன்னாவை முற்றுகையிட்டன. 
  உண்மையை  ஓரளவு நெருக்கமாகக் காட்ட சில வரலாற்று உண்மைகளை இங்கே தருகின்றேன். மொகலாய பெரும் குடும்பத்தில் ஒருவரான அக்பர்ஷா இந்திய வரலாற்றின் மிகப் பெரும் மன்னர்களில் ஒருவர். மனித வரலாற்றில் தோன்றிய பெரும் மன்னர்களில் ஒருவராகவும் அவரைக் கொள்ளலாம். அவர் உருவாக்கிய ஆட்சி அமைப்புக்களில் சில இன்று வரையில் நிலைத்திருக்கிறன. அவர் யுத்த களத்தில் மிகப் பெரிய வீரர். ஆனால் யுத்தம் முடிந்து எதிரிகள் தோல்வி அடைந்துவிட்டால் கைதிகளோடு மிகுந்த மனிதாபிமானத்தோடு அவர் நடந்து கொள்வார். காட்டு மிராண்டித்தனமான நடத்தைகளுக்கும் அவர்கடும் எதிரியாக இருந்தார். மிகப் பெரும் பணிகள் புரியவே தம் சக்தியை அவர் பிரயோகித்தார். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அவர் பாடசாலைகளை நிறுவினார். அவரது ஆட்சியை அழித்த ஆங்கிலேயர்கள் புரிந்து   கொண்டது போல் அவர் தாம் செய்த இப்பணி யின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்தன் குடிமக்களின் சுபீட்சத்திற்காக ஆங்கிலேயர்களை விட மிக அதிக மாகப் பணி புரிந்தார். (கலாநிதி SCUMLIDT - உலக வரலாறு) 
  அக்பர்ஷாவின் பேரர் அவ்ரங்கசீப் (1658-1707)முழு இந்தியாவையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட ஆட்சியாளராக இருந்தார். இது நீண்ட காலத்தின் முன்னால் நடந்த ஒரு நிகழ்வல்ல என்பதனை வாசகர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்! 
   முஸ்லிம்கள் தம் ஆளுகைக்குட்பட்ட நிலப் பகுதிகளை அழித்தொழிக்கவில்லை. மாற்றமாக தம் ஆளுகைக்குட்பட்ட சமூகங்களுக்கு மத்தியில் வளர்ச்சியுற்றிருந்த கலைகளை தமதாக்கிக் கொண்டார்கள். அவற்றை வளர்த்தார்கள். அடுத்த சமூகங்களுக்கு அவற்றைக் கொடுத்தார்கள். 
                முஸ்லிம்களின் இப் பொது நடத்தைக்கு முதற் காரணம் இஸ்லாத்தின் போதனைகளும் அதன் உயிரோட்டமுமேயாகும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு ரோம மன்னன் 'ஒரு காட்டு மிராண்டி, நாகரீகவாடை அற்றவர்' எனக்கண்ட தளபதி சமாதான ஒப்பந்தத்தின் போது 'கிரேக்க ஏட்டுச் சுவடிகளை வாங்கும் உரிமை' ஒப்பந்த ஷர்த்தில் சேர்க்கப்பட வேண்டுமென நின்ற போது மிகுந்த ஆச்சரியப்பட்டுப் போனான். அந்தக் 'காட்டுமிராண்டித் தளபதி' வேறு யாருமில்லை. அவர் ஓர் அரபி முஸ்லிம். 
  இஸ்லாமியர்கள் பைஸாந்தியரிடமிருந்து கண்ணாடித் தொழிலையும், எகிப்தியரிடமிருந்து பருத்தித்தொழிலையும், பாரசீகரிடமிருந்து பட்டு ஆக்கத் தொழிலையும் கற்றுக் கொண்டனர்.பைஸாந்தியரும்,எகிப்தியரும், ஸாஸானியரும் புடவைத் தொழிலில் அக் காலத்தில் மிகுந்த பிரசித்தி பெற்றிருந்தனர். முஸ்லிம்கள் புடவை நெய்தலில் அதே தரத்தைப் பேணுவதில் வெற்றி கண்டனர் என்று ரெஸ்லர் விளக்குகிறார். 
  பிரான்ஸின் 'லோவர்' யப்பானின் 'கைஸரி' ஆகிய பழம் பொருட் காட்சிசாலைகள் அக்காலத்தில் நெய்யப்பட்ட சில புடவைகளை இன்று வரை பாதுகாக்கின்றன. அவை அரேபியரின் நெய்தல் தொழிற் திறமைக்கான சில மாதிரிகளாகும். கண்ணாடிப் பொருட்கள் செய்தலில் அரபியரின் வேலைப்பாட்டு நுணுக்கத்தையும், திறனையும் இன்று வரையிலும்  யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஸாமிராவிலும், புஸ்தாத்திலும் செய்யப்பட்ட அத்தகைய அற்புதமான கண்ணாடிப் பொருட்களின் மாதிரிகள் சிலவற்றை 'லோவர் பழம் பொருட்காட்சிசாலையும் , பிரித்தானிய பழம் பொருட்காட்சிசாலையும் இன்று வரை பாதுகாக்கின்றன. அரபு இரசாயணவியலாளர்களே முதன் முதலில் சவர்க்காரத்தைக் கண்டுபிடித்து அதற்கான தொழிற்சாலைகளையும் நிறுவினர். அப்பாஸிய கலீபாக்களின் மந்திரி பதவியிலிருந்த 'பல்ள் அல் பர்மகி'யே பக்தாதில் முதன் முதலில் காகிதத் தொழிற்சாலையை நிறுவினார். சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட காகித உற்பத்தியை முஸ்லிம்களே வளர்த்து அதிவிரைவில் ஸ்பெயின் ஊடாக ஐரோப்பாவின் பல பாகங்களுக்கும் பரப்பினர். அத்தோடு சமர்கந்த் முஸ்லிம் நகரமே உலகிலே மிகத் தரமான காகிதங்களை நீண்ட காலமாக உற்பத்தி செய்து வந்தது. 
  ஆயிரத்தோர் இரவுக் கதையின் கனவுலகாகச் சித்தரிக்கப்படும் பக்தாதை ஈராக்கை கைப்பற்றியதன் பிறகு முஸ்லிம்கள் திட்டமிட்டு நிர்மாணித் திருந்தார்கள். புராணங்களில் வரும் கதாநாயகன் போன்று வர்ணிக் கப்படும் கலீபா ஹாரூன் ரஷாதின் ஆட்சியின் போது பக்தாத் நிர்மாணிக்கப்பட்டு 50 வருடங்களுக்கு மேல் சென்றிருக்கவில்லை. எனினும் அந் நகர் அறிவிலும், வளத்திலும் உலகின் தலைநகராகவே விளங்கியது. கி.பி. 11ம் நூற்றாண்டின் போது பக்தாதின் சனத்தொகை 2 மில்லியனாக இருந்தது என சில கணிப்பீடுகள் கூறுகின்றன. அக் காலப்பிரிவில் உலகின் மிகப் பெரும் நகரமாக அது காணப்பட்டது. 'ரெஸ்லர்' இஸ்லாமிய நாகரீகத்தின் பாதுகாவலராகக் காணப்பட்ட ஹாரூன் ரஷPத் பற்றி விளக்கும் போது கீழ்வருமாறு கூறுகிறார். 
   'ஹாரூன் ரஷாதின் மிகப் பெரும் ஆளுமை மிகப் பெரும் அறிஞர்களையும் காந்தம் போல் கவர்ந்திழுத்தது. அவர் தன் சபையில் வித்தியாசமானதொரு பாராளுமன்றத்தைக் கொண்டிருந்தார். கவிஞர்கள், சட்ட அறிஞர்கள், வைத்தியர்கள், மொழி வல்லுனர்கள், இசைத் துறை வல்லுனர்கள், கலைஞர்கள் இப்படியான வித்தியாசமான பலர் அதில் அங்கம் வகித்தனர். எந்த மன்னனைச் சூழவும் இப்படி பல்துறை நிபுணர்கள் இருந்ததாக வரலாறு இது வரை பதிவு செய்யவில்லை. ஏனெனில் ஹாரூன் ரஷாதின் காலம் உயர்ந்த நாகரீகம் கொண்டதாகவும், மிகுந்த சகிப்புத் தன்மை கொண்டதாகவும் காணப்பட்டது. 
  அவரது மகன் கலீபா மஃமூனின் காலப் பிரிவில் பதினோராயிரம் கிறிஸ்தவக் கோயில்களும், நூற்றுக்கணக்கான யூத, மஜுஸிய வணக்கஸ்தலங்களும் காணப்பட்டன. 
  கி.பி. 1065 இல் ஸ்தாபிக்கப்பட்ட நிலாமியா பல்கலைக் கழகம் கிலாபத்தின் பெரும் நகர்களில் கல்வி ஸ்தாபனங்கள் அமைக்கப்பட ஓர் உதாரணமாக அமைந்தது. அப் பல்கலைக்கழகங்கள் அல்குர்ஆன், ஹதீஸ் கலைகளையும் இஸ்லாமிய சட்டத் தையும் குறிப்பாக ஷாபிஈ மத்ஹபையும் கற்றுக் கொடுத்தன. அத்தோடு அங்கே மொழி, இலக்கியம், வரலாறு பல்வேறு சமூகங்களின் நாகரீகங்கள், வானவியல், கணிதவியல்,இரசாயணம்,பௌதீகவியல், பொறியியல் இது போன்ற பல்வேறு கலைகளும் கற்பிக்கப்பட்டன. நிலாமிய்யா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு குறுகிய காலம் செல்ல முன்னால் 'முஸ்தன்ஸரிய்யா' என்ற பெயரில் பக்தாதில் இன்னொரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட் டது. இஸ்லாமிய உலகின் கல்விக்கான மத்தியதளமாக அது காணப்பட்டது. சட்டம், அறிவியற் கலைகள், இலக்கியம், அழகியற் கலைகள்  போன்ற  பல்வேறுபட்ட கலைகள் அங்கு கற்பிக்கப்பட்டன. இக்கல்வி முறையைப் பின்பற்றி மேற்குலகம் பின்னர் பாரிஸ்  பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவத்தின் நான்கு சிந்தனைப் பிரிவுகளையும் கற்பித்தது. 
  ஆரம்பக் கல்வி - அதாவது க.பொ.தராதர சாதாரணதர, உயர்தரம் என இன்றழைக்கப்படும் கல்வி அப்போது பிரதானமாக இலவசமாக வழங்கப்பட்டது. அக்காலப்பிரிவின் பெரும் அறிஞர்களிடம் கற்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் மக்கா, மதீனா, கெய்ரோ, டமஸ்கஸ், பக்தாத் போன்ற நகர்களுக்கும் பிரயாணம் மேற்கொண்டு வந்தனர். அறிவு தேடிச் செல்லும் இப்பிரயாணத்தின் போது அவர்கள் கடந்து செல்லும் எல்லா நகர்களிலும் அவர்களுக்கான உணவு, இருப்பிட வசதிகள் இலவசமாகவே செய்து கொடுக்கப்பட்டன. மேலே நாம் குறிப்பிட்ட தகவல்களிலிருந்து கீழ் வரும் முடிவுக்கு வரக் கூடியதாக உள்ளது. 
  இஸ்லாமிய உலகில் கி.பி. 10,11 ம் நூற்றாண்டுகளில் வேறு எந்த நாகரீகத்திலும் ஒரு போதும் கேட்டிராத வித்தியாசமானதொரு காட்சியைக் காண்கிறோம். 
  'நீ எங்கு திரும்பினாலும் அறிவு தேடும் ஆர்வம் மிகுந்திருப்பதைக் காண முடியும். ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஆயிரக் கணக்கான அறிஞர்களின் குரல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஆட்சியாளர்களின் மாளிகைகளில் கவிஞர்களும், தத்துவ ஞானிகளும் நிறைந்திருந்தனர். பாதைகளில் புவியியல், வரலாறு, ஷரீஆ போன்ற பல்வேறு துறை அறிஞர்களை நீ எதிர் கொள்ளலாம். அவர்கள் மேலும் அறிவு தேடிச் சென்று கொண்டிருப்பர். இது இஸ்லாமிய சிந்தனை வரலாற்றின் மிக முக்கிய காலக் கட்டம் எனலாம்'. (ரிஸ்லர்) 
  இஸ்லாம் 5 நூற்றாண்டுகள் (கி.பி. 700 - 1200) தனது நாகரீக மேம்பாட்டால் மட்டுமே உலகை ஆட்சி செய்தது. கலீபா நாஸிர் மெரோக்கோவின் மராகிஷா நகரில் தத்துவ ஞானி இப்னு ருஷாதுடன் அரிஸ்டோட்டில்  பிளேட்டோவின் சிந்தனை பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்த போது மேற்குலக ஆட்சியாளர்களும், பிரபுக்களும் தமக்கு எழுத வாசிக்கத் தெரியவில்லை எனப் பெருமை பாராட்டிக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக