உலகிலேயே அதிக திரையிசைப் பாடல்களை எழுதியிருக்கும் வாலிப கவிஞர் வாலியின் 80வது பிறந்தநாள் விழா சென்னை நாரத கானசபாவில் 13 .11. 2010 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பாடல்களின் தொகுப்பான “வாலி - 1000” என்ற நூல் வெளியீடும் நடந்தது. நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில்,பொதிகை தொலைக்காட்சி நடராஜன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், நடிகர் கமலஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.
விழாவில் வாலியின் உரை:
எனது நூலை வெளியிட்ட கமல், ஷங்கருக்கு நன்றி. என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கு நன்றி.எனது பாடலான “கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்” என்ற பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு டி.எம்.சௌந்தரராஜன்தான் காரணம். நான் திரைத்துறைக்கு வருவதற்கும் அவர்தான் காரணம். சுசிலா எனது முதல் பாடலை பாடி என் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். இருவரும் என்னை வாழ்த்த வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி.
இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். “படகோட்டி” படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம். முந்தானைகூட சிறிதும் ஒதுங்காமல் நடித்தவர். தனது முகப்பாவத்தினாலேயே எல்லாரையும் கட்டிப்போட்டவர் சரோஜா தோவி. (ஆமாம், நெல்லை ஜெயந்தா கூறியது போல், கறுப்பு வெள்ளைக் காலத்தில் கலராக தெரிந்தவர் இந்த கன்னடத்து பைங்களி.)
ரஜினியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை என்று சொல்லி அவர் வருத்தப்பட்டார். எனது மனைவி இறந்த முதல் ஆண்டு நினைவு நாளன்று ரஜினிகாந்தின் மகள் திருமணம் நடைபெற்றதால் என்னால் செல்ல முடியவில்லை. அதை அவரிடமே ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் போகாவிட்டாலும் அவரது மகள், மருமகன் இருவரையும் எல்லாம் வல்ல முருகன் அருளால் பல்லாண்டு வாழ்க என்று மனதால் வாழ்த்தினேன்.
கமலஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர். டி.கே.சகோதரர்கள் குழுவில் இருந்து கலை உலகுக்கு வந்தவர்.மொழியை உச்சரிக்க தெரியாதவர்கள் அங்கிருந்து வர முடியாது. இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார்.
ரஜினி, கமல் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம் அவர்கள் வேர்களை மறக்காததுதான். எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன். 20ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை. (கர்நாடக இசை என்று கூறுவது போல், மெல்லிசை என்று கூற வைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு 2 லட்சம் அன்பளிப்பை நன்றிக்கடனாய் வாலி வழங்கினார்.)
ரஜினி என்னை துர்வாசகரை போல் கோபப்படுவதாக கூறுகிறார். இந்த‘துர்’வாசகனிடமும் ஒரு நல்வாசம் உண்டு. ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புக்கு சிறந்த உதாரணம். ரஜினி தனக்கென ஒரு தனி வழியை அமைந்துக் கொண்டு அதில் அவர் போகிறார். கமல், அவருக்கென ஒரு வழியை அமைத்துக்கொண்டு அந்த வழியில் அவர் போகிறார். இருவருமே தமிழ் திரைப்படத்தை உலக அளவில் உயர்த்தி வருகிறார்கள். ரஜினி கமலுக்கு அடுத்து சூர்யா அந்த இடத்தில் இன்று இருக்கிறார்.
வைரமுத்துவும் நானும் ‘மோதுறோம் மோதுறோம்’ என்கிறார்கள். அந்த வைரமுத்து எனக்கு மோதிரம் அணிவிதுள்ளார்.யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளக்கூடாது. அதே போல், தோல்வியையும் மனதுக்குள் போட்டுக் கொள்ள கூடாது.
வெற்றியை மண்டைக்குள் போட்டுகொண்டால் கர்வம் வந்துவிடும், தோல்வியை மனதுக்குள் போட்டுக்கொண்டால் கவலை வந்து விடும். இந்த இரண்டாலும் அழிவு வந்துவிடும்.
என்னை கோபக்காரன் என்கிறார்கள். கோபப் படாமல் இருக்க நான் ஒன்றும்
மரவட்டையல்ல மண்புழுவும் அல்ல. கோபம் வேண்டும். கர்வம் வேண்டும். அப்போது தான் நமக்குள் ஒரு வேகம், வெறி இருக்கும். தான் கர்வப்படுவது தப்பில்லை. தனது கர்வத்தை அடுத்தவர் மண்டையில் ஏற்றக்கூடாது.
வைரமுத்துவும் அப்படித்தான் தனது மண்டைக்குள் கர்வம் வைத்துள்ளார். அது வேண்டும். அதுதான் அவரின் வெற்றிக்கு ஆதாரம்.
இவ்விதம் தன்னை பாராட்டி வாழ்த்தியவர்கள் அனைவரையும் கவிஞர் வாலி நன்றி பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக