சனி, 20 ஆகஸ்ட், 2011

கவிக்கோவின் பார்வையில் ரமளான்

ரமளான் என்றால்
'எரிப்பது' என்று பொருள்.
அது பாபங்களை எரிக்கிறது.

ஒவ்வொரு ரமளானும் உண்ணா
நோன்பு என்ற அதிசயமான
நெருப்பைக் கொண்டு வருகிறது.

அது மனிதனை
எரிக்கும் நெருப்புக்களைக்
கூட எரிக்கும்
நெருப்பாய் இருக்கிறது.

அது ஏழைகளின்
வயிற்றில் எரியும்
நெருப்பைப்
பணக்காரனின் வயிற்றில்
கொண்டு போய்
வைக்கிறது.

தானும் ஏழையும்
சக உதரர்களே என்ற
ஞானம் அவனுக்குப்
பிறக்கிறது.
சகோதரத்துவத்தை
அவன் வயிற்றால் கற்றுக்
கொள்கிறான்.

பசிகளில் இரண்டு
வகை இருக்கிறது.
ஒன்று வறுமைப் பசி,
மற்றொன்று நோன்புப் பசி.
அது சாபம்.
இது வரம்.

வறுமைப் பசி கலக நெருப்பு.
பண்பாட்டுத் தோட்டத்தில் மலரும்
எல்லாப் பூக்களையும்
அது எரித்து விடுகிறது.

நோன்புப் பசி புடம் போடும்
நெருப்பு.
அழுக்குகளை எரித்து
ஆன்மாவைப்
பத்தரைமாற்றுத்
தங்கமாக்குகிறது.

நோன்புப் பசியே
ஆன்மாவின்
விருந்தாகிறது.

நோன்புப் பசி
மகத்தான் பிச்சைப்
பாத்திரமாக இருக்கிறது.
அதில், இறைவனே
பிச்சையாக விழுந்து
விடுகிறான்.

('இல்லையிலும் இருக்கிறான்' என்ற கவிக்கோவின் நூலின் இறைவனே பிச்சை என்ற அத்தியாயத்திலிருந்து......)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக