இறைவனின் உன்னதப் படைப்பினமாகிய மனித வாழ்வின் சகல துறைகளுக்குமான நல்வழிகாட்டல்களை, வழங்கி நிற்கும் தூய அல்லாஹ்வின் வாக்கும் தீர்ப்புமான புனித அல்-குர்ஆனை மக்கள் சமுதாயத்தினருக்கு அருட்கொடையாக அருளினான்.
மகத்துவமும், தனித்துவமுமிக்க அருள் மறை, ஏனைய அனைத்து மதங்களினதும், வேத நூல்களையும் விட நித்தியமானதாகவும், மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லாததாகவும், தனிப்பண்புகளுடனும், சிறப்பாகவும் திகழ்கின்றது.
இறையருள் சுரப்பதும், பார்க்கியமுமிக்கதான அருள் மறையை, சிந்தனையில் ஏற்று அநுதினம் ஓதி உணர்ந்து, இன்மை, மறுமை, இரண்டிற்குமான நன்களைச் சேர்ப்பது போன்று மாண்பு மிகு அல்-குர்ஆனின் புனிதம் பேணி அதற்கான சங்கையை அளிப்பதானது அதன் உரிமையாளனும், ஏக வல்ல நாயனுமான அல்லாஹ்வை சங்கை, செய்வதாக அமைகின்றது.
அருள் மறை கூறும், சன்மார்க்க சட்டதிட்டங்களுக்கமைய வாழ்வை அமைத்துக்கொள்வது, அல்-குர்ஆனுக்குச் செய்யும் யதார்த்தமான சங்கையாக இருந்த போதிலும் அதன் முதற்படியாக அதற்குரிய வெளிப்படையான மரியாதை அளிப்பது புனிதம் காப்பது, சிறப்புப் பேணுவது, தூய்மையைக் கையாள்வது, உண்மை விசுவாசிகளின் பொறுப்பும் கட்டாயக் கடமையுமாகின்றது.
புனித அல்-குர்ஆனையையே அச்சொட்டாகக் கொண்டு நல்வாழ்வு வாழ்ந்து நல்வழி காட்டிச் சென்ற அல்லாஹ்வின் தூதர், நபி முஹம்மது (ஸல்) அவர்களும் குர்ஆனின் மாண்பினைப் பேணி சங்கை செய்யுமாறு, தன் உம்மத்தினருக்கு வலியுறுத்தி உபதேசித்துள்ளார்கள். அல்-குர்ஆனும் இதனையே விளக்கி நிற்கின்றது.
சுத்தமான நிலையில் உள்ளவர்களன்றி அதனைத் தொடக்கூடாது (56:79) குர்ஆன் தொடர்பான சில சட்ட திட்டங்கள்.
குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாள், பத்திரங்கள் போன்றவற்றை வேண்டுமென்று நஜீஸாக்குவது, ஹராமாகும். அதன் மீது நஜீஸ் பட்டால் உடனே சுத்தப்படுத்தி விட வேண்டும். தாமதித்தல் கூடாது. அதனை சுத்தப்படுத்தும் வேளை, மனிதனின் கைகள், அதன் மீது படுமாக இருப்பின் அதற்கான முன்கூட்டி வுளு செய்து கொள்ள வேண்டும். வுளு செய்து நஜீஸை நீக்கத்தாமதிப்பதாக இருப்பின் அதனால் குர்ஆனின் சங்கை மீறப்படுமாக இருப்பின், வுளு இல்லாமே நஜீஸை நீக்க வேண்டும்.
நஜீஸான இரத்தம், மலம், சலம், இறந்த பிராணி போன்ற வற்றின் மீது குர்ஆனை வைப்பது ஹராமாகும். அவை காய்ந்திருப்பினும் சரியே குறித்த நஜீஸ்களின் மீது வைக்கப்பட்ட குர்ஆனை உடனே எடுப்பது வாஜிபாகும்.
நஜீஸான கைகளால் குர்ஆனின் வசனங்களை எழுதுவது ஹராமாகும்.
குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டதும், அல்லாஹ்வின் திருநாமங்கள், இறை நேசர்களின் பெயர்கள் எழுதப்பட்டதுமான தாள்கள், அட்டைகள், மலசல கூடத்தில் வீழ்ந்து கிடந்தால் அவைகளை எடுத்துச் சுத்தப்படுத்துவது வாஜிபாகும். அதற்காக செலவு செய்ய நேரிடினும் சரியே! குறித்த பொருட்களை மலசல கூடத்திலிருந்து எடுத்து சுத்தப்படுத்தும் நிலையில் அவை இல்லாமல் உக்கிப்போயிருந்தால். அந்த மலசல கூடத்தைப் பயன்படுத்தக்கூடாது.
குர்ஆன் வசனங்கள் கொண்ட செய்தித்தாள்கள், சஞ்சிகைகளை குப்பை கூளங்களில் வீசக்கூடாது.
பாவிக்க முடியாத நிலையிலுள்ள குர்ஆன் பிரதிகளை அல்லது தாள்களை நெருப்பிலிட்டு எரிப்பது ஹராமாகும். ஒன்றில் அவைகளை சங்கையான மண்ணில் புதைத்து விட வேண்டும். அல்லது அவைகளை, ஓடக்கூடிய நீரில் அமிழ்த்தி நிரோட்டத்தில் கரைந்து போகும் படி செய்ய வேண்டும். அல்லது அப்பிரதிகளைப் புதுமைப்படுத்த வேண்டும்.
காபிரான மனிதனின் மேனி குர்ஆனில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்படும் பட்சத்தில் அதனை உடனே எடுத்துவிட வேண்டும். ஒரு காபிரான மனிதனின் கைகளில் குர்ஆனைக் கொடுப்பதால் அதன் சங்கைக்கு பங்கம் ஏற்படுமாக இருந்தால், அதனை கொடுப்பது ஹராமாகும். எனினும் குர்ஆனைப்படித்து விளங்கிக் கொள்ள விரும்பும் காபிரிடம் கொடுப்பதில் தவறில்லை.
குர்ஆனிய எழுத்துக்கள், வசனங்கள், வரையப்பட்ட கட்டடங்களை உடைக்க நேர்ந்தால், அவ்வெழுத்துக்கள், வசனங்கள் வரையப்பட்டிருந்த பகுதியை மண்ணில் புதைத்து விட வேண்டும். அல்லது நீரோடையில் கரைத்து விட வேண்டும்.
வேண்டுமென்று குர்ஆன் மீது பொய்ச்சத்தியம் செய்பவர் தெளபாச் செய்ய வேண்டும்.
முஸ்லிமான ஒருவர் கோபத்தின் காரணமாக தன் சுய உணர்வற்று, குர்ஆனை, அவமதித்தால், அதற்காக அவர் தெளபாச் செய்ய வேண்டும். அவர் உண்மையாகவே, அதனை மேற்கொண்டால் அது நுபுவத்தை மறுத்ததற்குச் சமமாகும். அவர் முர்தத்தாவார்.
குர்ஆனுக்குப் பகிரங்கமாக அவமரியாதை செய்வோரை நன்மையை ஏவி, தீமையைத்தடுக்கும், படி முறைகளை கையாண்டு எச்சரிக்க வேண்டும். (தவ்bஹுல் மஸாயில்:- நன்றி ‘விலாயத்’)
முஃமின்களே! அல்லாஹ்வின் திருவசனங்களை (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், இன்னும் அவை பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் அப்பொழுது அது அல்லாத (வேறு) பேச்சில், அவர்கள் ஈடுபடும் வரை அவர்களுடன் நீங்கள் உட்கார வேண்டாம்” என்று உங்கள் மீது (இவ்) வேதத்தில் திட்டமாக, (அல்லாஹ்) இறக்கி வைத்துள்ளான். (அவ்வாறு அவர்களுடன் நீங்கள் உட்கார்ந்தால்) அப்பொழுது நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் நிச்சயமாக அல்லாஹ் முனாபிக்குள் காபிர்கள் அனைவரையுமே நரகத்தில் ஒன்று சேர்க்கிறவனாக இருக்கின்றான். (4:140)
அல்-குர்ஆன் பிரதியையோ, வசனங்கள் எழுதப்பட்ட தாள்கள் அட்டைகளை மலசலகூடம் செல்லும் பொழுது ஒருவர் தன்னிடம் வைத்திருக்கக் கூடாது. குர்ஆன் புனித வசனங்கள் ஆயத்துக்கள் எழுதப்பட்ட பொறிக்கப்பட்ட உலோகத்தட்டுகள், தாயத்துக்குள், மாலைகள் அணிந்து செல்வதுடன், இயற்கைக் கடமைகளை நிறைவேற்றும் போதும் அணிந்திருப்பதும் கூடாது.
வுளு இல்லாத ஒருவர் குளிப்பு கடமையான ஒருவர் குர்ஆனைத் தொடுவதோ அல்லது தனியாகச் சுமப்பதோ ஹராமாகும். ஆனால் அரபியில் அல்லது வேறு மொழியில், மொழி பெயர்ப்பாகியுள்ள குர்ஆன் பிரதிகளை தொடுவதும், தன்னிடம் வைத்திருப்பதும் பாவமன்று. இவ்வாறு வேறு புத்தகங்கள், பொருட்களுடன், குர்ஆன் இருக்குமாயின் அப்பொழுது வுளு இல்லாதவரும், ஜுனூபாளியும் தொடுவதும், சுமப்பதும் அனுமதிக்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வுளுவுடன் இருந்த போதிலும் இல்லாத நிலையிலும் குர்ஆனை ஓதினார்கள், என ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. எனவே வுளு இல்லாத நிலையில் உள்ளவர்களும் குர்ஆனை மனப்பாடமாக, அல்லது நேரடியாக கையால், தொடாது, தூய்மையான தடி, அட்டைத்துண்டு கொண்டு தாள்களை புரட்டி ஓதுவது ஆகுமானதாகும்.
குளிப்பது கடமையாளர்கள் குர்ஆனைத் தொடுவதும், அதைப்பார்த்து கொண்டே மானப்பாடமாகவோ ஓதுவது ஹராமாகும். என்பது பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். நபியவர்கள் ஜுனூபாளியாக இருந்த போது மட்டுமே, அல்-குர்ஆனை ஓதவில்லை என அலி (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். எனவே ஜுனூபாக உள்ளவர்கள் குளித்த அல்லது தயம்மம் செய்து சுத்தமாகிய நிலையில் மட்டுமே குர்ஆனை ஓதவேண்டும்.
ஹைழ் நிபாஸ் (மாதவிடாய் பிள்ளைப்பேறு) நிலையிலுள்ள பெண்களில் குர்ஆனைக் கற்றுக்கொள்வோரும், கற்றுக்கொடுப்போரும், குர்ஆனை மட்டும் தனியாகத் தொடாது பார்த்து ஓதுவது கூடுமென சிலர் கருதுகின்றனர். என ஷைக் பின் பாஸ், அவர்கள் பத்வா வழங்கியுள்ளார்கள். குர்ஆனையோ அதன் ஆயத்துகளையோ, பரிகாசப்படுத்துவதும், ஓதுவதும் அவற்றை முஸ்லிமான அல்லது காபிரான எவரும் அனுமதிக்ககூடிய முறையில் அவற்றை விட்டு வைப்பதும் ஹராமாகும்.
இணையத்திலிருந்து ஷௌகீ
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக