சனி, 5 பிப்ரவரி, 2011

குழந்தைகளை நேசிக்காதவர்

முக்கியமான ஒரு விடயம் தொடர்பாக ஆலோசனை நடாத்த அரசப் பிரமுகர்கள் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் நுழைந்த குழந்தையொன்று அந்த நாட்டு ஜனாதிபதியின் மடியில் போய் அமர்ந்தது. தாடியைப் பிடித்து இழுத்து குறும்புச் சேஷ்டைகள் பலவும் செய்தது. குழந்தையை வாரியணைத்துக்கொண்ட  ஜனாதிபதியும் அதை அன்போடு கொஞ்சலானார்.

இதைக் கண்ட கவர்னர்களில் ஒருவர், "குழந்தை யாருடையது ஜனாதிபதியவர்களே!"  என்று கேட்டார்?
 
"என்னுடைய குழந்தை இது......"  என்றார் ஜனாதிபதி புன்முறுவலுடன்.
 
"என்ன...! தாங்கள் பிள்ளைகளுடன் அன்புடன் பழகுவீர்களோ......!" என்றார் கவர்னர் ஆச்சரியத்துடன்.
 
"பழகாமல்...?" பதிலளித்த ஜனாதிபதி,   "தாங்கள் பிள்ளைகளுடன் அன்புடன் பழக மாட்டீர்களா.....?" என்று திருப்பிக் கேட்டார்.

"நான் வீட்டில் நுழையும் முன்  என் வருகையை அறிவிப்பேன். எனது வருகையின் சத்தத்தைக்  கேட்டதுதான் தாமதம் என் பிள்ளைகள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் ஓடி ஒளிந்து கொள்வார்கள்".  என்றார் கவர்னர் பெருமிதத்துடன்.
 
இதைக் கேட்டு ஜனாதிபதி சற்று நேரம் மௌனமாக அமர்ந்தார். அதன் பின்னர்,  கவர்னரைப் பார்த்து, " தாங்கள் உடனே கவர்னர் பதவியை இராஜினாமாச் செய்து விடுவதே நல்லது"  என்றார்.

திடுக்கிட்ட கவர்னர், 'ராஜினாமாவா....? எதற்காக ஜனாதிபதி அவர்களே....!  நான் ஏதாவது குற்றம் செய்து விட்டேனா...? என்றார் குழப்பத்துடன்.
 
" பெற்ற பிள்ளைகளிடமே அன்போடும் பாசத்தோடும் நடந்து கொள்ளாத தாங்கள், அதைவிடப் பன்மடங்கு பாசம் செலுத்தி ஆள வேண்டிய குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்? அதனால் உடனே ரஜினாமாச் செய்து விடுங்கள்" என்று ஜனாதிபதி விளக்கமளித்தார்.
 
அதன் பின் அந்த இடத்துக்கு பிறிதொரு கவர்னர் நியமிக்கப்பட்டார்.

அன்பும் கருணையும் பொருந்திய ஆட்சியாளர்களால்தான் குடிமக்களுக்குச் சுபிட்சத்தைத் தர முடியும். ஆட்சியும் அதிகாரமும் வாள் முனையும் சாதிக்காததை இவ்வாறான அருங்குணங்களால் சாதித்துக் காட்ட முடியும்  என்பதை நிரூபித்துக் காட்டினார்கள் இஸ்லாத்தின் பொற்காலம் சமைத்த கலீபா உமர் (ரழி) அவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக