செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

மாடறுப்புத் தடைக்கான கையெழுத்து வேட்டை! சிங்கள இனவாதத்தின் மற்றொரு நாடகம்.

2600 வது புத்த ஜயந்தியை முன்னிட்டு; மாடறுப்புத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏதுவாக; பொது மக்களின் கையொப்பத்தைத் திரட்டும் முயற்சியின் மற்றொரு அங்கம்; இன்று நிட்டம்புவையில் இடம்பெற்றது. பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த; பௌத்த கலாச்சார முறையில் அலங்கரிக்கப்பட்ட வாகனமொன்றில் இருந்த வண்ணமே இந்த கையொப்ப வேட்டை இடம்பெற்றது.

"மிகப் பெரும் பாவமான மாடறுப்பை; இந்த நாட்டிலிருந்து அகற்றும் புண்ணிய கருமத்தை செய்திட; எம்முடன் திரண்டு வாருங்கள்" போன்ற கோசங்களை; ஒலி பெருக்கியில் எழுப்பிக் கொண்டிருந்த வாகனத்தை நோக்கி பெருந் திரளான சிங்கள மக்கள் சென்று; தமது கையொப்பத்தை இட்டனர். முஸ்லிம்கள்; விசேடமாக; அடையாளம் காணப்பட்ட முஸ்லிம்கள் அதன் பக்கத்தால் செல்லும் போதெல்லாம்; மேலுள்ளவாறான கோசங்கள் பலமாக; அடிக்கடி எழுப்பப் பட்டதையும் காண முடிந்தது.

"பாருங்கள்; வேண்டுமென்றே பிரச்சினைகளை உருவாக்கவல்லவா இவர்கள் முயற்சிக்கிறார்கள்? தமிழரை மட்டுப்படுத்திவிட்ட களிப்பில் இப்போது எங்கள் மீது பாயத் தொடங்கியுள்ளார்கள்" என்று தனது மனக் கவலையை வெளியிட்டார்; ஊருக்கு வருவதற்காக பஸ்ஸுக்குக் காத்திருந்த ஒரு சகோதரர்.

"பன்றியையோ கோழியையோ அறுப்பதை இவர்கள் பாவமாகக் கருதவில்லை போலும்" என்று மற்றொருவர் ஹாஸ்யமாகக் கூறினார்.

"மாட்டிறைச்சித் தொழில்' இலங்கையில்; 95%' முஸ்லிம்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. கோழி மற்றும் பன்றி இறைச்சித் தொழிலில் சிங்களவர்கள் தாராளமாக ஈடுபடுகிறார்கள். எனவே; தங்களது இனத்தின் பொருளாதாரத்தை வளர்ப்பதும்; முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்குவதுமே இதன் நோக்கம்" என்று அர்த்தம் கற்பித்தார் முதலில் கருத்து சொன்ன சகோதரர்.

மேற்சொன்ன கருத்துக்கள் எவ்வாறாயினும்; மாடறுப்புத் தடையைக் கொண்டு வருவதற்கான இந்த நடவடிக்கை முஸ்லிம்களுக்கு மிகவும் அச்சுறுத்தலானது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் எமது வீடுகளின் கதவுகளையும் தட்டத் தொடங்கியுள்ள இவ்வேளையில்; எமது சமூகத்தின் இருப்பை; அதன் தனித்துவத்தை; அதன் சுதந்திரத்தை மற்றும் அதன் நாகரிக வளர்ச்சியை இந்த நாட்டில் நிலை நிறுத்த நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்ப்பது எமது கடமையல்லவா?

இவ்வாறான நிகழ்வுகளை இப்படியே தொடர விட்டால்; எதிர் காலத்தில்; முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டக் கூடாது என்றோ அல்லது பெண்கள் பர்தா அணியக் கூடாது என்றோ புதிய புதிய தடைச் சட்டங்களை இவர்கள் கொண்டுவர மாட்டார்களா?

தேர்தலொன்று நடைபெறவுள்ள இவ்வேளையில் கூட; முஸ்லிம்களின் மனதை நோகடிக்கச் செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால்; ஏனைய காலங்களில் அரசாங்கங்களை நாம் எப்படி நம்பலாம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக