வியாழன், 26 ஜனவரி, 2012

இனிதே நடந்து முடிந்த பாலிகாவின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்

2012 ஆம் வருடத்துக்கான, கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள், மிக மிக சிறப்பாக இன்று (26.01.2012) நடைபெற்று முடிந்தன.


ஸபா, மர்வா, மினா ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க பெருந்திரளான மக்கள் குழுமியிருந்தனர்.

இறுதி நிகழ்வுகளின் சிறப்பு அதிதியாக, மேல் மாகாண சபை அங்கத்தவர் திருமதி சந்தியா சிரிவர்தன கலந்து சிறப்பித்தார். அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினரும் எமாது ஊரின் சமூக சேவகருமான ஜனாப் நஜீம், கம்புராகல்ல மகா வித்தியாலய அதிபர், வேவல்தெனிய முஸ்லிம் வித்தியாலய அதிபர், திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபர், அல் பத்ரியா மகா வித்தியாலய அதிபர் உட்பட மற்றும் பல பிரமுகர்கள் இந்த நிகழ்வின் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

பெண்களுக்கான தனித்துவமிக்க முஸ்லிம் பாடசாலை என்ற வகையில், பெரிய மாணவிகளுக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும், பாடசாலை ஆசிரியைகளின் மத்தியஸ்தத்துடன், நேற்று நிறைவுற்றிருந்ததுடன், பார்வையாளர்களுக்கு பொதுவான அனுமதி வழங்கப்பட்டிருந்த இன்று, பக்கத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களின் துணையுடன், சிறிய மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகள் இனிதே நடாத்தப்பட்டன.

போட்டிகளின் முத்தாய்ப்பாக இடம்பெற்ற DRILL DISPLAY, அனைவரதும் பாரட்டைப் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மாணவிகளை பயிற்றுவித்த பாடசாலையின் ஆங்கில ஆசிரியை திருமதி லக்மாலி, பிரதம அதிதியின் விசேட தனிப்பட்ட பாராட்டைப் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு அத்தியின் உரை இறுதியாக இடம்பெற்றது. "மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட இந்தப் பாடசாலையில் இவ்வாறான சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெறுவதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அத்தனகல்ல தொகுதியில் மட்டுமன்றி, முழு கம்பஹா மாவட்டத்திலும் ஒரேயொரு பெண்கள் பாடசாலையகத் திகழும் இந்தப் பாடசாலை, எதிர்காலத்தில் சிறந்த முன்னேற்றங்களை அடைய மனதார வாழ்த்துகிறேன்" என்று கூறியதுடன், "நான் இந்தப் பாடசாலைக்கு, சிறிய மாணவிகளுக்கான  பாண்ட் வாத்தியக் கருவித் தொகுதி ஒன்றை வழங்க உறுதியளிக்கிறேன். அடுத்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது, நீங்கள் என்னை அந்த பாண்ட் வாத்தியங்களுடன் வரவேற்கலாம்" என்றும் கூறி, கூடியிருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இதன் பின்னர் போட்டிமுடிவுகள் அறிவிக்கப்பட்டன. மர்வா, மினா, ஸபா ஆகிய இல்லங்கள் முறையே முதலாம், இரண்டம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டன.

இந்தப் போட்டி நிகழ்வுகளின் போது, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் காட்டிய ஆர்வம் உண்மையிலே பாராட்டப்பட வேண்டும். அந்த வகையில் அதிபர் பர்ஸானா அவர்களின் முடிவும் முயற்சியும் போற்றப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை.

எல்லா விழாக்களிலும் இறுதியில் நன்றியுரை இடம்பெறுவது வழமை. ஆனால், பாலிகாவின் இன்றைய விழாவின் போது இந்த நன்றியுரை மறக்கப்பட்டிருந்தது. அறிப்பாளர்கள், அப்படி ஒன்றுக்கு யாரையும் அழைக்கவில்லை என்பதுடன், அதற்காக நியமிக்கப் பட்டிருந்த ஜனாப் ஜமால்தீன் ஆசிரியர் அவர்களுக்கும், நிகழ்ச்சிகள் முடிந்து வீடு திரும்பும் போதே அந்த விடயம் நினைவுக்கு வந்துள்ளது' என்பது கவலை தரும் ஒரு விடயமாகும்.

இன்றைய போட்டிகளில் பங்கேற்ற ஒரு மாணவியின் பெயர் 'ஸபா மர்வா' என்பதும், இவர் 'மினா' இல்லத்தைச் சேர்ந்தவர் என்பதும் மற்றொரு சுவையான விடயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக