சனி, 28 ஜனவரி, 2012

இமாம் புகாரீ (ரஹ்) அவர்களும் ஹதீஸ் துறைக்கான அவர்களது பங்களிப்புக்களும்

இவரது முழுப்பெயர் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாஈல் அல்-புகாரீ என்பதாகும். ரஷ்யாவிலுள்ள புகாரா எனும் நகரத்தில் ஹிஜ்ரி 184ல் பிறந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்து அனாதையானார். சிறு பராயத்திலேயே அல்குர் ஆனையும் ஹதீஸையும் கற்கத் தொடங்கினார். இதன் பயனாக பருவ வயதை அடையுமுன்பே அல்குர் ஆனையும் இலட்சக்கணக்கான ஹதீஸ்களையும் மனனம் செய்துகொண்டார்.


 இவர் ஹதீஸ்களை மனனம் செய்ததோடு மாத்திரம் நில்லாது அவற்றின் அறிவிப்பாளர் வரிசையில் இருந்த ஒவ்வொருவரதும் வாழ்க்கை வரலாற், அவர்கள் பிறந்த இடம், திகதி, மறைவு முதலான ச்கல விபரங்களையும் தெரிந்து வைத்துக்கொண்டார்.

அறிவுத்திறனும் அபார நினைவாற்றலும் கொண்டிருந்த இவர் அனைத்துக்கும் மேலாக இறையச்சம் மிக்கவராகத் திகழ்ந்ததால், ஹதீஸ்களைத் தொகுப்பதில் மிகவும் பேணுதலாக நடந்துகொண்டார்.

 இவர் தனது 17வது வயதில் தனது தாயார் மற்றும் சகோதரருடன் ஹஜ்ஜுக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின்னர், அவர்களிருவரையும் ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு மக்காவிலேயே தங்கி ஹதீஸ்களைப் பயில ஆரம்பித்தார்.

 அக்காலப்பிரிவில் ஹதீஸ்துறை வல்லுனர்களகத் திகழ்ந்த இஷாக் இப்னு ராஹவைஹி,அலீ பின் மதீனீ, குதைபா இப்னு ஸஈத், அஹ்மத் பின் ஹன்பல் முதலாஅனவர்களிடம் இவர் ஹதீஸ் கலையைப் பயின்றுள்ளார். ஹதீஸின் மீது பற்றும் அதனைச் சேகரிப்பதில் அதீத ஆர்வமும் கொண்டிருந்த காரண்த்தினால் இவர் ஹதீஸ் கலையைக் கற்றதுடன் நில்லாது, ஹதீஸ்துறை அறிஞர்களைத் தேடிப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்  பல நாடுகளுக்கும் பிரயாணம் செய்தார்.

 ஹதீஸ்களைக் கற்பதில் ஆறு வருடங்களை ஹிஜாஸில் கழித்த இமாம் புகாரீ, பக்தாதுக்கு மாத்திரம் 8 முறை விஜயம் செய்துள்ளார். ஒருமுறை இவர் பக்தாத் வந்தபோது அவரது நினைவாற்றலைப் பரீட்சித்துப் பார்க்க அங்கிருந்த அறிஞர்கள் விரும்பினர். எனவே அவர்கள் தமது 10 மாணவர்களை ஏற்பாடு செய்து, ஔவொருவருக்கும் பத்துப் பத்து ஹதீஸ்களைக் கொடுத்தனர். ஔவொரு ஹதீஸின் இஸ்னாதையும் பிறிதொரு ஹதீஸின் ம்த்னோடு இணைத்து இமாம் புகாரீக்கு வாசித்துக் காட்டுவதற்கும் ஏற்பாடு செய்தனர். அதன்படி ஔவொருவரும் ஹதீஸை வாசிக்க இமாம் புகாரீ, "இது நான் அறிந்த ஒன்று அல்ல என்றே பதிலளித்து வந்தார்கள்.

 கேள்விகள் யாவும் முடிவுற்ற பின்னர் இமாம் புகாரீ அமைதியாக, அவர்களால் கூறப்பட்ட ஒவ்வொரு ஹதீஸுக்குமுரிய அறிவிப்பாளர் தொடரைச் சரியாகக் கூறினார்.இமாம் அவர்களது நினைவாற்றல் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திற்று. இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ஒரு முறை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களதும், தனது ஆசிரியர் ராஹாவைஹி அவர்களதும் ஹதீஸ் தொகுப்புக்களைப் பார்த்துவிட்டு அவற்றில் சில ழஈஃபான ஹதீஸ்கள் இருப்பதை உணர்ந்து கொண்டார்கள். எனவே, முழுக்க முழுக்க ஸஹீஹான ஹதீஸ்களைக் கொண்ட தொகுப்பொன்றை மக்களுக்கு தொகுத்தளிக்க வேண்டும் என தனக்குள்ளேயே முடிவு செய்து கொண்டார்கள்.

 ஸஹீஹான ஹதீஸ்களைத் தேடி ஒன்றுதிரட்ட வேண்டும் என்ற ஆசை இமாம் புஹாரி (ரஹ்) அவர்களுக்கு இருப்பதை அறிந்து கொண்ட ராஹாவைஹி அவர்கள் புஹாரி அவர்களைப் பார்த்து, "ஸஹீஹான ஹதீஸ் மீது உமக்கிருக்கும் மோகத்தைப் பார்த்தால் நீரே தனியான ஹதீஸ் தொகுப்பொன்றை தொகுத்து வெளியிட்டு விடுவீர் போல் தெரிகிறதே" என்றார்கள். தனது ஆசிரியரின் இவ்வாறான ஆர்வமூட்டலே ஸஹீஹுல் புஹாரி தொகுப்பதற்கு மூல காரணமாக விளங்கியது என்று இமாம்  அவர்கள் ஒரு முறை கூறியுள்ளார்கள்.

 இவர் தனது 18வது வயதில் ஸஹீஹுல் புகாரீயைத் தொகுக்கத் தொடங்கினார். சுமார் 18 ஆண்டுகளில் அதனை நிறைவு செய்தார்.


 ஸஹீஹுல் புகாரீ

ஹதீஸ் துறையில் இமாமவர்களின் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படும் ஸஹீஹுல் புகாரீயில்  மொத்தமாக 7275 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இவை அவர் மனனமிட்டிருந்த 600 000 அறிவிப்புக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவையாகும். இமாம் புகாரீ இத்தொகுப்பை முதன்முதலில் கஃபாவில் வைத்துத் ஹ்டொகுக்க ஆரம்பித்தார். தொகுத்து முடிந்த பின்னர் மஸ்ஜிதுன் நபவியில் - நபியவர்களின் ரவ்ழாவுக்கும் மிம்பருக்கும் இடையில் வைத்து மூன்று முறை சரி பார்த்தார். மேலும் இவர் ஔவொரு ஹதீஸை எழுத முன்பும் குளித்துச் சுத்தமாகி இரண்டு ரக் அத்துகள் ஸுன்னத்துத் தொழுது கொள்வார். அதன் பின்னரே தனது தொகுப்பில் அந்த ஹதீஸை எழுதிக் கொள்வார். இவ்வாறு இமாம் புகாரீ தனது தொகுப்பைத் தொகுத்த காரணத்தினால், அல்குர்-ஆனுக்கு அடுத்த ஆதாரபூர்வமான நூலாக ஸஹீஹுல் புகாரீ முஸ்லிம்களால் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

 இமாம் புகாரீயின் அயராத முயற்சி, கடும் உழைப்பு, தியாகம் முதலாம் பண்புகள் காரணமாக ஸஹீஹான ஹதீஸ்களை இன்று எம்மால் மிக இலகுவாகப் பெற முடிகின்றது.  

 இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இவ்வளவு பெரும் தொண்டாற்றிய  இமாம் புகாரீ இறுதியாகத் தனது சொந்த ஊரான புகாராவுக்குத் திரும்பி வந்தார். அங்கு வந்தபோது அவரது ஸஹீஹான தொகுப்பைப்பற்றிக் கேள்வியுற்ற புகாராவின் கவர்னர், அதைத் தனது அவைக்குக் கொண்டுவந்து வாசித்துக்காட்டுமாறு கேட்டுக்கொண்டபோதும் இமாம் புகாரீ இவ்வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதலால் புகாரா கவர்னர் இமாம் புகாரீயை அவ்வூரிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

 புகாராவிலிருந்து வெளியேறிய இமாமவர்கள் ஸமர்க்கந்தை அடுத்துள்ள "கர்தங்கு" எனும் ஊரை வந்தடைந்து சில காலம் வாழ்ந்து, ஹிஜ்ரி 256ல் நோன்புப் பெருநாள் இரவில் வபாத்தானார்.

 (219112 NIE)

3 கருத்துகள்:

  1. மிகவும் நன்றான பாடம் சார்பான தகவல்களை கண்டறிய உதவியாக உள்ளது,மேலும் பல விடயங்களை உம்மிடமிருந்து எதிர்ப்பர்க்கின்றேன்...

    ASHRAF...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோதரரே. உங்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப விடயங்களை வளங்க முயற்சி செய்கிறோம்.

      நீக்கு
  2. islaththai nesikkum ellorukkum padippinai tharum intha paguthi enakku romba pidiththirukkinrathu.

    பதிலளிநீக்கு