சனி, 28 ஜனவரி, 2012

முஸ்லிம்களும் கிரேக்கப் பண்பாடும்

ரோம அரசன் அலெக்சாண்டர் ஆசிய, ஆபிரிக்க நாடுகளைக் கைப்பற்றியமை கிரேக்க கலாசாரம் கீழைத்தேய நாடுகளில் பரவ வழிவகுத்தது. மூன்று கண்டங்களையும் உள்ளடக்கி வியாபித்துப் பரவிய அலெக்சாண்டரின் சாம்ராஜ்யமானது ஐரோப்பாவில் கிறீஸ், மஸிடோனியா ஆகிய நாடுகளையும், ஆபிரிக்காவில் எகிப்து, லிபியா ஆகிய பிரதேசங்களையும் ஆசியாவில், சிரியா, பலஸ்தீனம், ஈராக், பாரசீகம், துருக்கிஸ் தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில பிரதேசங்களையும் உள்ளடக்கியிருந்தது.

அவர் தனது ஆட்சிக்கு உட்பட்ட இந்த நாடுகளுக்கும் கிரேக்க நாட்டுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, கிரேக்க இனத்தவரையும் ஆசிய இனத்தவரையும் கலாசார நாகரிகத் துறையில் ஒன்று கலக்கச் செய்வதே அவரது கொள்கையாக அமைந்தது. இந்த நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில் அவர், கிரேக்கர்களை இப்பிரதேசத்தில் குடியேறி, அங்கு வாழும் மக்களுடன் இரண்டரக் கலந்து உறவாடி அப்பகுதிகளில் நகரங்களையும் கிரேக்க மரபை ஒட்டி அமைக்கும் படியும் தூண்டினார். மேலும், கிரேக்கப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பரப்பும்படி அறிஞர்களுக்கு ஆர்வமூட்டினார்.

அலெக்சாண்டரைத் தொடர்ந்து அவரது பரந்து விரிந்த இராச்சியத்தின் கிழக்கத்தய பகுதியைப் பரிபாலனம் செய்த அதிகாரிகளும் அந்தக் கொள்கையைப் பூரணமாக அடியொற்றி செயலாற்றினர். இதனால், அலெக்சாண் டரின் காலப்பிரிவில் இப்பிரதேசங்களில், குறிப்பாக யூப்பிரதீஸ் (புராத்) தைகிறீஸ் (தஜ்லா) நதிகளுக்கிடைப்பட்ட பிரதேசங்களில் கிரேக்கப் பண்பாடு மிக சக்தியோடு பரவியது. கிரேக்கர்கள் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறிய பிறகுகூட அவர்களது கலாசாரச் செல்வாக்கு இப்பிரதேசங்களில் தொடர்ந்து பரவியது.

இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் இப்பிரதேசங்களில் கிரேக்கக் கலாசாரத்தின் மத்திய தலங்களாக பல்வேறு நகரங்கள் தோற்றமெடுத்தன. இந்த மத்திய தலங்களுக்குள் ஜுன்திஸா பூர், ஹர்ரான், அலெக்ஸாந்திரியா ஆகிய மூன்றும் முக்கிய இடம் பெறுகின்றன.

ஜுன்திஸாபூர்

இது முதலாம் ஷாபூர் என்னும் மன்னனால் குஸிஸ்தான் (Khuzistan) என்னுமிடத்தில் நிறுவப்பட்ட நகர மாகும். இதனை அவர் ரோமச் சிறைக் கைதிகளின்  தங்குமிடமாக ஆக்கினார். இதுவே ஒருவேளை பிற்காலப் பிரிவில் கிரேக்க கலாசாராத்தின் ஒரு முக்கிய தலமாக ஆகியிருக்கலாம். இங்கு பாரசீக மன்னன் கிஸ்ரா அனூ ஷர்வான் புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியை நிறுவினான். இங்கு ஆராமிய (Aramaia) மொழியில்  கிரேக்கக் கலைகள் போதிக் கப்பட்டன. முஸ்லிம்கள் பாரசீகத்தைக் வென்றபோது இந்நகரத்தையும் கைப்பற் றினர். ஜுன்திஸாபூர் மருத்துவக் கல்லூரி அப்பாஸியர் காலப் பிரிவுவரை நிலைத் திருந்தது. இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் அரபு மருத்துவரான ஹாரித் பின் கல்தா  ஜுன்திஸாபூரில் மருத்துவக் கலையைப் பயின்றார். இக்கல்லூரியில் கிரேக்கக் கலைகளோடு, இந்தியக் கலைகளும் போதிக்கப்பட்டன. பஹ்லவி மொழியைப் போதிப்பதில் சில இந்தியர்கள் பணிபுரிந்தனர்.

பாரசீகர்களின் காலப் பிரிவைப் போன்றே, முஸ்லிம்களின் காலப் பிரிவிலும் ஜுன்திஸாபூர் தொடர்ந்து நிலைத்திருந்தது. அப்பாஸிகளின் ஆட்சிக் காலப் பிரிவில் முஸ்லிம்களுக்கும் இக்கலாநிலையத்திற்குமிடையிலுள்ள தொடர்பு அதிகரித்தது. அப்பாஸிய கலீபா மன்சூர் பக்தாத் நகரைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது வயிற்றில் ஒரு நோய் ஏற்பட்டது. அவரது மருத்துவர்களால் அதனைக் குணப்படுத்த முடியாத நிலை தோன்றியது. அதன் பின்னர் ஜுன்திஸாபூர் மருத்துவர்களின் தலைவரான ஜுர்ஜீஸ் இப்னு பக்திஷு (Jurjis Ibn Bakthishu) என்னும் மருத்துவர் அவரது நோயைக் குணப்படுத்தினார். அப்பொழுதிலிருந்து அப்பாஸிய அரண் மனைக்கும் ஜுன்திஸாபூர் மருத்துவக் கல்லூரிக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டது. அப்பாஸிய கலீபா ஹாரூன் அர்ரஷீத், ஜுன்திஸாபூர் மருத்துவ நிலையத்தைப் போன்ற அமைப்பில் பக்தாதிலும் ஒன்றை நிறுவும்படி ஜிப்ரீல் பின் பக்திஷு என்பாரைப் பணித்தார். இம்மருத்துவ நிலையத்தில் ஜுன்திஸா பூர் மருத்துவ அறிஞிர்களும், அவர்களது மாணவர்களுமே பணிபுரிந்தனர். அப்பாஸியர்களின் காலப்பிரிவில் ஜுன்திஸாபூர் மருத்துவ நிலையத்தில் கலீபா மன்ஸுரின் மருத்துவர் ஜுர்ஜிஸ் இப்னு பக்திஷு, கலீபா ஹாரூன் ரஷீதின் மருத்துவராக இருந்த அவரது புதல்வர் பக்திஷு, கலீபா மஃமூனின் மருத்து வரான ஜிப்ரீல் இப்னு பக்திஷு ஆகியோர்  பணிபுரிந்தனர். இவர்கள் அனைவரும் நெஸ்தோரிய கிறிஸ்தவர்களாக விளங்கினர்.

ஹர்ரான் (Harran)

ஹர்ரான் ஈராக்கின் வடபகுதி யிலுள்ள ஒரு மிகப் பிரதான நகரமாகும். கிரேக்கர்கள், ரோமர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் வரலாற்றின் பல்வேறு காலப்பிரிவுகளில் இந்நகரோடு தொடர்பு கொண்டிருந்தனர். அலெக்சாண்டரின் காலப்பிரிவில் மஸிடோனியர்களில் பெரும்பானோர் ஈராக்கின் இந்த வட பகுதியில் வாழ்ந்தனர். கிறிஸ்தவ மதம் ரோம இராச்சியத்தின் உத்தியோகபூர்வமான மதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதும், இவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இணையும் படி வற்புறுத்தப்பட்டனர். ஆனால், இம்முயற்சியில் கிறிஸ்தவர்கள் தோல்வி கண்டனர். எனவே, காலப்போக்கில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ விரும்பாது தப்பி வந்த கிரேக்கர்களும், வேறு இனத்தவரும் இங்குவந்து குடியேறினர். ஹர்ரானில் வாழ்ந்தவர்களது மதம் பழைய பாபிலோனிய மத நம்பிக்கை கள், கிரேக்க மத நம்பிக்கைகள், நியோ பிளேட்டோனிஸ கோட்பாடுகள் ஆகியவற்றின் கூட்டுக் கலவையாகக் காணப்பட்டது. இஸ்லாமிய காலப் பிரிவிலிலும், அப்பாஸிய கலீபா மஃமூனின் காலப்பிரிவு வரையிலும் இந்நிலையிலேயே இந்நகரம் இருந்தது. இக்காலப் பிரிவில் அவர்கள், ஸேபியர் (Sabians) என அழைக்கப்பட்டனர்.

ஹர்ரான் கிரேக்கப் பண்பாட்டின் மத்திய நிலையங்களுள் ஒன்றாக விளங்கியது. ஜுன்திஸாபூருக்கும், அப்பாஸிய கலீபாக்களுக்குமிடையில் தொடர்பு ஏற்பட்ட பின்னர் ஹர்ரானுக் கும் அவர்களுக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டது. இவ்வாறு அப்பாஸிய ஆட்சியாளர்களுடன் முதன் முதல் தொடர்பு கொண்டவராக தாபித் இப்னு குர்ரா (ஹிஜ்ரி 221288) விளங்கினார். அதனைத் தொடர்ந்து அவர்கள் அப்பாஸிய கலீபாக்களுட னும், புவைஹித் ஆட்சியாளர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இவ்வாறு தொடர்பு கொண்ட ஹர்ரானியர்களுள் வானநூல் அறிஞிரான தாபித் இப்னு குர்ரா, மருத்துவ அறிஞிர் இப்னு ஸினான், வானநூல் அறிஞிர் அல் பத்தானீ, கணித நூல் அறிஞிர் அபூஜஃபர் அல் காதின் ஆகியோர் புகழ் பெற்றோராவர்.

ஜுன்திஸாபூரின் செல்வாக்கு மருத்துவத்துறையிலும் ஹர்ரானின் செல்வாக்கு கணிதம், வானவியல் ஆகிய துறைகளிலும் சிறப்பாகக் காணப்பட்டது. ஹர்ரானியர் நட்சத்திங்களை வணங்குவோராக விளங்கியமை வானவியல் துறையில் அவர்களது வளர்ச்சிக்கு ஒரு காரணமாகும்.

அலெக்ஸாந்திரியா

கிரேக்கர்களின் காலப்பிரிவில் அலெக்சாந்திரியா எகிப்தின் தலைநகர மாக விளங்கியது. அலெக்சாந்திரியக் கோட்பாடு, அல்லது நியோபிளேட்டோ னியக் கோட்பாடு எனப்பட்ட தத்துவக் கோட்பாடு இங்குதான் தோன்றி வளர்ச்சியடைந்தது. இந்தக் கோட் பாட்டை நிறுவியவராக எகிப்தியரான புளோடினஸ் (Plotinus) (கி.பி. 205225) கருதப்படுகின்றார். இவர் தோற்றுவித்த தத்துவ மரபு (Philosophical school) பெரும்பாலும் கிரேக்கத் தத்துவார்த் தத்தின் அடிப்படையிலேயே எழுப்பப் பட்டுள்ளது. அதன்  அடிப்படைக் கோட்பாடுகள் பிளேட்டோ, அரிஸ்டோடில் ஆகியோரின் தத்துவங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.

சடவாதத்திற்கு எதிராக ஆத்மாவுக்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒரு தத்துவமாக இது விளங்கியது. இவரது தத்துவம் ரோம சாம்ராஜ்யத்தில் இரண்டரை நூற் றாண்டு காலமாகச் செல்வாக்குப் பெற்று விளங்கியது. கி. பி. 529ம் ஆண்டு ரோம மன்னன் ஜஸ்டினியன் பதவிக்கு வந்ததும் எதென்ஸிலுள்ள இத்தத்துவக் கல்லூரி களை மூடும்படி உத்தரவிட்டு தத்துவ ஞானிகளின் கருத்துப் பிரசாரங்களுக்கு அவர் தடைவிதித்தார்.

அலெக்ஸாந்திரிய அறிவு நிலையம், தத்துவத்துக்கு  மாத்திரமன்றி இலக்கியம், அறிவியல் கலைகள் ஆகிய வற்றைப் பொறுத்தளவிலும் புகழ் பெற்று விளங்கியது. ரோமர்களின் ஆட்சியின் போது கிறிஸ்தவ மதம் அலெக் ஸாந்திரியாவில் பரவியது. கிறிஸ்தவ மதம் இங்கு கிரேக்கத் தத்துவத்தோடு இணைந்து செயல் பட்டது. ஈஸா (அலை) வின்  இயற்கைத் தன்மை, அவரது தெய்வீகத் தன்மை, இறைவனுக்கும் ஈஸாவிற்குமிடையிலான தொடர்பு என்பன பற்றி கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றி, பல உட்பிரிவுகள்  அவர்கள் மத்தியில் உருவாகின. அவர்கள் தர்க்க ரீதியாக தங்கள் கருத்துக்களை நிறுவுவதற்காக கிரேக்கத் தத்துவ ஞானத்தின் துணையை நாடினர். இங்கு கிறிஸ்தவ மதமும், கிரேக்க தத்துவ ஞானமும் இணைந்தது. இத்தகைய கிறிஸ்தவ மதமே கிழக்கில் பரவியது. நெஸ்தோரியர்களே இந்தக் கிறிஸ்தவ மதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தினார் கள். அவர்கள் தங்களது போதனைகளை ஸிரியக்  (Syriac) மொழியில் மேற் கொண்டனர். அவர்களது போதனைகளும் கோட்பாடுகளும் கிழக்கில் பரவின. இவர்களே கிரேக்க மொழியிலுள்ள நூல்களை ஸிரியக் மொழியில் பெயர்த்தனர்.

இதுவரை நாம் விளக்கிய கிரேக்க, பாரசீக பண்பாட்டு மத்திய நிலையங்கள் பற்றிய விளக்கமும், அவற்றிடை நிகழ்ந்த கலாசாரப் பண்பாட்டுப் பரிவர்த்தனை களும் முஸ்லிம்களின் கலாசாரம், பண்பாடு, நாகரீக வளர்ச்சியோடு தொடர்புடைய (மயக்கமும், தெளிவு மற்ற) சில வினாக்களுக்குப் பொருத்த மான விடைகளாக அமைகின்றன.

பாரசீரகர்களுக்கும் கிரேக்க கலாசாரத்திற்கும் எவ்வகையில் தொடர்பு ஏற்பட்டது? கிழக்குலகில் அங்கும் இங்குமாகப் பரவியிருந்த ஒன்றுக்கொன்று வித்தியாசமாகக் காணப்பட்ட இந்தப் பண்பாட்டு நிலையங்கள் கிரேக்கப் பண்பாட்டின்  பரவலுக்கான மூல ஊற்றுக்களாக எவ்வாறு விளங்க முடிந்தது? முஸ்லிம்க ளுக்கும் கிரேக்க கலாச்சாரத்திற்கு மிடையில் எவ்வகையில் தொடர்பு ஏற்பட்டது? ஏன் ஆரம்பகால மொழி பெயர்ப்புக்கள் ஸிரியக் மொழியிலி ருந்தும் கிரேக்க மொழியிலிருந்தும் பெயர்க்கப்படும் முயற்சிகளாக அமைந் தன? என்பன போன்ற வரலாற்று வினாக்களுக்கான தெளிவை இப்போது நாம் பெற முடிகின்றது.

உமையாக்களது காலப்பிரிவிலேயே முஸ்லிம்களுக்கும் அலெக்ஸாந்திரிய கலாநிலையத்திற்குமிடையில் தொடர்பு ஏற்பட்டது. காலித் பின் யஸீத் பின் முஆவியாவின் வேண்டுகோளின் பேரில் அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த இஸ்தபன் அல் இஸ்கந்தர் என்பவர் சில நூல்களை மொழி பெயர்த்தார். இப்னு அப்ஜர் எனும் அலெக்ஸாந்திரியாவின் மருத்துவர் உமையா கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸின் அனுசரணையோடு இஸ்லாத்தைத் தழுவினார். அவர் உமர் இப்னு அப்துல் அஸீஸின் தோழராகவும், மருத்துவராகவும் விளங்கினார்.

அப்பாஸியாக்களின் காலப்பிரிவில் அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த சில அறிஞிர்களுக்கும் அப்பாஸியர்களுக்கு மிடையில் தொடர்பு நிலவியது. பலிதியான் (Balitian) எனும் அலெக்ஸாந் திரிய நெஸ்டோரிய மருத்துவருக்கும் அப்பாஸிய கலீபாக்களான மன்ஸூர், ஹாருன் ஆகியோருக்குமிடையில் தொடர்புகள் காணப்பட்டதை வரலாற்றுக் குறிப்புக்கள் உணர்த்து கின்றன. ஆனால், ஜுன்திஸாபூர், ஹர்ரான், ஆகிய கலாநிலையங்களுக்கும் அப்பாஸியர்களுக்கும் அலெக்ஸாந்திரிய கலாநிலையத்தைவிட நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. அவையிரண் டும் அப்பாஸிய காலப்பிரிவின் கலாசார வளர்ச்சியில் ஏற்படுத்திய செல்வாக்கை அலெக்ஸாந்திரிய கலாநிலையம்  ஏற்படுத்தவில்லை.

அலெக்ஸாந்திரி கலாநிலையம் அமைந்திருந்த எகிப்துப் பிரதேசம் அப்பாஸியர்களின் தலை நகரான பக்தாத் இருந்த ஈராக் பிரதேசத்திலிருந்து தூரத்தில் இருந்த மையும், ஹர்ரான், ஜுன்திஸாபூர் ஆகிய இடங்கள் அவர்களுக்கு மிக அண்மையில் காணப்பட்டமையும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம். மேலும், அலெக்ஸாந்திரிய கலாநிலையம் மறைவான, நுட்பமான கலைகள், தத்துவவிசாரணைகள் பற்றிய துறை களிலேயே அதிக ஈடுபாடு காட்டியது. ஆனால் ஈராக்கில் காணப்பட்ட ஹர்ரான், ஜுன்திஸாபூர் கலாநிலை யங்கள் வாழ்க்கைக்கு நேரடியாகத் தொடர்புடைய, பயன்பாடுடைய கலைகளில் கரிசனை செலுத்தின. இளமைத் துடிப்புடன் வளர்ச்சியடைந்து வரும் அப்பாஸிய ஆட்சியைப் போன்ற ஒரு ஆட்சியின் கொள்கைப் போக்கிற்கு இணங்கியதாக இவ்விரு கலாநிலையங்க ளும் காணப்பட்டதும் ஒரு காரணியாகக் கருதப்பட இடமுண்டு. இஸ்லாத்தின் தோற்றத்திற்குச் சிறிது காலத்திற்கு முன்னரே அலெக்ஸாந்திரயக் கலாநிலை யம் தளர்ச்சியடைந்து அது தனது பொலிவை இழந்தது. அதன் அறிஞிர்கள் ஒடுக்கப்பட்டு நூல்நிலையம் எரிக்கப் பட்டது. இதனால் அவர்களில் பெரும் பாலானோர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். இவ்வாறு இக்கலா நிலையத்தின் தேய்வு நிலையிலேயே அப்பாஸிய நாகரிகம் வளர்ச்சியடைய ஆரம்பித்ததனால் அதன் செல்வாக்கு அதன் உரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெறவில்லை.

நெஸ்தோரியக் கிறிஸ்தவர்கள் கிரேக்கர்களின் பல நூல்களை மொழி பெயர்த்தனர். இந்த நூல்கள் கிரேக்க மொழியிலிருந்து ஸிரியக் மொழிக்குப் பெயர்க்கப்பட்டன. அவர்களுக்கும் அரபிகளுக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டதும் இந்நூல்களை ஸிரியக் மொழியிலிருந்து அரபி மொழிக்குப் பெயர்க்கவும் இவர்களே ஆரம்ப முன்னோடிகளாக விளங்கினர். ஆனால், நெஸ்தோரியர்கள், யஃகாபியர்கள் (Jacobites) ஆகியோரால் மேற்கொள்ளப் பட்ட இம்முயற்சிகள் வெறுமனே மூல நூல்களின் மொழி பெயர்ப்புக்களாக மட்டுமே அமைந்தன.

அவற்றில் எத்தகைய புதிய கருத்துக்களையோ, சிந்தனைகளையோ அவர்கள் சேர்க்க வில்லை. மேலும், மூல நூல்களின் கருத்துக்களைத் தழுவிய நுட்பமான மொழிபெயர்ப்பு முயற்சிகளையும் அவை கொண்டிருக்கவில்லை. சிலபோது கருத்துச் சிதைவுகளும், பொருள் பேதங்களும் இம்மொழி பெயர்ப்புகளில் காணப்பட்டன. ஆனால், அரபு முஸ்லிம்கள் இத்துறையில் மிகுந்த சுயசிந்தனையும் படைப்பாற்றலும் மிக்கவர்களாக விளங்கினர்.

இக்காலப்பிரிவில் அரிஸ்டோடிலின் முக்கிய ஆக்கங்களும் அலெக்ஸாந்திரிய அறிஞிர்கள் அந்நூல்களுக்கு எழுதிய விரிவுரைகளும் அரபியில் பெயர்க்கப் பட்டன. பிளேட்டோவின் சில நூல்களும், கலென் (Galen) எழுதிய மருத்துவ நூல்களும் சுருக்கமாகக் கூறின் அறிவியல், தத்துவப் பிரிவில் கிரேக்கப் பாரம்பரியத்தின் முக்கிய நூல்கள் அனைத்தும் அரபியில் பெயர்க்கப் பட்டன. இம்மொழிபெயர்ப்புப் பணியினை நாம் பின்வரும் அடிப்படை யில் வகுத்து நோக்கலாம்:

1.  அப்பாஸிய கலீபா மன்ஸூரின் காலப்பிரிவு முதல் ஹாரூன் ரஷீதின் காலப் பிரிவு வரை (ஹிஜ்ரி 136193)

இக்காலப் பிரிவில் பாரசீகத்தி லிருந்து கலீலா வதிம்னா, சமஸ்கிருதத்தி லிருந்து ஸிந்த் ஹிந்த் (Sind Hind) கிரேக்க மொழியிலிருந்து அரிஸ்டோட்டி லின் தர்க்கம் பற்றிய நுல்கள், வானவியல் பற்றிய அல் மஜஸ்த் ஆகிய நூல்கள் அரபியில் பெயர்க்கப்பட்டன. இக்காலப் பிரிவில் முக்கிய மொழி பெயர்ப் பாளர்களாக இப்னுல் முகப்பா, ஜுர்ஜிஸ் இப்னு ஜிப்ரஈல், யூஹன்னா, இப்னு பாஸவைஹி ஆகியோர் விளங்கினர். பின்னைய இருவரும் கிறிஸ்தவ மருத்துவர்களாவர். இக்காலப் பிரிவிலேயே முஃதஸிலாக்கள் இம் மொழிபெயர்ப்பு நூல்களில் பரிச்சயம டைந்தனர். அவர்களின் முன்னோடி களில் ஒருவரான அன்நஸ்ஸாம் (An-Nazzam) அரிஸ்டோட்டிலின் சில தத்துவக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு, கிரேக்க தர்க்கக் கலையின் செல்வாக்கிற்கு உட்பட்டார். இதன் அடிப்படை யிலே ஜவ்ஹர், அல் அர்ள் ஆகிய அம்சங்கள் பற்றி அவர்கள் விளக்க ஆரம்பித்தனர்.

2.  மஃமூனின் காலப் பிரிவு       (ஹிஜ்ரி 198300)

இக்காலப் பிரிவில் மிகப் புகழ் பெற்ற மொழி பெயர்ப்பாளராக யூஹன்னா அல்லது யஹ்யா அல்பத்ரிக் என்பவர் விளங்கினார். இவரிடம் மருத்துவத்தை விட தத்துவமே மிகைத்திருந்தது. இவர் அரிஸ்டோட்டிலின் பல நூற்களை மொழி பெயர்த்தார். கஸ்தா இப்னு லூகா, அப்துல் மஸீஹ் இப்னு நாஇமா, ஹுனைன் இப்னு இஸ்ஹாக், அவரது புதல்வர் இஸ்ஹாக் இப்னு ஹுனைன், தாபித் இப்னு குர்ரா ஆகியோர் இக்காலப் பிரிவின் முக்கிய மொழி பெயர்ப்பாளர்களாக விளங்கினர். இக்காலப் பிரிவில் அனைத்துக் கலைகளையும் தழுவிய கிரேக்க நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன. அல் மஜஸ்த், பிளேட்டோவின் அரசியல், அரிஸ்டோட்டிலின் Metaphysic ஆகிய நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன.

மொழிபெயர்ப்பின் மூன்றாம் கட்டம்

இக்காலப் பிரிவில் முக்கிய மொழி பெயர்ப்பாளர்களாக மத்தா இப்னு யூனுஸ், ஸனான் இப்னு தாபித் இப்னு குர்ரா (மர.360) யெஹ்யா இப்னு அதீ (மர. 364) இப்னு தர்ஆ (398)  ஆகியோர் விளங்கினர். அரிஸ்டோட்டி லின் தர்க்கம், தத்துவம் பற்றிய முக்கிய நூல்கள் இக்காலப் பிரிவில் பெயர்க்கப் பட்டன. முஸ்லிம்கள் ரோம, கிரேக்க, பாரசீக, இந்திய கலாசாரங்களை எதிர்கொண்டு அவற்றில் தங்களுக்குப் பயனுள்ளவைகளையும், இஸ்லாமிய உலக நோக்கிற்கு இணைந்தவைகளை யும் தம்மோடு இணைத்துக் கொண்டனர்.

முஸ்லிம்கள் பிற கலாசாரங்களை யும்  அறிவுப் பாரம்பரியங்களையும் பாதுகாத்து, உலகிற்கு வழங்கியதே அவர்கள் செய்த பெரும் பங்களிப்பாகும் எனச் சிலமேற்கத்திய வரலாற்றாசிரியர் கள் விளக்க முயற்சிக்கின்றனர். முஸ்லிம்கள் கிரேக்க, பாரசீக, இந்திய அறிவியல் நூல்களின் மொழி பெயர்ப்புப் பணிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்ததே அவர்கள் அறிவுத் துறைக்கு ஆற்றிய ஒரே பணியாகும் என்ற கருத்தை ஏற்படுத்தி, அவர்களது அறிவியல், கலாசார, பண்பாட்டுப் பங்களிப்பை மிகக் குறைத்து மதிப்பீடு செய்வதே மேற்கத்தய வரலாற்றாசிரியர்களின் நோக்கமாக உள்ளது.

முஸ்லிம்கள் தங்களது மொழி பெயர்ப்புப் பணிகள் மூலம் கிரேக்க, பாரசீக, இந்திய அறிவியல் பாரம் பரியத்தை அழியாது பாதுகாத்து உலகிற்குப் பெரும் பங்களிப்பைச் செய்தனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில், அவர்களது மொழி பெயர்ப்பு முயற்சிகள் மட்டும் இல்லையெனில் கலென், டொலமி, அரிஸ்டோட்டில் போன்றோரின் படைப்புக்களை உலகம் அறிந்திருக்கவே வாய்ப்புக் கிடைத்தி ருக்காது. கி. பி. 750850 க்குமிடையில் நடைபெற்ற மொழி பெயர்ப்பு முயற்சிகளைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மிகப் பாரிய அறிவியல் ஆக்கங்களை உருவாக்கினர். இதனை பேராசிரியர் ஹிட்டி பின்வருமாறு  விளக்குகின்றார்:

“This long and fruitful age of translation under the early abbasides was followed by one of original contributions and creative activity”
(Hitty History of Arabs P.363) 
அப்பாஸியாக்களின் ஆட்சியில் இந்த நீண்ட, பயனுள்ள மொழி பெயர்ப்புப் பணியின் காலப்பிரிவை, அவர்களது ஆக்கபூர்வமான பணிகளைக் கொண்ட ஒரு காலப் பிரிவு தொடர்ந்தது.

முஸ்லிம்களது மொழிபெயர்ப்புகளும் அவர்களது சுதந்திரமான சுய ஆக்கங்களும் சிரியா,ஸ்பெய்ன் மற்றும் ஸிஸிலியினூடாக ஐரோப்பாவைச் சென்றடைந்து மத்தியகால ஐரோப்பிய சிந்தனை வளர்ச்சியில் மிகக் காத்திரமான செல்வாக்கை ஏற்படுத்தின.

இஸ்லாமிய கிரேக்க பாரசீக நாகரிகங்களுக்கிடையிலான இந்தத் தொடர்பும் உரையாடலும் ஓர் உண்மையை உணர்த்தி நிற்கின்றது.அதுதான் மனித நாகரிகம் என்பது ஒன்றைத் தொடர்ந்து சங்கிலித் தொடராக வந்த பல இனங்கள்,சமூகங்கள்,கலாசாரங்கள்,பண்பாடுகளது பங்களிப்பின் ஒட்டுமொத்த சாதனையாகும் என்ற வரலாற்றுண்மையாகும்.

 உசாத்துணைகள்

1.  Hitty, History of Arabs, London. 1958
2.  Alfred Guilane, The legacy of Islam,  1951.
3.  Montgomery wath, The majesty that was Islam, London. 1974
4.  Nasr, S. H. Science and Civilization in Islam, Lahore, 1983.
5.  De Lacy o’leavy, How Greak Science passed to the Arabs, London

கலாநிதி: எம்.ஏ.எம். சுக்ரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக