சனி, 28 ஜனவரி, 2012

வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் பலர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் – குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர்

Thabligiநாட்டைவிட்டு வெளியேறுமாறு வெளிநாடுகளைச் சேர்ந்த 161 தப்லீக் ஜமாஅத்தினர்
வேண்டப்பட்டிருந்தனர். இவர்களுள் கணிசமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 23 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என அவர்களுக்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

உரிய நாளுக்கு முந்திய இரவே இவர்களுள் அதிகமானோர் வெளியேறிவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இங்கு தற்போது வருகை தந்தோருள் அதிகமானோர் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களுமாவர்.
‘‘இவர்கள் முறையான விஸா ஒழுங்கைப் பின்பற்றவில்லை. மத நிகழ்ச்சிகளுக்காக வருவதாயின் அதற்குப் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் குறித்து அவர்களுக்கு நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்‘‘ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் சுற்றுலா விஸா மூலமே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். உரிய விஸா நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதோடு, தாம் இங்கு வந்த உண்மையான நோக்கத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. நாம் எமது புலனாய்வு அணியை அனுப்பி இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று விசாரித்தோம். ஆனால், அவர்கள் தங்குவதாக குறிப்பிட்ட இடத்தில் தங்காமல் வேறு இடங்களில் தங்கியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
தப்லீக் ஜமாஅத் பணிகளை முன்னெடுப்பதற்காக இங்கு வரும் வெளிநாட்டவர்கள் பின்பற்ற வேண்டிய விஸா ஒழுங்கு முறைகள் குறித்து விசேடமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை உரிய முறையில் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் தெரியவருகிறது.
இந்தப் பிரச்சினை தற்போது சுமுகமாகத் தீர்ந்துள்ளது என மர்கஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி: மீள்பார்வை (25 ஜனவரி 2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக