பாலிகா வித்தியாலய மாணவிகளின் கலை விழா
மூன்று மாடிக் கட்டிடம் பெற்றுத் தருவேன் - முதலமைச்சர்
கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய மாணவிகளின் கலை விழா இன்று (03.04.2010) இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண சபையின் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் வருகை தந்தார்கள்.
காலை 10.00 மணிக்கு வருவதாக இருந்த பிரதம அதிதி, கௌரவ முதலமைச்சர் அவர்கள், மிகவும் தாமதித்து, பி.ப. 1.00 மணி நெருங்கிய வேளையிலேயே வருகை தந்தார். காலையில் வர இருந்த இவரை எமது ஊரைச் சேர்ந்த சில சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் தடுக்க முயற்சி செய்ததாகவும் இதை அறிந்து கொண்ட பாலிகா SDS உறுப்பினர்கள் மிகவும் சிரமப்பட்டு மீண்டும் முதலமைச்சருடன் கதைத்த பின்னரே தாமதமாக வருகை தந்ததாகவும் SDS வட்டாரத்தை ஆதாரம் காட்டி நம்பத்தகுந்த சிலர் தெரிவித்தனர். இதற்கு முன்னர் ஒரு தடவை மாகாண சபை உறுப்பினரான கோகிலா குணவர்தன அவர்களது வருகையையும் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் இதன் போது சுட்டிக் காட்டப்பட்டது.
எது எவ்வாறாயினும், பாடசாலையின் வளப்பற்றாக்குறையை நிவர்த்திக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் இவ்வருடத்துக்குள் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் முதல் மாடியைக் கட்டுவதற்கான நிதியை ஒதுக்குவதாகவும் முதலமைச்சர் வாக்களித்தார்.
அத்துடன், அமைச்சரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான கௌரவ பண்டு பண்டாரனாயக அவர்களினால் பாடசாலையின் நூலகத்துக்காக ரூ. 100,000.00 நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அதிபர் புஹாரி உடயார் மேற்கொண்ட தனி முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும்.
மௌலவி M.S. அப்துல் முஜீப் (கபூரி) அவர்களின் முயற்சியால், சவூதி அரேபிய தனவந்தர் ஒருவரின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் இரண்டு மாடிக் கட்டடத்தின் வேலைகளும் நடைபெற்று வரும் இவ்வேளயில், இந்த அபிவிருத்தி உதவிகளும் கிடைத்திருப்பது பாலிகா வித்தியாலயத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எனவே, எல்லாம் வல்ல இறைவனின் அருளினால், கம்பஹா மாவட்டத்தின் ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையான பாலிகாவை சிறந்ததொரு கல்லூரியாக அபிவிருத்தி செய்வதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக இதனை நாம் கொள்ளலாம் என பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
பாடசாலையை அபிவிருத்தி அடையச் செய்வதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கின்ற ஆசிரியர் குழாமை இத்தால் பாராட்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக