வியாழன், 22 ஏப்ரல், 2010

வீதி ஒழுங்குகள் பேணப்பட வேண்டும்!

பாடசாலைகளுக்குச் சென்று வருவதற்கோ அல்லது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்று வருவதற்கோ மாணவிகள் தனித்துச் செல்வதில்லை. அவர்கள் கூட்டமாகவே சென்று வருவார்கள். இது எமது ஊரில் மாத்திரமன்றி எல்லா இடங்களிலும் பொதுவாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

இது ஒன்றும் தவறான செயலல்ல. ஆனால், எமது ஊர் தங்கைகள் வீதிகளில் நடந்து செல்லும் விதம் பற்றி அந்நிய இனத்தவர் இருவர் பஸ்ஸில் கதைத்துக் கொண்ட விதம் கவலையளித்தது.

கூட்டமாகச் செல்லும் எமது தங்கைகள், ஒருவர் பின் ஒருவராகச் செல்லாமல், வீதிக்குக் குறுக்காக, தோள் பட்டைக்கு நேராக, வீதியின் அகலத்துக்கு வரிசையாகச் செல்வதாகவும் இதனால் வீதியில் செல்லும் ஏனைய மனிதர்களுக்கும் வாகனங்களுக்கும் அது இடைஞ்சலாக இருப்பதாகவும் அவர்கள் அலுப்புடன் கதைத்துக் கொண்டனர். அத்துடன்,  குடைகளையும் விரித்துப் பிடித்துக் கொண்டு, கதையளந்த வண்ணம், அன்ன நடை பயிலும் இவர்கள், வீதியில் செல்லும் ஏனையவர்களைப் பற்றி சற்றேனும் சிந்திக்காமல் தமது போக்கிலேயே செல்வதாகவும் அவர்கள் கூறிக் கொண்டதுடன் ஊரிலுள்ளோர் இந்த விடயத்தில் ஏன்தான் கவனம் செலுத்தாமல் இருக்கின்றார்களோ என்று கேள்வியும் எழுப்பினர்.

எனவே, மாணவ மணிகளே, வீதியின் ஒழுங்குகளைப் பேணி, உங்களையும் எமது மண்ணையும் இவ்வாறான குற்றச்சாடுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வோம்.

பெற்றோர்களே, பொறுப்பளர்களே, உங்கள் பொறுப்பிலுள்ள பிள்ளைகளுக்கு வீதியில் செல்லும் முறைகள் பற்றி அறிவூட்டுவதுடன், சொன்னபடி செயல்படுகிறார்களா என்பதையும் கவனித்து வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக