செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பலஸ்தீன் - தொடரும் இஸ்லாமிய வரலாறு

கலீபா உமர் (ரலி) யிடம் ஜெரூஸலம் வீழ்தல்

அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் ஜெரூஸலம் நகரை சுற்றி வளைத்து, ஆக்கிரமிப்புக்குத் தயாராக இருந்தார்கள். அவருடன் அபூ உபைதா மற்றும் காலித் போன்ற முஸ்லிம் தளபதிகளும் வந்து இனைந்து கொண்டனர். பைஸாந்திய அரசின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை பலஸ்தீனிய கிறிஸ்தவர்களுக்கு இருக்கவில்லை. எனவே, பலஸ்தீனை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க அவர்கள் தீர்மானித்தனர். என்றாலும், அவர்களிடம் தங்களது பாதுகாப்பு சம்பந்தமான பல விதமான சந்தேகங்களும் இருந்தன.

ஏனைய நகரங்களும் முஸ்லிம்களிடம் வீழ்ந்தது பற்றி அவர்கள் அறிந்திருந்தனர். வீழ்ந்த எல்லா நகரங்களிலும் தோல்வியடைந்தோரின் உயிரும் உடமையும் கௌரவத்துடன் பாதுகாக்கப்பட்டன. வணக்கத் தலங்கள் பாதுகாக்கப்பட்டன. சமய வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனாலும், ஜெரூஸலம் நகர வாசிகளுக்கும் இதே கௌரவம் வழங்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில், ஜெரூஸலம், அவர்களைப் போன்றே முஸ்லிம்களுக்கும் மிகவும் புன்னிய தலமாக இருந்தது. எனவே, நகரத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க முன், "நாங்கள் நன்றாக நடாத்தப் படுவோம்" என்ற வாக்குறுதியை முஸ்லிம்களிடம் பெற முடிவு செய்தனர்.

எனவே, அபூ உபைதா (ரலி) அவர்களிடம் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். " ஜெரூஸலம் நகரை உங்களிடம் ஒப்படைக்க நாம் தயார்;" கிறிஸ்தவர்கள் கூறினார்கள், " ஆனால், உங்கள் கலீபாவே நேரடியக வந்து எங்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்."

முஸ்லிம் தளபதிகள் தங்களுக்கிடையில் இந்தக் கோரிக்கையை ஆலோசனை செய்தனர். கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. "ஏன் இரத்தம் சிந்த வேண்டும்?" அவர்கள் கூறினார்கள், " போரின்றியே வெற்றி கிடைக்கும் போது!"

இதன் படி, இரத்தம் சிந்தாமலேயே ஜெரூஸலத்தைக் கைப்பற்ற முடியும் என்ற செய்தியும், இதற்காக சமாதான ஒப்பந்தம் ஒன்றுக்காக கலீபா அவர்கள் மதீனாவிலிருந்து நேரடியாக வருகை தர வேண்டும் என்ற கிறிஸ்தவர்களின் கோரிக்கையும் உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பப் பட்டது. எவ்விதமான தயக்கமுமின்றி கலீபா அவர்கள் இதற்கு உடன்பட்டார்கள்.

ஜெரூஸலத்தில் உமர் (ரலி)

அலி (ரலி) அவர்களை தனக்குப் பதிலாக மதீனாவின் பொறுப்பாளராக நியமித்துவிட்டு, கலீபா உமர் (ரலி) அவர்கள் ஜெரூசலம் நோக்கிப் புறப்பட்டார்கள். ஒரே ஒட்டகத்தில் தனது உதவியாளருடன் புறப்பட்ட அவர்கள், கலீபாவும் உதவியாளருமாக, மாறி மாறி, ஒருவர் ஒட்டகத்தின் மீதும் மற்றவர் நடந்தும், ஜெரூசலம் வரை சென்றனர். ஜெரூசலத்தை அடையும் போது, ஒட்டகத்தில் சவாரி செய்யும் முறை, கலீபாவின் உதவியாளருடையதாக இருந்தது. "அமீருல் மூமினீன் அவர்களே!", உதவியாளர் அழைத்தார்; " நான் ஒட்டகத்தின் மீதும் நீங்கள் கடிவாளத்தை பிடித்த வண்ணம் நடந்தும் வருவது உங்களது கௌரவத்துக்கு இழுக்காகும். நான் எனது முறையை விட்டுத் தருகிறேன். நீங்களே ஒட்டகத்தில் சவாரி செய்து வாருங்கள்" என்று மிகவும் பணிவுடன் கூறினார். " இல்லை, இல்லை, நான் நேர்மை தவறி விடக்கூடாது", கலீபா கூறினார்கள், " இஸ்லாத்தின் மூலம் எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் கௌரவம் அனைத்தையும் விட மேலானது."

கலீபாவை வரவேற்பதற்காக, படைத் தளபதிகளான அபூ உபைதா, காலித், யசீத் மற்றும் அதிகாரிகள், சிறிது தூரம் சென்றார்கள். அவர்கள் அனைவரும் பட்டுத் துணியினாலான மேலங்கி அணிந்திருந்தனர். இதனைக் கண்ட உமர் (ரலி) க்கு கோபம் வந்து விட்டது.
சிறு கற்களைப் பொறுக்கி தனது தளபதிகள் மீது எறிந்த அவர்கள், " இரண்டே வருடத்துக்குள் எவ்வளவு மாற்றம்? என்ன உடை இது? இன்னும் இரு நூறு வருடம் கழித்து இவ்வாறு செய்திருந்தாலும் உங்களை நான் விலக்கியிருப்பேன்" என்று கடும் கோபத்துடன் கூறினார்கள்."

படை அதிகாரிகள் கூறினார்கள், "அமீருல் மூமினீன் அவர்களே, அணிந்திருக்கும் ஆடையின் தரத்தைக் கொண்டு மனிதர்களின் நிலையை மதிக்கும் ஒரு பிரதேசத்தில் நாங்கள் இருக்கிறோம். சாதாரண உடைகளை நாம் அணிந்திருக்கும் போது எம்மை இங்குள்ள மக்கள் குறைவாகவே மதிப்பிடுவார்கள். மேலால் இந்த அங்கியை அணிந்த போதிலும், எமது வழமையான உடைகளை அணிந்த நிலையிலேயே இதனையும் அணிந்திருக்கிறோம்." இந்தப் பதில் கலீபாவை நிதானப் படுத்தியது. இதன் பின்னர் சமாதான ஒப்பந்தத்தில் அவர்கள் கைச்சாத்திட்டார்கள். அதன் வாசகங்கள் வருமாறு:

" அல்லாஹ்வின் அடிமையும் மூமீன்களின் கலீபாவுமாகிய உமரிடமிருந்து: ஜெரூஸலம் நகரவாசிகளின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இந்த ஒப்பந்தம் பாதுகாப்பளிக்கிறது. அவர்களுடைய தேவாலயங்களும் சிலுவைகளும் பாதுகாக்கப்படும். இந்த ஒப்பந்தம் நகரின் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாகும். அவர்களின் வணக்கத் தலங்களில் வழிபாடுகள் செய்ய எந்த தடையும் இல்லை. அவை முஸ்லிம்களின் அதிகாரத்துக்கு உட்படுத்தப்படவோ உடைக்கப் படவோ மாட்டாது. மக்கள் அனைவரும் தங்களது மார்க்கத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த விதமான பிரச்சினைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்......"

நகரின் வாசல்கள் திறக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்கள் நேராக Temple of David (மஸ்ஜிதுல் அக்ஸா) ஐ நோக்கிச் சென்றார்கள். அங்கு David's Arch இன் கீழ் தொழுதார்கள். பின்னர் நகரின் மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கிருந்த வேளை ழுஹர் தொழுகைக்கான நேரம் வந்தது. "நீங்கள் இங்கேயே தொழுது கொள்ளலாம்" என்று தேவாலயத்தின் பிஷப் கூறினார். " இல்லை, இல்லை", உமர் (ரலி) சொன்னார்கள், " நான் இவ்விடத்தில் தொழுதால், இந்த இடத்தை உங்களிடமிருந்து கைப்பற்றுவதற்குக் காரணமாக ஒரு காலத்தில் இதை முன் வைக்க முடியும்".

பின்னர் தேவாலயத்தின் படிக்கட்டுகளில் நின்று தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்னர் பிஷப்பிடம் ஒரு கடிதத்தையும் கையளித்தார்கள். அதன் வாசகங்கள் பின்வருமாறு இருந்தன. "இந்தப் படிக்கட்டுகள் அதான் சொல்லும் இடமாகவோ கூட்டுத் தொழுகை நடாத்தப்படும் இடமாகவோ எச்சந்தர்ப்பத்திலும் இருக்கக் கூடாது."

உமர் (ரலி) அவர்களின் பள்ளிவாசல்

ஜெரூஸலத்தில் ஒரு பள்ளிவசலை நிறுவும் எண்ணம் உமர் (ரலி) அவர்களுக்கு இருந்தது. இதற்குப் பொருத்தமான ஒரு இடத்தைக் காட்டும் படி கலீபா உமர்(ரலி) அவர்கள் கிறிஸ்தவ பிஷப்பிடம் விசாரித்தார்கள். யாகூப் நபியுடன் அல்லாஹ் பேசிய இடமான "Sakhra" எனும் கற்பாறை இருந்த இடத்தைக் காட்டினார் பிஷப். யூதர்களை இழிவு படுத்தும் நோக்கில், கிறிஸ்தவர்கள் அந்த இடத்தை குப்பை மேடாக ஆக்கியிருந்தார்கள். "Sakhra" உடனடியாக துப்பரவு செய்யப்பட்டது. ஏனையவர்களுடன் ஒரு பணியாளரைப் போன்று உமர் (ரலி) அவர்களும் இந்த வேலையில் ஈடுபட்டனர். தாவீதினதும் யேசு கிறிஸ்துவினதும் நகரமான ஜெரூஸலம் இஸ்லாத்தின் சமத்துவத்தைக் கண்டு கொண்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக