செவ்வாய், 20 ஏப்ரல், 2010

அனாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி?!

எமது ஊரில் அதிகரித்துச் செல்லும் அனாச்சாரங்கள் பற்றி பலரும் பல விதமாக கருத்துக்களை முன் வைத்த வண்ணமாக இருந்தனர். எல்லோரும் தாம் கண்ட, கேட்ட ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைகள் பற்றி தமக்குள் அல்லது தாம் அறிந்த சிலருக்குள் தத்தமது கவலைகளைத் தெரிவித்துக் கொண்டார்களே ஒழிய, தகுந்த நடவடிக்கை சம்பந்தமாக யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. 'என்ன நடவடிக்கை எடுக்கலாம்?' என்ற சிந்தனை அற்றுப் போயிருக்கலாம்; 'நடவடிக்கைக்கு இறங்கினால் நாம்தான் குட்டுப்பட வேண்டி வரும்' என்ற பயமாக இருக்கலாம் அல்லது 'ஊர் எக்கேடு கெட்டுப் போனாலென்ன, நாம் சரியாக இருந்துவிட்டுப் போனால் சரி' என்ற சுய நல எண்ணமாகக் கூட இருக்கலாம்.  எப்படியோ, நீண்ட காலமாகவே, பள்ளிகளோ, தஃவா இயக்கங்களோ அல்லது ஏனைய சமூக நலன் விரும்பும் அமைப்புக்களோ எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

இவ்வறான ஒரு சூழலில்தான் 'அனாச்சாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தல்' சம்பந்தமான கலந்துரையாடலொன்று  MUSLIM LADIES STUDY CIRCLE  நிறுவன கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்துக்காக அழைக்கப் பட்டவர்களில் பெரும்பாலானோர் வருகை தந்திருந்ததானது இந்த முயற்சியில் உற்சாகத்தைக் கூட்டுவதற்குப் போதுமானதாக இருந்தது. சுமார் முப்பத்தைந்து பேரளவில் வருகை தந்திருந்ததானது, 'அனாச்சாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்' என்ற கருத்துக்கு ஊரார் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பதைக் காட்டுவதாகவே இருந்தது.  அங்கு கருத்துத் தெரிவித்த அனைவருமே, ஒழுக்கச் சீர்கேடுகளற்ற ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதன் அவசியம், அதற்கான நடவடிக்கைகள், மற்றும் அதிலுள்ள சவால்கள் பற்றி காத்திரமான கருத்துக்களை முன்வைத்ததிலிருந்து இதனை உணர்ந்து கொள்ளலாம்.

இதன் போது, பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள் மற்றும் புத்திஜீவிகளை உள்வாங்கிக் கொண்டதான அதிகாரம் பொருந்திய அமைப்பொன்று தெரிவு செய்யப்படவேண்டும் என்ற பலமான ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு அமைய, எதிர்வரும்  27ஆம் திகதி, பள்ளிவாசல் நிருவாகிகள், மற்றும் எமதூர் புத்திஜீவிகள் அடங்கிய ஒரு கலந்துரையாடலை நடாத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுளது.

இந்தக் கூட்டம் நடந்து மறு நாள், மஸ்ஜிதுன்னூர் பள்ளிவாசலிலும் ஒழுக்கச் சீர்கேட்டிலிருந்து சமூகத்தை நல்வழிப் படுத்துவது சம்பந்தமான ஒரு பயான் இடம் பெற்றுள்ளது.

இறைவனின் உதவியால், நல்லுள்ளம் கொண்டோரின் அங்கலாய்ப்புக்கு சிறந்த பதில் கிடைத்துள்ளது. எனவே, ஒழுக்கம் பேணும் உன்னதமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப, இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்வோம். இந்த நல்ல முயற்சிக்கு வித்திட்டவர்களுடன் நாமும் இணைந்து, ஜிஹாதின் நன்மையை அடைந்து கொள்ள முனைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக