வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டுமென இலங்கை கோரிக்கை

‘மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமானால், கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறிவிட வேண்டும்’ என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. 1967 ஆம் ஆண்டில் இருந்த எல்லைகளுக்கு இஸ்ரேல் துருப்புக்கள் பின்வாங்கி, பலஸ்தீனத்துக்கு எதிரான தடைகளையும், சட்ட விரோத குடியேற்றத் திட்ட விஸ்தரிப்புகளையும், பிரிவினைச் சுவர் கட்டப்படுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை கோரியுள்ளது.

நியூயோர்க்கில், இலங்கையின் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பிரதி நிரந்தர பிரதிநிதி பந்துல ஜயசேகர ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பலஸ்தீன பிரச்சினை பற்றிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவது அவசியம் என்று இலங்கை நம்புவதாக தெரிவித்தார். எனவே, விட்டுக் கொடுக்க முடியாத பலஸ்தீன உரிமைகள், இரு-நாட்டு தீர்வு ஆகிய இரண்டு அம்சங்கள் பற்றிய தீர்மானத்தை சகல தரப்பினரும் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென இலங்கை கோருவதாக அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தில் பொருளாதார தடைகள் தளர்த்தப்பட்டதை கவனத்தில் எடுத்துக் கொண்ட அதே வேளை, பலஸ்தீன மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பில் நாளாந்தம் படும் துன்பங்கள், அவலங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

பலஸ்தீன அதிகார சபையும் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றும் அதே வேளை, இஸ்ரேலிய சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்த அதன் பிரதேசம் பயன்படுத்தப் படுவதில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஜயசேகர தெரிவித்தார். சட்ட விரோத ஆயுதங்கள் பிரதேசத்தினுள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; சிவிலியங்களின் பாதுகாப்பையும் பந்தோபஸ்தையும் உறுதிப்படுத்த இரு தரப்பினரும் தம்மாலானதை செய்ய வேண்டும் என்றும் ஜயசேகர கேட்டுக் கொண்டர்.

ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன அதிகார சபையையும், பேச்சுவார்த்தைகளை தாமதமின்றி ஆரம்பிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் இலங்கை ஆதரிப்பதாக தெரிவித்த ஜயசேகர, நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள பலஸ்தீன மக்களின் ஒற்றுமை அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ற சூழலை இரு தரப்பினரும் ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த இலங்கை பிரதிநிதி, புதிய குடியேற்றத் திட்டங்களை ஆரம்பிப்பது பற்றிய அறிவித்தலால் இதுவரை ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது குறித்தும் கவலை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக