ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அல் ஜஸீரா தொலைக்காட்சி நிருபர் மீது தாக்குதல்

அல் ஜஸீரா தொலைக்காட்சி நிருபரான நிஸாம் மஹ்தவி என்பவரும் அவரது உதவியாளர்களும் அமெரிக்காவில் வசிக்கும் ஈராக்கியர்களால் தாக்கப்பட்டுள்ளனர். சதாம் ஹுஸைன் அரசின் வீழ்ச்சி
நினைவு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சதாம் ஹுஸைனின் வீழ்ச்சி நினைவாக டெட்ரொய்ட்டில் ஈராக்கியர்களால் ஒரு பேரணி நடாத்தப்பட்டது. இதன்போது தகவல் சேகரிக்கச் சென்ற அல் ஜஸீரா அரபுச் சேவையின் வாஷிங்டன் நிருபர் குழுவினரே தாக்கப்பட்டனர்.

டெட்ரொய்ட் என்பது மத்திய கிழக்குக்கு வெளியே அதிகமான ஷீயா ஈராக்கிய முஸ்லிம்கள் வாழும் ஒரு நகரமாகும்.

தாக்கப்பட்ட குழுவினரை பொலீஸார் தலையிட்டுக் காப்பாற்றினர். அல் ஜஸீரா குழுவினர் அவ்விடத்தை விட்டு நகரும் வரை "ஜஸீரா ஒழிக" என்ற கோசம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

மேல் நாட்டு செய்திச் சேவைகளில் இருந்து வித்தியாசமான கண்ணோட்டத்தில் செய்திகளை வழங்குவதால், அல் ஜஸீரா மத்திய கிழக்கு உட்பட பெரும்பாலான முஸ்லிம்களால் நோக்கப்படுகின்ற, அதே நேரம், மிக வேகமாக நேயர் எண்ணிக்கை கூடிச் செல்லும் ஒரு சர்வதேச செய்தி நிறுவனமாகும்.

ஆனால், இந்த செய்திச் சேவை அமெரிக்காவுக்கு எதிரானது என்றும் சதாம் ஹுஸைன் அரசுக்கு ஆதரவானது என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

"இவர்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்று கத்துகிறார்கள். ஆனால் அவற்றை மதிக்கத் தெரியாதவர்கள். அத்துடன் கடைசி நிமிடம் வரை சதாம் ஹுஸைனின் சர்வாதிகார ஆட்சிக்கு துணை போனவர்கள்" என்று பேர்ணியில் பங்குபற்றிய ஒருவர் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

"இவ்வாறான குற்றச்சாட்டுகள் வழமையானவை" என தாக்கப்பட்ட மஹ்தவி தெரிவித்தார்.

அமெரிக்க வான் தாக்குதலின்போது தமது இரண்டு செய்மதி நிலையங்கள் நாசமடைந்ததுடன் தொலைக்காட்சி படப்பிடிப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டமை தொடர்பில் கடந்த வாரம் அல் ஜஸீரா அமெரிக்காவை குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக