தினம் அறிவியலில் பல விஷயங்களை கண்டுபிடிக்கின்றனர். அவற்றில் சில விஷயங்கள் ஏதோ வகையில் பொதுமக்கள் வரை நீட்சி பெறுகிறது. மருந்துகள், வாகனங்கள், செல்ஃபோன், இணையம், ஏகே47, காண்டம், சௌபாக்கியா வெட்கிரைண்டர் இப்படி. உலக மக்கள் அனைவரும் பங்கெடுத்து, சிந்தித்து, தங்களுக்கு எது தேவை என்று பரிந்துரைக்கவும் பல கண்டுபிடிப்புகளையும், கவலைகளையும் அறிவியல் காட்டிக்கொண்டே இருக்கிறது. அணுகுண்டு, ஸ்டெம் செல்கள், உலகளாவிய சூடேற்றம், குடிநீர் பற்றாக்குறை இப்படி.
தினமும் தொலைக்காட்சி, ரேடியோ, நாளிதழ் என்று (இணையம் விட்டு) நுகரும் பொதுமக்களின் பிரதிநிதியாகிய நமக்கு இப்படிப்பட்ட தற்கால அறிவியல் விஷயங்கள், கூற்றுகள், எவ்வளவு தெரிந்திருக்கவேண்டும்?
அதாவது, சாமான்ய மக்களான நமக்கு, அறிவியல் சிந்தையுடன் உலகை நோக்கவேண்டும் என்றால், எவ்வளவு (பொது) அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்? பதில் உண்டா?
அமெரிக்காவில் இந்தவருடம் (2009) பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய (வருடா வருடம் நடத்துகிறர்கள்) கருத்துக்கணிப்பில் இதற்கான பதிலை 12 அறிவியல் கேள்விகள் மூலம் கண்டுள்ளனர். கீழே அக்கேள்விகளின் தமிழாக்கத்தையும், பதில்களை சற்று மாற்றிப்போட்டும் கொடுத்துள்ளேன். படிக்க மொத்தம் ஐந்து நிமிடம் பிடிக்கும். பதிலளித்துதான் பாருங்களேன். அமெரிக்க பொதுமக்களை காட்டிலும் தமிழ்கூறும் இணைய-நல்லுலகில் நாம் அறிவியல் விஷயத்தில் எப்படி தேறுகிறோம் என்று தெரிய.
விடைகள், மற்றும் அமெரிக்க பொதுமக்கள் முடிவுகள், கட்டுரை இறுதியில்.
கேள்விகள்
1) மாரடைப்பு சாத்தியத்தை குறைக்க மெடிக்கல் கடையில் (பிரிஸ்கிருப்ஷன் இன்றி) கிடைக்கும் எந்த மருந்தை டாக்டர்கள் சிபாரிசு செய்கின்றனர்?
அ) ஆஸ்பிரின்
ஆ) கொர்டிஸோன்
இ) ஆண்டாசிடுகள்
2) வானியலாளார்களின் கூற்றுபடி, கீழே உள்ளவற்றுள் எதை இனி (சூரியனை சுற்றும்) கிரகம் என்று கருதத்தேவையில்லை?
அ) புளூட்டோ
ஆ) நெப்டியூன்
இ) சனி
ஈ) புதன்
3) கீழே உள்ளவற்றில் எதனால் சுனாமி வரலாம்?
அ) கடலின் அடியில் நிலநடுக்கம்
ஆ) சூடான கடல் ஓட்டம்
இ) ஓர் இடத்தில் குவியும் மீன் கூட்டம்
ஈ) உருகும் பனிக்கட்டியாறு
4) உலகளாவிய இட நிர்ணயிப்பு கருவி (கிளோபல் பொஸிஷனிங் சிஸ்டம், GPS) எதை சார்ந்து வேலைசெய்கிறது?
அ) செயற்கை கோள்கள்
ஆ) காந்தங்கள்
இ) பூமி
ஈ) சூரியன்
5) விஞ்ஞானிகள் உலகளாவிய சூடேற்றம் நடப்பதற்கு எந்த வாயு முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர்?
அ) கார்பன் டை ஆக்ஸைடு
ஆ) ஹைட்ரஜன்
இ) ஹீலியம்
ஈ) ரேடான்
6) ஸ்டெம் செல்கள் மற்ற செல்களை காட்டிலும் முக்கியமாக எவ்வகையில் வேறுபடுகிறது?
அ) அவை மற்ற வகையான செல்களாக வளர்மாற்றம் அடையக்கூடிய திறனுடையவை
ஆ) எலும்புகளில் (போன்-மேரோ ) மட்டும் காணப்படும்
இ) தாவரங்களில் மட்டும் காணப்படும்
7) விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் எதை கண்டுபிடித்தனர்?
அ) தண்ணீர்
ஆ) காந்தம்
இ) தாவரங்கள்
ஈ) பிளாட்டினம்
கீழே உள்ள வினாக்களுக்கு சரியா, தவறா என்று குறிப்பிடுங்கள்
8 ) நாம் வாழும் கண்டங்கள் (நிலப்பிரதேசங்கள்) பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது; தொடர்ந்து இவ்வாறு செய்துகொண்டே இருக்கும்
அ) சரி
ஆ) தவறு
9) லேஸர் கருவி ஒலியலைகளை குவிப்பது மூலம் வேலை செய்கிறது
அ) தவறு
ஆ) சரி
10) ஆண்ட்டிபயாட்டிக்ஸ் (மருந்துகள்) வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொன்றுவிடும்
அ) தவறு
ஆ) சரி
11) எலக்ட்ரான் என்பது அணுவைவிட சிறியது
அ) சரி
ஆ) தவறு
12) அனைத்து கதிரியக்கமும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது
அ) தவறு
ஆ) சரி
உங்களுக்கு அனைத்து விடையும் சரி என்றால், உங்களுக்கும் கீழே உள்ள என் மதிப்பு-படம் பொருந்தும். அமெரிக்க சாமான்ய மக்கள் எப்படி தேறி இருக்கிறார்கள் என்றும் படத்தில் இருக்கிறது.
கட்டுரை எச்சம்: நீங்கள் நன்றாக தேறியிருந்தால், கேள்விகளை உங்கள் பெற்றோர், உறவினர், வீட்டு வேலைகளை செய்பவர், செல்ஃபோன் வைத்திருக்கும் தேங்காய் பறிப்பவர், சூடுவைக்காமல் மீட்டரும் போடாமல் உங்களை தினம் இட்டுகினு செல்லும் ஆட்டோ டிரைவர், பீச் சுண்டல் விற்கும் சிறுவன் இப்படி பலரிடம் கேட்டுப்பாருங்கள் (பிறகு, சரியான விடையையும், தேவையிருப்பின் சொல்லிவிடுங்கள்). தமிழ்மக்களின் பொது அறிவியல் நிலை பற்றி மனதில் ஒரு கணிப்பு நிகழும்.
எல்லா கேள்விகளுக்கும் விடை: அ)