புதன், 1 செப்டம்பர், 2010

முல்லா கதை - 01

ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் முல்லாவின் வீட்டுக்குள் நுழைந்தான். இதனைக் கண்ட முல்லா வீட்டின் பின் புறமாகச் சென்று மறைந்து கொண்டார். தனக்கு எதிர்ப்பு ஏதும் இல்லாததைக் கண்ட திருடன் முல்லாவின் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் திரட்டி மூட்டையாகக் கட்டிக் கொண்டு வெளியேறினான். முல்லாவும் அவனுக்குத் தெரியாமல் இரகசியமாகப் பின் தொடர்ந்து சென்றார்.

தன் வீட்டுக்குச் சென்ற திருடன் திருடிய பொருட்கள் அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு,முகம், கை, கால்களைக் கழுவுவதற்காக வீட்டின் பின் பக்கம் சென்றான். அங்கே முல்லா, தமது அங்கவஸ்திரத்தை விரித்துப் போட்டு, படுத்துக் கொண்டு, தூங்குவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார். தனது வீட்டில் புதிய ஒரு மனிதர் உறங்குவதைப் பார்த்த திருடன், திடுக்கிட்டு, அவரை எழுப்பி, "நீ யார்?" என்று அதட்டிக் கேட்டான்.

முல்லா மெதுவாக எழுந்து உட்கார்ந்து கொண்டார். "என் பெயர் முல்லா. என் வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் நீ எடுத்துக் கொண்டு இங்கே வந்து விட்டாய். இனி நான் என் வீட்டில் குடியிருந்து என்ன பயன்? எனவே உன் வீட்டுக்கே குடி வந்து விட்டேன்" என்று அமைதியாகக் கூறினார். திருடனுக்கு மறு பேச்சுப் பேச நா எழவில்லை. தான் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் திரட்டி எடுத்துக் கொண்டு, முல்லாவின் வீட்டுக்குப் போய், வைத்து விட்டு வந்து விட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக