வியாழன், 2 செப்டம்பர், 2010

எல்லாம் நன்மைக்கே

ஒரு அரசவையிலிருந்த பிரதம மந்திரி மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். எவ்விதமான நன்மையில் முடியாத காரியங்கள் நடைபெற்றாலும், மிகவும் சுலபமாக 'எல்லாம் நன்மைக்கே' என்று விட்டு விடுவார். இவரது இந்த நடவடிக்கை பலருக்கும் எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தது.

ஒரு நாள் அரசர், தமது பிரதம மந்திரியுடன், தமது குதிரையில் சவாரி செய்த வண்ணம், காட்டுப் பகுதியில் உலாவச் சென்றார். பிரதம மந்திரி அவருக்குப் பின்னால் தமது குதிரையில் சென்று கொண்டிருந்தார். சிறிது நேர பயணத்தின் பின் அரசரின் குதிரை நகர மறுத்தது. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் குதிரை நகரவேயில்லை. அரசருக்குக் கோபம் வந்து விட்டது.

"பாருங்கள் மந்திரியாரே! குதிரை இதைவிட சிறிது தூரம் கூட நகர்வதாயில்லையே. இப்போது என்ன செய்வது?" என்று சற்று ஆவேசத்துடன் அரசர் கேட்டார்.

"இதென்ன பெரிய விடயம் அரசே, எல்லாம் நன்மைக்கே. விட்டு விடுங்கள். நாம் நடந்தே செல்லலாம்." என்று யோசனை கூறினார் மந்திரி.

இதைக் கேட்ட அரசருக்கு எரிச்சல் ஏற்பட்டாலும் அதனை அவர் அடக்கிக் கொண்டு உடன்பட்டார். பின்னர் இருவரும் தத்தமது குதிரைகளைப் பக்கத்திலிருந்த மரங்களில் கட்டி வைத்து விட்டு நடையில் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

சிறிது தூரம் சென்ற பின், திடீரென

"ஆ........ ஐயோ ....................  அம்மா" என்று அலறினார் அரசர். பிரதம மந்திரி அரசரின் பக்கமாக ஓடிச் சென்றார். காடுகளில் நடை பயின்று பழகியவரா அரசர்? அவரின் பாதம், வீதியில் கிடந்த பெரிய கல்லொன்றில் மோதியதில் விரல்களில் காயம் ஏற்பட்டிருந்தது. விரல்களிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. "ஆ...... ஊ....... இரத்தம் வழிகிறதே....வலிக்கிறதே....." என்று கத்திய வண்ணமிருந்தார் அரசர்.

'அரசரின் காலில் வழியும் இரத்தத்தை நிறுத்துவதற்கு ஏதாவது செய்யலாமா' என்ற யோசனையுடன் அரசரை நோக்கிக் குனிந்த மந்திரி, " அரசே, பதற வேண்டாம், எல்லாம் நன்மைக்கே நடக்கின்றன, சற்று பொறுமையாக இருங்கள்" என ஆறுதல் கூறலானார்.

இதைக் கேட்ட அரசருக்கு கோபம் பன்மடங்காகியது. கோபத்தை சற்று அடக்கிக் கொண்டு, ' இரு, உன்னுடைய இந்தப் பேச்சுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன்' என்று நினைத்தவராக மந்திரியாரின் தோளில் தட்டி, "சரி, வருங்கள். நாம் எமது பயணத்தைத் தொடரலாம்" என்றார். இப்போது, மந்திரியை முன்னே செல்ல விட்டு, சற்று பின்னால் நடந்தார் அரசர்.

சிறிது தூரம் செல்ல எதிரில் ஒரு பாழுங்கிணறு தென்பட்டது. அதன் பக்கத்தில் வந்தவுடன் 'தொலைந்து போ' என்று கூறியவராக அரசர் மந்திரியை கிணற்றில் தள்ளி விட்டார். பின்னர் மந்திரியை நோக்கி, "இப்போது எப்படி இருக்கிறது? இதுவும் நன்மைக்குத்தானா?" என்று குத்தலாகக் கேட்டார். அப்போதும் பொறுமையாக இருந்த மந்திரி, "இதுவும் நன்மைக்குத்தான், அரசே" என்று உறுதியுடன் கூறினார். இதனைக் கேட்டு மேலும் சினமடந்த அரசன், "நீ எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. உன்னைத் திருத்தவே முடியாது" என்று கூறியவராக தனது பயணத்தை தனியே தொடர்ந்தார்.

சற்று பயமாக இருந்தாலும், மந்திரியுடன் இருந்த கோபத்தில் வேறு எந்த யோசனையும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தார். திடீரென, "ஏய், நில்!" என்ற ஒரு பயங்கரமான குரல் கேட்டு அரசர் திகிலடைந்து, சத்தம் வந்த திசையைப் பார்த்தார். அங்கே, மாமிசம் உண்ணும் அரக்கன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். 'ஐயோ, தனியாக வந்து மாட்டிக் கொண்டோமே' என்று செய்வதறியாது திகைத்து நின்றார் அரசர்.

"ஐயோ, என்னை ஒன்றும் செய்து விடாதே. நான் தான் இந்த நாட்டு அரசன். உனக்குத் தேவையான மாமிச உணவுகளை நான் அனுப்பி வைக்கிறேன். என்னை விட்டு விடு" என்று அரசர் அரக்கனிடம் கெஞ்சினார், பயத்துடன் நடுங்கியவாறு.

"ஆகா, நீதான் அரசனா? எனக்கு நல்ல சாப்பாடு கிடைத்திருக்கிறது. இப்போது நான் உன்னை தின்னப் போகிறேன்" என்று கூறிய வண்ணம் அரக்கன் அரசரை நெருங்கினான். அரசர் நடுங்கிய வண்ணம் இருந்தார். அரக்கன் அரசரை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்தான். "சீச்சீ!, உன்னை நான் சாப்பிட முடியாது. உன் காலில் இரத்தம் வழிகிறது. சாப்பிட ஆரம்பிக்க முன்னரே இரத்தம் வழியும் பிராணிகளை நான் சாப்பிடுவதில்லை. நீ தப்பினாய், போ!" என்று கூறிய வண்ணம் திரும்பிச் சென்றான் அந்த அரக்கன்.

உயிர் போய், திரும்பி வந்த அதிசய நிலையில் இருந்தார் அரசர். அரக்கனுக்கு உணவாகாமல் தான் தப்பியதற்கான காரணம் காலில் ஏற்பட்ட காயம்தான் என்பதை அரசர் இப்போது உணர்ந்தார். 'இதைத்தான், எல்லாம் நன்மைக்கே என்று நமது மந்திரி சொன்னாரோ? அடப் பாவமே, அவரைப் போய் நான் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டேனே' என்று வருந்தினார். ஓடோடிச் சென்று மந்திரியாரை கிணற்றிலிருந்து மேலே எடுக்க உதவலானார். காட்டிலிருந்து பிடுங்கிய ஒரு கொடியை கம்பமாகப் பாவித்து, மிகவும் சிரமப்பட்டு, மந்திரியாரை கரைப் படித்தினார்.

கரைக்கு வந்த மந்திரி, "மிகவும் சிரமப்பட்டு என்னைக் கரை சேர்த்துள்ளீர்கள். உங்களுக்கு என்ன கைம்மாறு செய்வேனோ தெரியாது, அரசே!" என்று, அரசர் பட்ட சிரமத்துக்காக வருந்தினார்.

"குத்தலாகக் கதைக்க வேண்டாம், மந்திரியாரே. என்னை முதலில் மன்னித்து விடும். எல்லாம் நன்மைக்கே என்ற உமது கொள்கையின் அர்த்தத்தை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்" என்று நடந்த சம்பவத்தைக் கூறலானார் அரசர்.

விபரம் அனைத்தையும் கேட்ட மந்திரி, மகிழ்வுடன், "இப்போதாவது என் மீதிருந்த கோபம் தணிந்ததா?" என்று பக்குவமாகக் கேட்டார்.

"உம் மீது மதிப்புத்தான் இருக்கிறது" என்று கூறிய அரசர், "அது சரி, காலில் காயம் பட்டதால் எனக்கு நேர்ந்த நன்மையைக் கண்டு கொண்டேன். உமது கொள்கைப்படி, பாழுங்கிணற்றில் விழுந்த உமக்கு நேர்ந்த நன்மை என்ன?" என்று ஒரு கேள்வியையும் தொடுத்தார்.

"கிணற்றில் விழாமல் உங்களுடன் வந்திருந்தால், அரக்கன் என்னைத்தான் சாப்பிட்டிருப்பான். ஏனெனில், எனக்குத்தான் காயங்கள் ஏதும் இருக்கவில்லையே! நீங்கள் என்னை பாழுங்கிணற்றில் தள்ளி விட்டதால் நானும் உயிர் தப்பினேன். பாருங்கள் அரசே, தங்களது குதிரை நகர மறுத்தமை, தங்களது காலில் காயம் பட்டமை, நான் பாழுங்கிணற்றில் வீழ்ந்தமை அனைத்துமே நன்மைக்காகத்தான் நடந்திருக்கின்றன" என்று ஒரு குட்டிப் பிரசங்கமே நடத்தி விட்டார் மந்திரி.

"உண்மை, உண்மை. 'எல்லாம் நன்மைக்கே'. மீண்டும் ஒரு அரக்கன் வருமுன் வாருங்கள் நாம் அரண்மனை செல்லலாம்" என்று கூறியவராக தனது குதிரை கட்டப்பட்டிருந்த மரத்தை நோக்கி நடந்தார் அரசர்.

அரசருக்கு தம்மீது ஏற்பட்டுள்ள மதிப்பை எண்ணி உள்ளூர மகிழ்ந்தார் மந்திரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக