அமெரிக்க தேவாலயம் அறிவித்துள்ள குர்ஆன் எரிப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வத்திக்கான், இது இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துகிற செயல் என்று கூறியுள்ளது.
நியூயார்க் இரட்டைக் கோபுரத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நடத்தப்போவதாக அறிவித்த குர்ஆன் எரிப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று அமெரிக்காவின் புளோரிடா தேவாலயம் அறிவித்துள்ளது.
இத்தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதமே வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி நெருங்கி வருவதால், குர்ஆன் எரிப்பு போராட்டத்தை கைவிடுமாறு அமெரிக்க அரசு தரப்பிலிருந்து அத்தேவாலயத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், புளோரிடா மாகாண அரசின் அமைச்சராகவும் இருக்கும் பாஸ்டர் ஜோன்ஸ், திட்டமிட்டபடி குர்ஆன் எரிப்பு போராட்டம் நடந்தே தீரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க தேவாலயத்தின் இந்த அறிவிப்புக்கு வத்திக்கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வத்திக்கான் விடுத்துள்ள அறிக்கையில், குர்ஆன் எரிப்பு இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை மூட்டிவிடும் என்றும், இஸ்லாமியர்களுடனான சுமூக உறவை பேணுவதில் வத்திக்கானுக்கும் பொறுப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு மதத்திற்கும் அதன் புனித நூல்களையும், இடங்களையும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சின்னங்களையும் மதிக்கும் உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக