வியாழன், 30 செப்டம்பர், 2010

A/L விஞ்ஞானப் பிரிவு: நம்மால் முடியாதா?..!

அல் பத்ரியாவில், இவ்வருட புதிய A/L வகுப்பில், மிகவும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளதாக சில மாணவியர் கதைத்துக்கொண்டு சென்றனர். கடந்த வருட  O/L பரீட்சையில், பத்ரியாவிலிருந்து அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தாலும் சித்தியடைந்த மாணவர்களுள் பெரும்பாலானோர் விஞ்ஞானத்துறையில் பயில்வதற்காக வெளிப் பாடசாலைகளுக்கு சென்றிருப்பதே இதற்குக் காரணம் என அந்த மாணவியர் மேலும் சில தகவல்களையும் கதைத்துச் சென்றனர்.

விஞ்ஞானப் பிரிவில் கற்க எமது மாணவர்கள் செல்வது வரவேற்கத்தக்க ஒரு விடயமாக இருந்தாலும், காலப் போக்கில், குறைந்த மாணவர் தொகை காரணமாக, 'தற்போது எமது பாடசாலையில் நடைபெற்று வரும்  A/L கலைப் பிரிவு வகுப்புக்களும் கூட இல்லாமல் போய் விடுமோ?' என்ற ஒரு நிலையை இது தோற்றுவிக்கும். எனவே, எமது பாடசாலையில் கற்ற கணிசமான திறமையுள்ள மாணவர்கள், அதிலும் மாணவிகள், வெளியே செல்லாமல், எமது பாடசாலையிலேயே விஞ்ஞானப் பிரிவில் கற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க முடியாதா? எத்தனையோ பாடசாலைகள் புதிய திட்டங்களை வகுத்து, இவ்வாறான விஞ்ஞானப் பிரிவுகளை நடாத்திச் செல்லும் போது, எமது மாணவர்களைக் கொண்டு எமது பாடசாலையில் ஏன் நாமும் தொடங்க முடியாது?

இது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தால் மாத்திரம் செய்து முடிக்கக் கூடிய ஒரு காரியமல்ல. மாறாக, ஊர் மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நடக்க வேண்டிய ஒரு விடயமாகும். எமது பாடசாலையைத் தரமுயர்த்த வெளியூரார் வரப்போவதில்லை. ஊர் மக்களாகிய எமது முயற்சியில்தான் எமது வெற்றியும் முன்னேற்றமும் தங்கியிருக்கின்றன.

"நீங்கள் முயற்சி செய்யாதவரை உங்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை!" இது குர்ஆனின் கூற்று.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு ஒத்திவைப்பு. அடுத்த அமர்வு செப். 28

பாபரி மஸ்ஜிதை மீள் நிர்மாணிப்பதா? அல்லது ராமர் கோயிலைக் கட்டுவதா? என்பது சம்பந்தமாக இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த வழக்கின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் இனக்கலவரம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கும் திகதி பிற்போடப் பட்டதாக அலஹாபாத் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

"தீர்ப்பைப் பிற்போடுவதால் ஏரளமான நன்மைகள் உண்டு. கலவரம் ஏற்படும் சூழல் தடுக்கப்படுகிறது; தீர்ப்பின் வாசகங்களை மீளாய்வு செய்ய அது வழிகோலுகிறது; ........." என வழக்கை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவர் கூறியுள்ளார்.

வழக்கின் அடுத்த அமர்வு செப்டம்பர் 28 இல் நடைபெறவுள்ளது.

வியாழன், 23 செப்டம்பர், 2010

புலமைப் பரீட்சை முடிவுகள்: 179 புள்ளிகள் பெற்று அஷ்ஃபாக் சாதனை!

2010 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகள் இன்று (23.09.2010) வெளியாகியுள்ளன. இம்முறை, அல் பத்ரியா பாடசாலையில் 5 மாணவர்களும், பாலிகா பாடசாலையில் 6 மாணவிகளும், வெளிப் பாடசாலைகளில் கற்கும் 1 மாணவனுமாக மொத்தம் எமது ஊரைச் சேர்ந்த 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கஹட்டோவிட்ட மாணவர் ஒருவர் இம்முறை பெற்ற அதி கூடிய புள்ளி 179. இது கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் நிலையிலுள்ள புள்ளியாகும். திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலயில் கல்வி பயிலும் அஷ்ஃபாக் என்ற மாணவனால் பெறப்பட்ட இந்த பெறுபேறு, கஹட்டோவிட்ட வரலாற்றில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளியாகும்.

அல் பத்ரியா பாடசாலையில் தானிஷ் (164) என்ற மாணவனும், பாலிகா பாடசாலையில் இஷ்கா (171) என்ற மாணவியும் தத்தமது பாடசாலை சார்பாக அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதே வேளை, அகில இலங்கை ரீதியில் அதி கூடிய புள்ளியாக, சிங்கள மொழியில் 196 உம், தமிழ் மொழியில் 193 உம் பெறப்பட்டுள்ளன. பரீட்சையில் சித்தி பெறுவதற்கு, மேல் மாகாணத்தில் இம்முறை நிர்ணயிக்கப்பட்ட அதி குறைந்த புள்ளி 145 ஆகும். 

புதன், 22 செப்டம்பர், 2010

பாபரி மஸ்ஜித் உடைப்பு மீதான வழக்குத் தீர்ப்பு வெள்ளிக்கிழமை. இந்தியாவெங்கும் ஒரே பதற்றம்.

பல வருடங்களுக்கு முன் இந்துத் தீவிரவாதிகளால் உடைக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் மீதான வழக்குத் தீர்ப்பு நாளை மறுநாள் (24.09.2010) அலஹாபாத் உயர் நீதி மன்றத்தில் வழங்கப்படவுள்ளது. தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமானதா? இந்துக்களுக்கு சாதகமானதா? என்ற விபரங்கள் இதுவரை தெரியவில்லை. எனவே, இரு சாராரும் தங்களுக்கு சார்பாக தீர்ப்பு அமைய வேண்டுமென பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதே வேளை, தீர்ப்பு எப்படி அமைந்தாலும் கலகம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்திய மத்திய அரசு பாதுகாப்பை உசார் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தீர்ப்பு வெளி வருவதற்கு முன்னரே "செப்டம்பர் 24 க்குப் பின் ராம ஜென்ம பூமியில் ராமர் கோயிலை அமைத்தே தீருவோம்" என, பாபரி மஸ்ஜித் உடைப்பில் முக்கிய பங்கு வகித்த  RSS அமைப்பு சூளுரைத்துள்ளது.

இந்தியாவின் மிக நீண்ட வழக்கான 'பாபரி மஸ்ஜித் - ராம ஜன்ம பூமி' வழக்கைக் கையாண்ட மூன்று நீதிபதிகளை கொண்ட குழு, தீர்ப்பு வழங்க முன்னரும் தீர்ப்பின் பின்னரும் தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

"பாலிகா"வின் மற்றொரு சாதனை! ஆரம்பப் பிரிவு தினப் போட்டியில் 17 முதலாம் இடங்கள்!!

கம்பஹா கல்வி வலயத்துக்கு உட்பட்ட 6 தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் தரம் 1 - 5 வரையான மாணவ மாணவியருக்கான "ஆரம்பப் பிரிவு தின" (PRIMARY DAY) போட்டி நிகழ்ச்சி ஒன்று 2010. 08. 02 ஆம் திகதி  உடுகொட அறபா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அன்று நடைபெற்ற போட்டிகளில், 17 முதலாம் இடங்களையும், 10 இரண்டாம் இடங்களையும், 05 மூன்றாம் இடங்களையும் பெற்று மொத்தமாக 32 இடங்களை கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் தனதாக்கிக் கொண்டுள்ளது.

அத்துடன், தரம் 01 மாணவியர் பங்குபற்றிய நான்கு நிகழ்ச்சிகளிலும் முதலாம் இடங்களைப் பெற்றுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

மேலும், "சிறுவர் கதை நூல்" எழுதும் போட்டியிலும் (தரம் 4, 5) முதலாம் இடம் இந்தப் பாடசாலைக்கே கிடைத்துள்ளது.

போட்டிகளில் வென்று பாடசாலைக்கு புகழ் சேர்த்த மாணவியரின் விபரங்கள் கீழே தரப்படுகின்றன.

அபிநயப் பாடல்

தரம் 1           M.H. மரியம்                     முதலாம் இடம்
தரம் 2           M.N.F. ஜுமாலா              மூன்றாம் இடம்
தரம் 3           M.I. சுஹா                         முதலாம் இடம்
தரம் 3           M.I. நவால்                        இரண்டாம் இடம்
தரம் 4           M.U.F. முஷ்பா                முதலாம் இடம்
தரம் 5           M.N.F. ஆசிகா                  இரண்டாம் இடம்

பேச்சு
தரம் 3           M.I.F. இபாதா                    இரண்டாம் இடம்
தரம் 4           M.F. ஹுமைதா               மூன்றாம் இடம்
தரம் 5           M.F.F. பஸ்ரா                     இரண்டாம் இடம்

சித்திரம்
தரம் 1           M.H. ஹிஜா மரியம்        முதலாம் இடம்

உறுப்பெழுத்து
தரம் 1           K.R. ஸைனப்                     முதலாம் இடம்
தரம் 3           M.A.F. அம்னா                   முதலாம் இடம்
தரம் 5           S.F. சிம்ஹா                       இரண்டாம் இடம்

சொல்வதெழுதல்
தரம் 1           M.M.F. அப்ரா                         முதலாம் இடம்
தரம் 2           A.W.S. சுமையா                     முதலாம் இடம்
தரம் 3           M.A. ஆயிஷா அமானி       முதலாம் இடம்
தரம் 3           M.H. யும்னா                            இரண்டாம் இடம்
தரம் 4           M.M.F. முப்லா                       முதலாம் இடம்
தரம் 5           A.A. சப்ரா                                 முதலாம் இடம்

ஆக்கம் - எழுத்து
தரம் 2           M.R.F. ரைஹானா               இரண்டாம் இடம்
தரம் 3           M.R. ரீமா ஹானி                 முதலாம் இடம்
தரம் 4           M.N. தஃபானி                          முதலாம் இடம்
தரம் 4           M.A. அன்ஸரா                       மூன்றாம் இடம்
தரம் 5           M.I. மாஸினா                         மூன்றாம் இடம்

மனக்கணிதம் - கூட்டல்
தரம் 3           K.F. ஸஹ்ரா                          முதலாம் இடம்
தரம் 4           M.F.F. பஸீஹா                     இரண்டாம் இடம்
தரம் 5           M.A.F. பஹ்ஜத்                      முதலாம் இடம்

மனக்கணிதம் - கழித்தல்
தரம் 3           M.I.F. அகீலா                          முதலாம் இடம்
தரம் 4           M.M.F. அபீபா                         மூன்றாம் இடம்
தரம் 5           B.H.Z. ஹிஷ்மா                     இரண்டாம் இடம்

மனக்கணிதம் - பெருக்கல்
தரம் 5           M.A.F. அஸ்பா                      முதலாம் இடம்

மனக்கணிதம் - வகுத்தல்
தரம் 5           A. இஸ்கா                                இரண்டாம் இடம்

 குறிப்பு: தகவல்களை வழங்கியமைக்காக முஸ்லிம் பாலிகா வித்தியாலய அதிபர் புஹாரி உடயார் அவர்களுக்கு எமது நன்றிகள்.

கஃபாவின் கூரையில் ஒரு வானவர் ...?..!!

புனித கஃபாவின் கூரையில் ஒரு வானவர் வந்து அமர்ந்துள்ளதாக சித்தரிக்கும் ஒரு வீடியோ இணையத்தில் உலாவுகிறது. இந்த வீடியோ எந்தளவு தூரம் நம்பகமானது என்பது எங்களுக்கும் தெரியாது. பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வீடியோவைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

நன்றி. Saifudeen

திங்கள், 20 செப்டம்பர், 2010

சாதாரண தடிமன் சிறுவர்களின் உடற் பருமனை அதிகரிக்கும். ஓர் ஆய்வு.

சிறுவர்களின் அளவுக்கதிகமான உடற் பருமனுக்கு சாதாரண தடிமனும் ஒரு காரணமாக அமையலாம் என புதிய ஆய்வொன்று கூறுகிறது. சாதாரண எடையுடன் கூடிய சிறுவர்களை விட, எடை கூடிய சிறுவர்களின் உடம்பு வைரஸ் தாக்கத்துக்குட்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சாதாரண தடிமன் மற்றும் கண் நோவுகளுக்குக் காரணமான AD36 எனும் வைரஸின் பாதிப்புக்கு உள்ளான சிறுவர்களை விட, ஏனைய சாதாரண சிறுவர்கள், சராசரியாக 22 கிலோ எடை குறைவானவர்களாக இருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

அதே நேரம் வேறு சில வைத்திய நிபுணர்கள், "குறித்த வைரஸ் பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் உடற்பருமன் அதிகரிக்கும் என்பதை, இந்த ஆய்வு உறுதி செய்யவில்லை; மாறாக, உடற் பருமன் கூடிய சிறுவர்களை, இந்த வைரஸ் இலகுவில் தாக்கும்" என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

'கபாலா'வின் வீடமைப்பு உதவி


'கபாலா' நிறுவனத்தின் உதவியுடன் எமது ஊரில் கட்டப்பட்ட நான்காவது வீடு இது.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

பாலிகா வித்தியாலய புதிய கட்டடம் பூர்த்தியடையும் தறுவாயில்.


கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின், புதிதாக நிருமாணிக்கப்பட்டு வரும், வகுப்பறை மற்றும் தொழுகையறை என்பவற்றைக் கொண்ட இரண்டு மாடிக் கட்டடம் பூர்த்தியடையும் தறுவாயில் உள்ளது.

இதன் திறப்பு விழாவை அடுத்த மாதத்துக்குள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சிறிய வீடு கையளிப்பு! MLSC சாதனை!!

பல பரோபகாரிகளின் உதவியுடன், வீடற்ற ஒருவருக்கு, சிறிய வீடொன்றைக் கட்டிக்கொடுத்து MUSLIM LADIES STUDY CIRCLE சாதனை படைத்துள்ளது. 11x16 அளவிலான இந்த வீடு இன்று மாலை உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

ஓகொடபொல A to Z கல்வி நிலையத்துக்கு அருகில் வசிக்கும் ஜனாப் நிஸார் அவர்களின் வீடு, கடந்த பல மாதங்களாகவே பாதுகாப்பற்ற ஒரு நிலையில், 'எப்போது உடைந்து விழுமோ?' என்னும் தறுவாயில் இருந்தது. சில நாட்களுக்கு முன் அது உடைந்து விழுந்ததில், ஜனாப் நிஸார் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இக்கட்டான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார். இவரது துயரம் பற்றிய செய்தி MUSLIM LADIES STUDY CIRCLE இற்கு அறிவிக்கப்பட்டு, உதவி கோரப்பட்டிருந்தது.

நிலைமையின் கோரத்தன்மையை அறிந்த MUSLIM LADIES STUDY CIRCLE, ஜனாப் பயாஸ் ஹாஜியாரின் தலைமையில் இந்தப் பணியில் இறங்கியது. உடுகொட யூஸுப் ஹாஜியாரின் கணிசமான பங்களிப்புடன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இடையில் முஜீப் மௌலவியின் முயற்சியில் பெறப்பட்ட கணிசமான ஒரு தொகை உட்பட எமது ஊர்வாசிகளினதும் உதவியுடன் இந்தப்பணி பூர்த்தியடைந்தது.

இதே வீட்டாருக்காக ஏற்கனவே ஒரு மலசல கூடம் MUSLIM LADIES STUDY CIRCLE ஆல் கட்டிக் கொடுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

"பாகிஸ்தான் வெள்ளம்: சொல்லி முடியாத துயரம்!" நிவாரணக்குழு கவலை.

பாகிஸ்தான் வெள்ள நிவாரண உதவிக்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று, கடந்த 05.09.2010 இல் பாகிஸ்தான் பயணமான ஐந்து பேர்களடங்கிய வைத்தியக் குழு நேற்று முன் தினம் நாடு திரும்பியது. இரவு சுமார் 10:30 மணியளவில் கட்டுனாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்தக் குழுவில், எமது மண்ணின் மைந்தர்களுள் ஒருவரான டொக்டர் பாயிக்கும் ஒருவர். விமான நிலையத்தில் வந்து இறங்கியவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அழைத்துச் சென்றனர்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் துயர்மிகு நிலைமைகளை நேரடியாகக் கண்டவர்கள் இவர்கள். பாகிஸ்தான் மக்களின் நிலவரம் பற்றி இவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் அனைவரும் ஏகோபித்து சொன்ன விடயம், "சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற பாகுபாடின்றி பசியாலும் நோய்களாலும் கண் முன்னாலேயே மக்கள் இறக்கிறார்கள். நாம் அங்கு போய் அவர்களுக்கு செய்த சேவை மிக மிகச் சொற்பமே. அவர்களுக்காக நம் நாட்டு முஸ்லிமகள் அனைவருமே உதவ முன்வர வேண்டும். எமது உலகளாவிய சகோதரத்துவத்தைக் காட்ட இதைத் தவிர வேறு சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கும்" என்பதுதான்.

இந்த ஐவர் அடங்கிய குழுவின் சேவைகள் பற்றி, பொதுவாக பாகிஸ்தானின் எல்லா மீடியா சேவைகளும் சிலாகித்துக் கூறியுள்ள அதே வேளை, அல் ஜஸீரா உலக சேவையும், அவர்களது சேவைகளப் பாராட்டி, தமது செய்தியில் அறிக்கை இட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சனி, 18 செப்டம்பர், 2010

டெங்கு நோய்: பாதுகாத்தல் நம் ஈமானியக் கடமை!

இலங்கையில் இவ்வருடத்தில் இன்றைய தினம் வரை 218 பேர் டெங்கு நோயினால் மரணமடைந்தும் மேலும் 30712 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் உள்ளதாக டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எமது ஊர் மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்த 369/A கஹட்டோவிட்ட பிரிவைச் சேர்ந்த கிராம சேவை அதிகாரி கூறினார்.

கடந்த சில தினங்களாக,  டெங்கு தடுப்பு பிரிவின் சுற்றுப்புறச் சூழலை அவதானிக்கும் குழுவினர், எமது ஊரில் தேடுதல் நடத்தியது பற்றிய செய்திகள் ஏற்கனவே எமது சகோதர தளங்களில் வெளியாகியிருந்தன. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே இந்த தகவலை குறித்த அதிகாரி தெரிவித்திருந்தார். சுற்றாடலை சுத்தமாக பேணத்தவறும் நபர்களுக்கு எதிராக, பொது சுகாதார சேவை அதிகாரி(PHI)யுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுத்தம் ஈமானில் பாதி என்கிறது நமது மார்க்கம். எனவே, சுத்தம் பேணாதோர் ஈமானில் பாதியை இழந்தோராவர். சுத்தம் பேணி, ஈமானையும் பலப்படுத்துவோம்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம்! கடவுளுக்கு.....................?........!!

அமெரிக்க மற்றும் சர்வதேச மனித உரிமை சாசனத்தின் படியும் கருத்துச் சுதந்திரத்தின் படியும், குர்ஆன் எரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என ஒபாமா உட்பட அதிகாரிகள்  கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால், குர்ஆனும் இறைவனுடைய வார்த்தைதான். அந்தக் கருத்துக்கும் அதே நியதிகளின்படி சுதந்திரம் இருக்கத்தானே வேண்டும். எனவே, குர் ஆனை எரிப்பதும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதும் உரிமை மீறலும் அல்லவா? அப்படியிருக்க, குர் ஆன் எரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் அமெரிக்கா தன்னை மறைக்க முயல்வது கபடத்தனமானது. அத்துடன், 'இந்த சாசனகளின் மூலம் வழங்கப்படுகின்ற சுதந்திரம், வேறு ஒரு நபருக்கோ குழுவுக்கோ எதிராக செயல்பட அனுமதிக்காது' என்ற மனித உரிமையையும் அமெரிக்கா தனக்கு சார்பாக மறைக்க முயல்கிறது. எனவே, 'கருத்துச் சுதந்திரத்தை மதித்தல்' என்ற அமெரிக்க உளரல் போலியானது! நியாயமற்றது!!

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

எமது பிரதான வீதி அகலமாகப் போகிறது!?

 

எமது ஊரின் பிரதான வீதியை அகலமாக்கி புனரமைப்பதற்கான ஒரு முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் அத்தனகல்ல பிரதேச சபை என்பன பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. எமது பிரதான வீதியை சுமார் 30 அடி வரை அகலமாக்குவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீதியின் இரு மருங்கிலும் அமைந்துள்ள வீடுகள், கடைகள் மற்றும் காணிகளிலிருந்து தேவையான அளவு இந்தப்பணிக்காக பெறப்பட இருக்கிறது.

வீதி அகலமாக்கும் பணிக்கு ஆதரவு தெரிவித்து, எமது பிரதான வீதிக்கு அருகில் வசிக்கும் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் தமது கையொப்பங்களை வழங்கியுள்ளனர். அதே நேரம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர், கையொப்பமிட சற்று தயக்கம் காட்டுவதாகவும் தெரிய வருகிறது.

இது எமது ஊர்; எமது பிரதான வீதி. காலத்துக்கு ஏற்றதாக இருந்தால்தான் ஊரை அபிவிருத்தி அடையச்செய்யலாம்.
அப்போதுதான் எமது வாழ்க்கைத்தரமும் உயரும். எனவே ஊரின் முன்னேற்றம் கருதி தியாகங்கள் செய்யப்பட வேண்டும். அத்துடன் இதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தியாகங்கள் அனைத்தும் 'ஸதகதுல் ஜாரிய்யா' வுமாகும்.  

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

'' நன் ஸ்டிக்'' பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பேராபத்து !

'' நன் ஸ்டிக்'' பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பேராபத்து ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

உணவில் அதிக எண்ணெய் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் நன்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கின்றனர். இந்த பாத்திரங்களில் சமைக்க குறைந்த அளவு எண்ணெய் தான் தேவைப்படும். குறிப்பாக தயாரிக்கப்படும் உணவு பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது. இது தான் நன்ஸ்டிக்கின் சிறப்பு அம்சம்.

ஆனால், அதிக எண்ணெய் பயன்பாட்டால் கொழுப்புச்சத்து அதிகரிக்கிறது. நன்ஸ்டிக்கை பயன்படுத்தினால் கொழுப்புச் சத்தைக் குறைக்கலாம் என்று நினைப்பது தவறாகும். இந்த தகவலை மேற்கு வர்ஜினீயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

கொழுப்புச் சத்தைக் குறைக்க நன்ஸ்டிக்கை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது மாறாக குழந்தைகளின் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

உணவுப் பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் உணவின் கொழுப்புச்சத்தை அதிகரிக்கின்றன. இதில் தயாரிக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் கொழுப்புச்சத்தும் அதிகரிக்கிறது. இவற்றால் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.

நன்ஸ்டிக் பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்க பூசப்படும் பெர்புலோரோ அல்சைல் தான் கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பேசாமல் நன் ஸ்டிக் 'தாவா'க்களுக்கு 'டாடா' சொல்வதே 'பாப்பாக்களுக்கு' நல்லது!

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சி?!

கொழும்பு: பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுவதாக புனே குண்டுவெடிப்பு  வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி கூறியுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுதவறானது, இலங்கையில் யாருக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை என்று இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரான கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.

புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் 29 வயதான மிர்ஸா ஹிமாயத் பேக். இவர்தான் இந்த சதித் திட்டத்தின் முக்கிய காரண கர்த்தா. இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், லஷ்கர் போராளிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை கோத்தபயா மறுத்துள்ளார். இதுகுறித்து கோத்தபயா கூறுகையில், இலங்கையில் தற்போது எந்த தீவரவாத இயக்கமும் இல்லை, தீவிரவாதிகளும் இல்லை. யாருக்கும் இங்கு எந்தப் பயிற்சியும் கொடுக்கப்படவும் இல்லை. பயிற்சி முகாம்களும் நடத்தப்படவில்லை.

இலங்கை தீவிரவாதத்திலிருந்து விடுபட்டு விட்டது. இங்கு தீவிரவாதிகள்  நடமாட இடமே இல்லை, வாய்ப்பும் இல்லை என்றார் கோத்தபயா.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தொழுகையில் 200 க்கு மேற்பட்ட கருத்து வேறுபடும் மஸ்அலாக்கள்

தொழுகையில், தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரையுள்ள அசைவுகளின் போது, சுமார் 200 க்கு மேற்பட்ட, கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கக்கூடிய மஸ்அலாக்கள் இருப்பதாக மௌலவி முர்ஷித் முப்தி கூறினார். இன்று, 10.09.2010, நூர் பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் குத்பாவிலேயே இந்த கருத்து முன் வைக்கப்பட்டது.
மௌலவி முர்ஷித் தமது உரையில், மூன்று முக்கியமான கருத்துக்களை மக்கள் முன் வைத்தார்.
  1. ஒவ்வொரு முஸ்லிமாலும், நோன்பு காலத்தில் முக்கியத்துவம் கொடுத்து செய்யப்பட்ட அமல்கள், நோன்பு முடிந்த பின்பும் அவ்வாறே தொடர வேண்டும். இதனைத்தான் அல்லாஹ் விரும்புகிறான். ஒருவனது நோன்புடைய கிரியைகள் கபூல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கு இது பிரதான அடையாளமாகும். யாருடைய அமல்கள் நோன்பு காலத்துடன் நின்று விடுகிறதோ, அவரது நோன்பு கால அமல்கள் அல்லாஹ்விடத்தில் மதிப்புப் பெறவில்லை என்பதை இதிலிருந்து புரியலாம்.
  2.  வெள்ளிக் கிழமை நாட்களில் பெருநாள் வந்தால், பெருநாள் குத்பாவும் ஜும்ஆ குத்பாவும் பள்ளிவாசலில் கட்டாயம் நடத்தப் படவேண்டும். ஆனால், ஏதாவது  ஒரு குத்பாவில் கலந்து கொள்ளாமலிருக்க சிலர் அனுமதிக்கப்பட முடியும். பெருநாளுடைய தினத்தின் முக்கிய அமல்களுல் ஒன்றுதான் உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்வது. பள்ளிவாசலுக்கு அதிக தூரத்தின் காரணமாக, இரண்டு குத்பாக்களிலும் கலந்து கொள்வதால், யாருக்கு மேற்சொன்ன அமல் விடுபடுகிறதோ, அவருக்கே இந்த அனுமதி வழங்கப்பட முடியும்.
  3. ஒரு யுத்தத்தை விட பித்னா கொடுமையானது. இந்த பித்னாவுக்கு வழி வகுப்பதுதான் கருத்து வேறுபாடுகளின் போது விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வது. தொழுகையில், தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரையுள்ள அசைவுகளின் போது, சுமார் 200 க்கு மேற்பட்ட, கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கக்கூடிய மஸ்அலாக்கள் இருக்கின்றன. இமாம்கள் யாரும் இவற்றை வைத்து சண்டையிட்டுக் கொள்ளவில்லை. மாறாக, இது இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையைக் காட்டுவதாகவே எடுத்துக் கொண்டார்கள்.
 காலை 8:25 மணியளவில் ஆரம்பித்த குத்பா 9:00 மணியளவில் நிறைவு பெற்றது.

ஸார லங்கா பள்ளிவாசலின் புதிய கட்டடம் திறந்து வைப்பு.

ஸார லங்கா பள்ளிவாசலின், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று பெருநாள் தொழுகைக்கு முன் திறந்து வைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தைப் பார்வையிடுவதற்கு, இதற்கான பண உதவிகளை வழங்கிய அரேபியாவைச் சேர்ந்த கொடை வள்ளல் வருகை தந்திருந்தார். கட்டட திறப்பு வைபவத்தின் பின்னர், பள்ளிவாசல் இமாம் மௌலவி ரிபாய் அவர்களின் தலைமையில் பெருநாள் தொழுகையும் குத்பாவும் நடாத்தப் பட்டன.

கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தில் சில குறைபாடுகளை, வருகை தந்த பரோபகாரி சுட்டிக் காட்டியதுடன், பள்ளிவாசலுக்கு அருகில் பாலர் பாடசாலை ஒன்றை நிர்மாணிக்க உதவுதாகவும் வாக்களித்துள்ளார்.

இந்த பரோபகாரிக்கு அல்லாஹ் மென்மேலும் நிஃமத்துக்களை அள்ளி வழங்குவானாக.

ஈத் முபாரக்!

 அனைவருக்கும் பொதுவாக, நம் நாட்டு முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே தினத்தில் மலர்ந்திருக்கும் இன்றைய 'ஈதுல் ஃபித்ர்', நம் அனைவர் மத்தியிலும் ஒற்றுமையையும் சக வாழ்வையும் ஏற்படுத்த வழி வகுக்க வேண்டுமென பளிச்! பிரார்த்திக்கிறது.

ஈத் முபாரக்!

வியாழன், 9 செப்டம்பர், 2010

நோ‌ய்களு‌க்கு‌ வை‌த்‌திய‌ம்

தாமரை இதழ்களை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் பொடியைத் தேன்விட்டு குழப்பி 2 வேளை சாப்பிட்டு வர, இருதயம் பலப்படும். இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் சீராக அனுப்பும்.

செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர உடல் சூடு தணியும்.

தாமரை விதைகள் நன்றாகக் காய்ந்ததாக ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பாலை மட்டும் குடித்துவர, உடல் குளிர்ச்சி அடைந்து மூத்திரம் வெள்ளையாகப் பிரிந்து போகும்.

தாமரை விதையை 1 கிராம் எடுத்து அதை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்துவர உடல் சூடு தணிந்து தாது வளர்ச்சி அடையும்.

கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர, வீரிய விருத்தியும், தேக பலமும் உண்டாகும். (குட்ட வியாதி உள்ளவர்களுக்கு இது ஆகாது.)

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

குர்ஆன் எரிப்பு போராட்டம்: வத்திக்கான் எதிர்ப்பு

அமெரிக்க தேவாலயம் அறிவித்துள்ள குர்ஆன் எரிப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வத்திக்கான், இது இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துகிற செயல் என்று கூறியுள்ளது.

நியூயார்க் இரட்டைக் கோபுரத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நடத்தப்போவதாக அறிவித்த குர்ஆன் எரிப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று அமெரிக்காவின் புளோரிடா தேவாலயம் அறிவித்துள்ளது.

இத்தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதமே வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி நெருங்கி வருவதால், குர்ஆன் எரிப்பு போராட்டத்தை கைவிடுமாறு அமெரிக்க அரசு தரப்பிலிருந்து அத்தேவாலயத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  புளோரிடா மாகாண அரசின் அமைச்சராகவும் இருக்கும் பாஸ்டர் ஜோன்ஸ், திட்டமிட்டபடி குர்ஆன் எரிப்பு போராட்டம் நடந்தே தீரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க தேவாலயத்தின் இந்த அறிவிப்புக்கு வத்திக்கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வத்திக்கான் விடுத்துள்ள அறிக்கையில், குர்ஆன் எரிப்பு இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை மூட்டிவிடும் என்றும், இஸ்லாமியர்களுடனான சுமூக உறவை பேணுவதில் வத்திக்கானுக்கும் பொறுப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு மதத்திற்கும் அதன் புனித நூல்களையும், இடங்களையும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சின்னங்களையும் மதிக்கும் உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புதன், 8 செப்டம்பர், 2010

நீங்களும் மூவி செய்யலாம்


உங்களுக்கு கணினி கீபோர்டில் தட்டத்தெரிந்தால் போதும். உங்களால் ஒரு கார்டூன் மூவியையே உருவாக்க முடியும் என்கின்றது இந்த தளம் xtranormal.com. IF YOU CAN TYPE,YOU CAN MAKE MOVIES என்பது தான் அவர்கள் கோஷம். TEXT-TO-MOVIE என்கின்றார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள் இனி ஓடுபடங்களை எளிதாக உருவாக்கி யூடியூபில் ஏற்றி மகிழலாம். அதிகம் பேர் பார்வையிட்டால் யூடியூப் வேறு உங்களுக்கு காசு கொடுக்கின்றேன் என்கின்றது பின்னே எதற்கு வெயிட்டிங். ஒரு நிமிடம். உங்கள் வேலை மட்டும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ளவும். இப்படித்தான் பெஸ்ட்பை அங்காடியில் வேலை பார்த்த ஒரு நபர் iPhone4 vs HTC Evo என்ற கீழ்கண்ட வீடியோவை உருவாக்கி யூடியூபில் வெளியிட இரண்டே வாரத்தில் சூப்பர் ஹிட்டாக 3,847,381 பேர் பார்வையிட்டிருக்கின்றார்கள். ஏதோ கடுப்பில் பெஸ்ட்பை அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டது.வாழ்க ஜனநாயகம்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இலங்கை கிரிக்கெட் - ஆட்ட நிர்ணய சூதாட்ட சர்ச்சை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதும், ஆட்ட நிர்ணய சூதாட்ட சர்ச்சை திரும்பியுள்ளது. அண்மையில் பாகிஸ்த்தானில் மூவர் ஸ்பார்ட் பிக்சிங் சூதாட்டம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டதால் ஐசிசி அவர்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மும்பையின் சூதாட்டக்காரர்கள் சிலர் எம்மை மேட்ச் பிக்ஸிங்கிற்காக அழைத்தது வங்கதேசம், அஸ்திரேலியா என்பனவும் பரபரப்பு புகார் கொடுத்தன.

இந்நிலையில் கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற டுவெண்டி20 உலக கிண்ண போட்டிகளின் போது, இலங்கை அணி வீரர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவு கூர்ந்து கவனித்திருக்கிறது.

சட்டவிரோத சூதாட்ட முகவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருடன் இரவு நேரத்தில் அதிக நேரம் பழகிவந்ததை அடுத்து தமக்கு சந்தேகம் ஏற்பட்டதாக அப்பிரிவு முறையிட்டுள்ளதென த கார்டியன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கிரிக்கெட் சபை ஊழலுக்கு எதிரான பிரிவினரால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்ககாரவிடம் தெரிவிக்கப்பட்டது. குறித்த வீரர் மீது உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவும் இட்டது.

எனினும், இவ்விசாரணையில் முன்னேற்றமில்லை என ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹாருன் லோகார்ட் இவ்விடயத்தில் தனது பொதுவான ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Maid could be lying says top doctor


2010-09-06 15:23:58

By Leon Berenger

A top academic today urged the authorities to make a full evaluation on the health condition of the Sri Lankan maid who was allegedly tortured by her Saudi employer before engaging on a confrontational course with Riyadh as it could be harmful for the future interests of the country.

Professor Susirith Mendis-Vice Chancellor of the Ruhunu University said the maid- L. K. Dayawathie could possibly be suffering from the ‘Munchausen’s Syndrome’ and had self-inserted the nails into her body.

“However, this is only an assumption, but I would strongly advise for a thorough medical evaluation of the victim before confronting Riyadh in any manner,” he said.

He added that the medical investigations carried out on the maid to date were in adequate to come to any conclusion and therefore the matter should be investigated further.

“It is also possible that she may have been tortured in some other manner, and had pierced her self with nails out of anger and sheer frustration.

“Any thing could have taken place, and if we do not act wisely there could be adverse results, which could even lead to the loss of jobs in Saudi Arabia owing to the fear psychosis that has been created by all this,” Professor Mendis said.

The maid has repeatedly claimed that her Saudi employer had inserted some 27 nails and pins into her body during her four months of employment in that country prompting the matter to be taken up at the highest diplomatic levels between the two countries.

The Saudi authorities have already denied the allegations. 

Thanks to Online Times

துர்ப்பாக்கியம் அடைவோர் யார்?

யாருடைய தௌபா அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப் படவில்லையோ, அவர்களே மனிதர்களுள் மிகவும் துர்ப்பாக்கியசாலிகள். இந்த துர்ப்பாக்கியம் நீங்குவதற்காகவே இறைவனால் வழங்கப்பட்டதுதான் ரமழான். அதிலும் மிக உன்னதமான சந்தர்ப்பம்தான் புனித லைலதுல் கத்ர். மனிதனைப் புனிதனாக்குவதற்காகவே வருகின்ற இந்தப் புனித இரவிலும் மன்னிப்புப் பெறாதவனின் நிலையை என்னவென்று சொல்வது?

எத்தனையோ கோடானுகோடி மக்களின் தௌபா ஏற்றுக்கொள்ளப்படும் இந்த இரவில், நான்கு பிரிவினரின் தௌபாவை இறைவன் ஏற்பதில்லை.
  • 1. மது அருந்துபவன்
  • 2. பெற்றோருக்கு நோவினை செய்பவன்
  • 3. இனபந்துக்களை துண்டித்து வாழ்பவன்
  • 4. பொறாமை கொண்டு சச்சரவு செய்பவன்
இந்த நான்கு பிரிவினரிலும் ,அல்லது இவற்றுள் ஏதாவது ஒன்றில் அடங்குபவர்களா நாம்? அவ்வாறெனின், நம்மைப்போல் துர்ப்பாக்கியசாலிகள் யாருமே இல்லை!

நஊதுபில்லாஹி மின்ஹா!

வியாழன், 2 செப்டம்பர், 2010

எல்லாம் நன்மைக்கே

ஒரு அரசவையிலிருந்த பிரதம மந்திரி மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். எவ்விதமான நன்மையில் முடியாத காரியங்கள் நடைபெற்றாலும், மிகவும் சுலபமாக 'எல்லாம் நன்மைக்கே' என்று விட்டு விடுவார். இவரது இந்த நடவடிக்கை பலருக்கும் எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தது.

ஒரு நாள் அரசர், தமது பிரதம மந்திரியுடன், தமது குதிரையில் சவாரி செய்த வண்ணம், காட்டுப் பகுதியில் உலாவச் சென்றார். பிரதம மந்திரி அவருக்குப் பின்னால் தமது குதிரையில் சென்று கொண்டிருந்தார். சிறிது நேர பயணத்தின் பின் அரசரின் குதிரை நகர மறுத்தது. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் குதிரை நகரவேயில்லை. அரசருக்குக் கோபம் வந்து விட்டது.

"பாருங்கள் மந்திரியாரே! குதிரை இதைவிட சிறிது தூரம் கூட நகர்வதாயில்லையே. இப்போது என்ன செய்வது?" என்று சற்று ஆவேசத்துடன் அரசர் கேட்டார்.

"இதென்ன பெரிய விடயம் அரசே, எல்லாம் நன்மைக்கே. விட்டு விடுங்கள். நாம் நடந்தே செல்லலாம்." என்று யோசனை கூறினார் மந்திரி.

இதைக் கேட்ட அரசருக்கு எரிச்சல் ஏற்பட்டாலும் அதனை அவர் அடக்கிக் கொண்டு உடன்பட்டார். பின்னர் இருவரும் தத்தமது குதிரைகளைப் பக்கத்திலிருந்த மரங்களில் கட்டி வைத்து விட்டு நடையில் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

சிறிது தூரம் சென்ற பின், திடீரென

"ஆ........ ஐயோ ....................  அம்மா" என்று அலறினார் அரசர். பிரதம மந்திரி அரசரின் பக்கமாக ஓடிச் சென்றார். காடுகளில் நடை பயின்று பழகியவரா அரசர்? அவரின் பாதம், வீதியில் கிடந்த பெரிய கல்லொன்றில் மோதியதில் விரல்களில் காயம் ஏற்பட்டிருந்தது. விரல்களிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. "ஆ...... ஊ....... இரத்தம் வழிகிறதே....வலிக்கிறதே....." என்று கத்திய வண்ணமிருந்தார் அரசர்.

'அரசரின் காலில் வழியும் இரத்தத்தை நிறுத்துவதற்கு ஏதாவது செய்யலாமா' என்ற யோசனையுடன் அரசரை நோக்கிக் குனிந்த மந்திரி, " அரசே, பதற வேண்டாம், எல்லாம் நன்மைக்கே நடக்கின்றன, சற்று பொறுமையாக இருங்கள்" என ஆறுதல் கூறலானார்.

இதைக் கேட்ட அரசருக்கு கோபம் பன்மடங்காகியது. கோபத்தை சற்று அடக்கிக் கொண்டு, ' இரு, உன்னுடைய இந்தப் பேச்சுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன்' என்று நினைத்தவராக மந்திரியாரின் தோளில் தட்டி, "சரி, வருங்கள். நாம் எமது பயணத்தைத் தொடரலாம்" என்றார். இப்போது, மந்திரியை முன்னே செல்ல விட்டு, சற்று பின்னால் நடந்தார் அரசர்.

சிறிது தூரம் செல்ல எதிரில் ஒரு பாழுங்கிணறு தென்பட்டது. அதன் பக்கத்தில் வந்தவுடன் 'தொலைந்து போ' என்று கூறியவராக அரசர் மந்திரியை கிணற்றில் தள்ளி விட்டார். பின்னர் மந்திரியை நோக்கி, "இப்போது எப்படி இருக்கிறது? இதுவும் நன்மைக்குத்தானா?" என்று குத்தலாகக் கேட்டார். அப்போதும் பொறுமையாக இருந்த மந்திரி, "இதுவும் நன்மைக்குத்தான், அரசே" என்று உறுதியுடன் கூறினார். இதனைக் கேட்டு மேலும் சினமடந்த அரசன், "நீ எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. உன்னைத் திருத்தவே முடியாது" என்று கூறியவராக தனது பயணத்தை தனியே தொடர்ந்தார்.

சற்று பயமாக இருந்தாலும், மந்திரியுடன் இருந்த கோபத்தில் வேறு எந்த யோசனையும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தார். திடீரென, "ஏய், நில்!" என்ற ஒரு பயங்கரமான குரல் கேட்டு அரசர் திகிலடைந்து, சத்தம் வந்த திசையைப் பார்த்தார். அங்கே, மாமிசம் உண்ணும் அரக்கன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். 'ஐயோ, தனியாக வந்து மாட்டிக் கொண்டோமே' என்று செய்வதறியாது திகைத்து நின்றார் அரசர்.

"ஐயோ, என்னை ஒன்றும் செய்து விடாதே. நான் தான் இந்த நாட்டு அரசன். உனக்குத் தேவையான மாமிச உணவுகளை நான் அனுப்பி வைக்கிறேன். என்னை விட்டு விடு" என்று அரசர் அரக்கனிடம் கெஞ்சினார், பயத்துடன் நடுங்கியவாறு.

"ஆகா, நீதான் அரசனா? எனக்கு நல்ல சாப்பாடு கிடைத்திருக்கிறது. இப்போது நான் உன்னை தின்னப் போகிறேன்" என்று கூறிய வண்ணம் அரக்கன் அரசரை நெருங்கினான். அரசர் நடுங்கிய வண்ணம் இருந்தார். அரக்கன் அரசரை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்தான். "சீச்சீ!, உன்னை நான் சாப்பிட முடியாது. உன் காலில் இரத்தம் வழிகிறது. சாப்பிட ஆரம்பிக்க முன்னரே இரத்தம் வழியும் பிராணிகளை நான் சாப்பிடுவதில்லை. நீ தப்பினாய், போ!" என்று கூறிய வண்ணம் திரும்பிச் சென்றான் அந்த அரக்கன்.

உயிர் போய், திரும்பி வந்த அதிசய நிலையில் இருந்தார் அரசர். அரக்கனுக்கு உணவாகாமல் தான் தப்பியதற்கான காரணம் காலில் ஏற்பட்ட காயம்தான் என்பதை அரசர் இப்போது உணர்ந்தார். 'இதைத்தான், எல்லாம் நன்மைக்கே என்று நமது மந்திரி சொன்னாரோ? அடப் பாவமே, அவரைப் போய் நான் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டேனே' என்று வருந்தினார். ஓடோடிச் சென்று மந்திரியாரை கிணற்றிலிருந்து மேலே எடுக்க உதவலானார். காட்டிலிருந்து பிடுங்கிய ஒரு கொடியை கம்பமாகப் பாவித்து, மிகவும் சிரமப்பட்டு, மந்திரியாரை கரைப் படித்தினார்.

கரைக்கு வந்த மந்திரி, "மிகவும் சிரமப்பட்டு என்னைக் கரை சேர்த்துள்ளீர்கள். உங்களுக்கு என்ன கைம்மாறு செய்வேனோ தெரியாது, அரசே!" என்று, அரசர் பட்ட சிரமத்துக்காக வருந்தினார்.

"குத்தலாகக் கதைக்க வேண்டாம், மந்திரியாரே. என்னை முதலில் மன்னித்து விடும். எல்லாம் நன்மைக்கே என்ற உமது கொள்கையின் அர்த்தத்தை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்" என்று நடந்த சம்பவத்தைக் கூறலானார் அரசர்.

விபரம் அனைத்தையும் கேட்ட மந்திரி, மகிழ்வுடன், "இப்போதாவது என் மீதிருந்த கோபம் தணிந்ததா?" என்று பக்குவமாகக் கேட்டார்.

"உம் மீது மதிப்புத்தான் இருக்கிறது" என்று கூறிய அரசர், "அது சரி, காலில் காயம் பட்டதால் எனக்கு நேர்ந்த நன்மையைக் கண்டு கொண்டேன். உமது கொள்கைப்படி, பாழுங்கிணற்றில் விழுந்த உமக்கு நேர்ந்த நன்மை என்ன?" என்று ஒரு கேள்வியையும் தொடுத்தார்.

"கிணற்றில் விழாமல் உங்களுடன் வந்திருந்தால், அரக்கன் என்னைத்தான் சாப்பிட்டிருப்பான். ஏனெனில், எனக்குத்தான் காயங்கள் ஏதும் இருக்கவில்லையே! நீங்கள் என்னை பாழுங்கிணற்றில் தள்ளி விட்டதால் நானும் உயிர் தப்பினேன். பாருங்கள் அரசே, தங்களது குதிரை நகர மறுத்தமை, தங்களது காலில் காயம் பட்டமை, நான் பாழுங்கிணற்றில் வீழ்ந்தமை அனைத்துமே நன்மைக்காகத்தான் நடந்திருக்கின்றன" என்று ஒரு குட்டிப் பிரசங்கமே நடத்தி விட்டார் மந்திரி.

"உண்மை, உண்மை. 'எல்லாம் நன்மைக்கே'. மீண்டும் ஒரு அரக்கன் வருமுன் வாருங்கள் நாம் அரண்மனை செல்லலாம்" என்று கூறியவராக தனது குதிரை கட்டப்பட்டிருந்த மரத்தை நோக்கி நடந்தார் அரசர்.

அரசருக்கு தம்மீது ஏற்பட்டுள்ள மதிப்பை எண்ணி உள்ளூர மகிழ்ந்தார் மந்திரி.

புதன், 1 செப்டம்பர், 2010

முல்லா கதை - 02

பெரியாவர் ஒருவர் முல்லாவை சந்தித்தார். " முல்லா, யாராக இருந்தாலும், நீ திறமையாகப் பொய் பேசி, அவர்களை ஏமற்றி விடுவாயாமே, இது உண்மையா?" என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

"ஆமாம், அது உண்மைதான்" என்று பதில் கூறினார் முல்லா.

அதற்கு அந்த முதியவர், " உன் திறமை என்னிடம் செல்லாது. எப்படி வேண்டுமானாலும் முயற்சி செய்து என்னை ஏமாற்று பார்ப்போம்" என்று சவால் விட்டார்.

உடனே முல்லா,"பெரியவரே! உங்களிடம் பேசிக் கொண்டிருக்க இப்போது எனக்கு நேரமில்லை. நம் ஊர் ஏரியில் உள்ள மொத்த நீரையும் வடித்து விட்டார்களாம். பெரிய, பெரிய மீன்கள் ஏராளமாகத் துள்ளுகிறதாம். அவற்றைப் பிடிக்க ஊர் மக்கள் எல்லாம் அங்கே சென்று விட்டார்கள். அவரவர் பிடிக்கின்ற மீன்களை அவரவரே எடுத்துக் கொள்ளலாம் என்று முரசு வேறு அறிவித்து விட்டார்கள். எனவே, நானும் அங்கேதான் போய்க்கொண்டிருக்கிறேன்" என்று பரபரப்புடன் கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் அந்தப் பெரியவர், "ஐயோ! இந்தச் செய்தி எனக்கு முன்னரே தெரியாமல் போய் விட்டதே. உன்னோடு வெட்டிப் பேச்சுப் பேசி நேரத்தை வீணாக்கி விட்டேனே" என்று அலரி அடித்துக் கொண்டு ஏரியை நோக்கி ஓடினார். ஏரியில் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. யாரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கவுமில்லை.

'தாம் முல்லாவால் ஜோராக ஏமற்றப் பட்டுவிட்டோமே' என்பதை பெரியவர் அப்போதுதான் உணர்ந்தார்.

முல்லா கதை - 01

ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் முல்லாவின் வீட்டுக்குள் நுழைந்தான். இதனைக் கண்ட முல்லா வீட்டின் பின் புறமாகச் சென்று மறைந்து கொண்டார். தனக்கு எதிர்ப்பு ஏதும் இல்லாததைக் கண்ட திருடன் முல்லாவின் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் திரட்டி மூட்டையாகக் கட்டிக் கொண்டு வெளியேறினான். முல்லாவும் அவனுக்குத் தெரியாமல் இரகசியமாகப் பின் தொடர்ந்து சென்றார்.

தன் வீட்டுக்குச் சென்ற திருடன் திருடிய பொருட்கள் அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு,முகம், கை, கால்களைக் கழுவுவதற்காக வீட்டின் பின் பக்கம் சென்றான். அங்கே முல்லா, தமது அங்கவஸ்திரத்தை விரித்துப் போட்டு, படுத்துக் கொண்டு, தூங்குவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார். தனது வீட்டில் புதிய ஒரு மனிதர் உறங்குவதைப் பார்த்த திருடன், திடுக்கிட்டு, அவரை எழுப்பி, "நீ யார்?" என்று அதட்டிக் கேட்டான்.

முல்லா மெதுவாக எழுந்து உட்கார்ந்து கொண்டார். "என் பெயர் முல்லா. என் வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் நீ எடுத்துக் கொண்டு இங்கே வந்து விட்டாய். இனி நான் என் வீட்டில் குடியிருந்து என்ன பயன்? எனவே உன் வீட்டுக்கே குடி வந்து விட்டேன்" என்று அமைதியாகக் கூறினார். திருடனுக்கு மறு பேச்சுப் பேச நா எழவில்லை. தான் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் திரட்டி எடுத்துக் கொண்டு, முல்லாவின் வீட்டுக்குப் போய், வைத்து விட்டு வந்து விட்டான்.

பாகிஸ்தானுகு இலங்கையிலிருந்து வெள்ள நிவாரணக்குழு

இருபது மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை அகதிகளாக்கிய பகிஸ்தான் வெள்ளத்தை மறந்திருக்க மாட்டீர்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று 03.09.2010 இல் பாகிஸ்தான் பயணமாகவுள்ளது. அரச அங்கீகாரத்துடன் செல்லவுள்ள இக்குழுவில், எமது ஊரைச் சேர்ந்த யூனானி வைத்தியரான M.S.M. பாயிக் (BUMS) அவர்களும் அங்கம் வகிக்கிறார்.

அல்லலுறும் எமது சகோதரர்களின் துயர் துடைப்பதில் எமது ஊரை பிரதிநிதிப்படுத்தும் அவருக்கு எமது வாழ்த்துக்கள்!